ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள்.
அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார். ‘நான்தான் ஸ்வாமி’ என்று ஹிரண்யகசிபு
சொன்னபோது தன்னைத் தவிர வேறு
ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத்
தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார்.
ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில்
கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார். இப்போது நாம் உத்தரணி
ஜலத்தைப்போல்
கொஞ்சம் சக்தியுடன் இருக்கிறோம். ஸ்வாமி அகண்ட சக்தியுடன் சமுத்திரமாக
இருக்கிறார். அந்தச் சமுத்திரத்திலிருந்துதான் இந்த உத்தரணி ஜலம் வந்தது.
இந்த உத்தரணி
ஜலம், தான் தனி என்கிற அகங்காரத்தைக் கரைத்து சமுத்திரத்தில் கலந்து
சமுத்திரமே ஆகிவிட வேண்டும்.
நாம் ஸ்வாமியாக இல்லா விட்டால், ஸ்வாமியைத் தவிர வேறான ஒன்றாக இருக்க
வேண்டும். அவ்வாறெனில் பரமாத்மாவுக்கு வேறான வஸ்துக்களும் உண்டு
என்றாகிவிடும். அதாவது, பல
வஸ்துக்களில் பரமாத்மாவும் ஒன்று என்றாகிவிடும். அவருடைய சம்பந்தமில்லாமல்
அந்தப் பல வஸ்துக்கள் உண்டாகி இருக்கின்றன என்றாகும். இப்படி இருப்பின்
அவர் பரமாத்மா, ஸ்வாமி என்பதே
பொருந்தாதே. எல்லாமாக ஆன ஒரே சக்தியாக இருக்கிற மட்டும்தானே அவர் ஸ்வாமி.
எல்லாம் அவர் என்னும்போது நாம் மட்டும் வேறாக இருக்க முடியுமா? எனவே,
‘ஸ்வாமியே நாம்’ என்று வெளிப்பார்வைக்கு
அகங்காரமாகப் பேசுகிற அத்வைதிகள், ஸ்வாமியின் மகிமையைக் குறைக்கவில்லை.
மாறாக, ‘ஜீவன் ஸ்வாமி அல்ல; இவன் அல்பன், அவர் மகா பெரிய வஸ்து; இவன் வேறு;
அவர் வேறு’ என்று
அடக்கமாகச் சொல்கிறவர்கள்தான், தாங்கள் அறியாமலே அவரைப் பல சாமான்களில்
ஒன்றாக்கி அவருடைய மகிமையைக் குறைத்து விடுகிறார்கள். அவரே சகலமும் என்றால்
நாமும் அவராகத்தான் இருந்தாக வேண்டும்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment