இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் பல
புதிய நட்சத்திரங்களையும் புதிய அனுபவங்களையும் தரக்கூடியவை. இந்தியாவைப்
போல மற்றொரு கிரிக்கெட்
தேசமான பங்களாதேஷில் நடக்கும் இந்தப் போட்டியில் வாண வேடிக்கைகளுக்கும்
கோலாகலங்களுக்கும் நிச்சயம் பஞ்சமிருக்காது.
சர்வதேச அணிகள் அவ்வளவாக டி20 ஆட்டங்களில் ஆர்வம் காட்டாத நிலையில் டி20
உலகக்கோப்பை மட்டும்தான் அதன் இருப்பை உறுதிப்படுத்தி வருகிறது. மிகவும்
சந்தேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட முதல் போட்டியில்
பெரிய நட்சத்திரங்கள் பலர் ஆடவில்லை. ஆனாலும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த
அந்தப் போட்டி நம்பமுடியாத வெற்றியைப் பெற்றது. தோனி கேப்டனாக கோப்பையை
வென்றது, யுவ்ராஜ் அடித்த 6 சிக்ஸர்கள், இந்தியாவும் பாகிஸ்தானும்
இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டது என பல அற்புதமான தருணங்கள் கிடைத்தன.
அதன்பிறகுதான் கிரிக்கெட் உலகம் டி20யின் அருமையைப் புரிந்துகொண்டது.
முக்கியமாக பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். தொடங்க அந்த
உலகக்கோப்பை வெற்றி முக்கியக் காரணமாக அமைந்தது. ஐ.பி.எல்.-ஐத் தொடர்ந்து
பல டி20 லீக் போட்டிகள் உருவாகின. இதனால் டி20 ஆட்டங்களுக்கு மவுசு
ஏற்பட்டன. ஆனால் நேர நெருக்கடியால்
சர்வதேச அணிகளால் அதிக டி20 ஆட்டங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால்
டி20 உலகக் கோப்பைக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கிறது. ஐ.பி.எல்.-க்கு
அடுத்து பரபரப்பான
ஆட்டங்களை இதில்தான் காணமுடியும்.முதல் டி20 உலகக்கோப்பைப் போட்டியை இந்திய அணி வென்றது. 2009 போட்டியை
பாகிஸ்தான் வென்றது. பிறகு 2010ல், இங்கிலாந்து சாம்பியன். (இங்கிலாந்தின்
முதல் உலகக்கோப்பை வெற்றி). 2012ல் நடந்த
உலகக்கோப்பையை மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது. மார்ச் 16 முதல்
பங்களாதேஷ் டி20 உலகக்கோப்பை போட்டித் தொடங்கினாலும் ஆரம்பத்தில் தகுதிச்
சுற்றுப் போட்டிகள்தான் நடைபெறும். இந்தியாவும்
பாகிஸ்தானும் மோதும் மார்ச் 21 லிருந்து தான் உலகக்கோப்பைப் போட்டி
ஆரம்பமாகிறது. இந்திய அணி ஆடும் க்ரூப் 2 பிரிவில் பாகிஸ்தான், மேற்கு
இந்தியத் தீவுகள் அணி, ஆஸ்திரேலியா மற்றும்
தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணி என 5 அணிகள் உள்ளன.
இந்தப் போட்டிக்காக பங்களாதேஷ் அரசாங்கமும் அதன் கிரிக்கெட் வாரியமும்
கிட்டத்தட்ட ரூ. 240 கோடியைச் செலவழித்துள்ளன. மேலும் உலகக்கோப்பைக்காக
தாக்கா நகரை நவீனப்படுத்த ரூ.150 கோடிக்கும் மேலாகச்
செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் தொண்ணூறு சதவிகித மேட்சுகளின்
டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. (குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.39)
ஆசியக் கோப்பையிலேயே பார்த்திருக்கலாம், ரசிகர்கள் எவ்வளவு
உற்சாகமாக ஆட்டத்தைக் கண்டு ரசித்தார்கள்! கிரிக்கெட்டைக் கொண்டாட்ட
வெளியாக மாற்றுவதில் பங்களாதேஷ் ரசிகர்களுக்கு ஈடு இணை இல்லை. இந்திய அணிக்கு ஒரு பெரிய வெற்றி தேவையாக இருக்கிறது. கடந்த 4 மாதங்களாக
இந்திய கிரிக்கெட் அணிக்குச் சோதனையான காலம். தொட்டதெல்லாம் மண்ணாகிறது.
ஆசியக் கோப்பையில்
இறுதிப் போட்டிக்குக் கூடத் தகுதி பெறமுடியவில்லை. போட்டி, பங்களாதேஷில்
நடப்பதால் இந்திய அணிக்குச் சாதகமான சூழ்நிலை. நல்ல மாற்றங்கள் நிகழலாம்.
போன முறை இலங்கையில்
நடந்த போட்டியில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே இந்திய அணி தோற்றது (அதனாலேயே அரை
யிறுதிக்கு செல்லமுடியவில்லை). பாகிஸ்தான் அணி திடீரென்று நல்ல ஃபார்மில்
உள்ளது. முக்கியமாக அஃப்ரிடி ரகளை செய்துகொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியா,
தென் ஆப்பிரிக்க அணிகள் வழக்கம்போல பலமாக உள்ளன. நடப்பு சாம்பியன் மேற்கு
இந்தியத் தீவுகள் அணி
மீண்டுமொருமுறை ஆச்சரியப்படுத்துமா என்று எல்லோரும் ஆவலாக உள்ளார்கள்.
டி20யில் வழக்கமாக நடக்கும் அதிர்ச்சிகளை இந்த முறை நியூசிலாந்தும்
இலங்கையும் செய்ய வாய்ப்புள்ளதா என்று பார்க்க வேண்டும். இங்கிலாந்து,
பங்களாதேஷ் அணிகள்
எதிர்பார்ப்பில்லாமல் போட்டிக்குள் நுழைகின்றன. இப்படி இன்னார்தான்
ஜெயிப்பார் என்று உறுதியாகச் சொல்லமுடியாத ஒரு போட்டி என்பதால் அதுவே
கூடுதல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment