மலேசியாவில் இருந்து பீஜிங் புறப்பட்ட அந்த மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் 777
விமானம், மனித சமுதாயத்தின் அத்தனை புத்திசாலித்தனத்தையும்
கேள்விக்குள்ளாக்கும் என்று யாரும்
நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்கள். மார்ச் 8ஆம் தேதி, 239 பயணிகளோடு
புறப்பட்ட எம்.ஹெச். 370 விமானம், அடுத்த சில மணி நேரங்களில் காணாமல்
போனது. பன்னிரெண்டு நாள்களாக 26 நாடுகளின் ஒட்டுமொத்த
தேடலுக்குப் பின்னரும் ஒரு துரும்பு தகவலும் கிடைக்கவில்லை என்பதுதான்
மிகப்பெரிய சவால்.
153 சீனர்கள் பயணம் செய்த அந்த விமானத்தைப் பற்றி மலேசியா சரியான
தகவல்களைத் தரவில்லை, பொறுப்போடு நடந்துகொள்ளவில்லை என்று சீனப்
பத்திரிகைகளும்
வலைப்பதிவாளர்களும் குமுறித் தள்ளுகிறார்கள். அந்த விமானத்தில் போலி
பாஸ்போர்ட்டில் இருவர் பயணம் செய்தனர், அவர்களால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டு
இருக்கலாம்
என்று ஒரு கதை சொல்லப்பட்டது. முதன்மை விமானியான சஹாரி அஹமது ஷாவும் துணை
விமானியான ஃபரீக் அப்துல் ஹமீதும் ஏதேனும் சதித் திட்டத்தில் ஈடுபட்டு
இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால்,
உருப்படியான
முன்னேற்றம் ஏற்படவில்லை.
விமானத்தின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டன,
அதனால் இது நிச்சயம் கடத்தலாக இருக்கவே வாய்ப்புண்டு" என்று மலேசிய பிரதமர்
நஜிப் ரசாக் தெரிவிக்க, சந்தேகத்தின் ஊசி பல திசைகளில் திரும்பிக்கொண்டு
இருக்கிறது.
தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் அந்த விமானத்தில் 7 மணி நேரம் வரை
பறக்கப் போதுமான எரிபொருள் இருந்தது என்பது ஏராளமான சாத்தியங்களை
வழங்குகிறது.
கடைசியாக அது பறந்த இடத்தில் இருந்து, தெற்குப் புறமாகத் திரும்பி
ஆஸ்திரேலியா பக்கம் போயிருக்கலாம் என்பது ஒரு ஊகம். வடக்குப் பக்கம்
திரும்பி, இந்தியா, பாகிஸ்தான் தலைமேல் பறந்து மேலே மத்திய ஆசிய
நாடுகளில் தரையிறங்கி இருக்கலாம் என்பது மற்றொரு ஊகம். ஆனால், எந்த ஊகமும்
உறுதியாகவில்லை. விமானம் கடத்தப்பட்டு இருந்தால், இத்தனை நாட்களுக்குள்
அதைச் செய்த ஏதேனும் ஒரு அமைப்பு
பொறுப்பேற்றுக்கொண்டு, டிமாண்டுகளை வைத்திருக்க வாய்ப்புண்டு. அப்படி
எதுவும் நடைபெறவில்லை. அதேபோல், அவ்விமானம் ஏதேனும் ஒரு விமான
நிலையத்தில்தான் தரையிறங்கியிருக்க வேண்டும். அப்படி
தரையிறங்கிய விவரம் எந்த விமான நிலையத்திலும் பதிவாகவில்லை என்பது இன்னும்
சிக்கலைக் கூட்டிக்கொண்டே இருக்கிறது. தரையிறங்கவில்லையா, அல்லது
தரையிறங்கியதைச் சொல்ல மறுக்கிறார்களா?
மலேசிய விமானத்துக்கு என்னதான் ஆகியிருக்க முடியும்?
இணையம் முழுக்க சுவாரசியமான த்ரில்லர் கதை ரேஞ்சுக்கு ஏராளமான ஊகங்கள்
புழங்குகின்றன. அந்தமான் தீவுகளில் 570 தீவுகள் உள்ளன, ஆனால், 36 தீவுகளில்
மட்டுமே மக்கள்
புழக்கம் உண்டு. அதனால், அங்கே ஏதேனும் ஒரு தீவில் மணலில்
தரையிறங்கியிருக்கலாம் என்பது ஒரு ஊகம். அதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும்
முழுமையாக வாய்ப்பில்லாமல் இல்லை என்று அடித்துப்
பேசுகிறவர்களும் உண்டு. இன்னொரு ஊகம், விமானம் கஜகஸ்தானில் தரையிறங்கி
இருக்கலாம் என்பது. பரந்த பாலைவனத்தில் விமானம் தரையிறங்குவதில் சிரமமில்லை
என்று வாதாடுகிறவர்கள் இருக்கிறார்கள்.
விமானம் தெற்குப் பக்கம் திரும்பியிருந்தால், விரிந்த இந்தியப் பெருங்கடல்,
அதன் பின்னர் வரும் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதி. மக்கள் அதிகம் வாழாத
இப்பகுதியில் இறங்குவது சுலபம் என்பது இன்னொரு ஊகம். இவ்விமானத்தில்
153 பேர் சீனர்கள் என்பதால், சீனாவில் உள்ள ஏதேனும் பிரிவினை அமைப்பு,
இதைக் கடத்தியிருக்க வாய்ப்புண்டு. அவர்கள் அவ்விமானத்தை, சீனாவில் உள்ள
மிகப்பெரிய பாலைவனமான தக்லமக்கானில்
தரையிறக்கியிருக்கலாம் என்பது இணையத்தில் புழங்கும் மற்றொரு ஊகம்.
ஒசாமாவையே ஒளித்துவைத்த நாடு என்பதால், பாகிஸ்தான் மீதும் சந்தேகம்
எழாமலில்லை. அதன் வடபகுதியில் எங்கேனும் விமானத்தை ஒளித்து வைத்திருக்கலாம்
என்பது ஒரு ஊகம். ஆனால், பாகிஸ்தான் விமானத்துறையைச்
சேர்ந்தவர்கள் இதை மறுத்துவிட்டார்கள்.
ஊகங்களிலேயே மிக மிக சுவாரசியமானது என்றால், அது இரண்டுதான். போயிங் 777
விமானம், மற்றொரு விமானத்தின் நிழலில் பதுங்கிக் கொண்டு காணாமல்
போயிருக்கலாம் என்று ஒரு
செம கற்பனை ஓடுகிறது. மலேசிய விமானம் கிளம்பிய அதே நேரத்தில்தான் மற்றொரு
சிங்கப்பூர் விமானமும் கிளம்பியதாம். அதனால், மலேசிய விமானம், சிங்கப்பூர்
விமானத்தின்
கீழே அதன் நிழலில் பறந்து சென்றிருந்தால், எந்த ரேடாரிலும் அது தெரிய
வாய்ப்பில்லையாம். ஒரு கட்டம் வரை அப்படிப் பறந்துவிட்டு, பின்னர் வேறொரு
ரூட்டை எடுத்து, கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகியவற்றுக்குப்
போயிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இன்னொரு கற்பனை, வேற்றுகிரகவாசிகள் பற்றியது. வானத்தில் இருந்து வந்த
வேற்றுகிரகவாசிகள், அப்படியே தங்களின் மிகப்பெரிய விமானம் தாங்கி
விண்கலத்தில், போயிங் 777ஐ லபக்கிக்கொண்டு வேற்றுகிரகத்துக்குப்
பறந்துவிட்டார்களாம்!
மலேசிய விமானத்தை வைத்து இணையத்தில் ஏமாற்றல்களும் பெருகிக்கொண்டு
இருக்கின்றன. கர்நாடகத்தைச் சேர்ந்த போலி சாமியார் ஒருவர் விமானத்தைக்
கண்டுபிடித்துவிட்டதாக விட்ட
புருடா, பயங்கர காமெடி. அதேபோல், இதோ விமானம் தரையிறங்கிய படம், வீடியோ
என்று போலி சுட்டிகளும் வளையவந்து கொண்டே இருக்கின்றன. அதைச் சொடுக்கினால்,
உங்கள்
கணினியில் வைரஸ்கள் தொற்றிக்கொள்வது உறுதி.
அமெரிக்காதான் இந்த விமானம் காணாமல் போனதில் அதிகம் பயந்து போயிருக்கிறது.
ரேடார்கள், சாட்டி லைடுகள் ஆகியவற்றின் பார்வையில் இருந்து தப்பித்து, ஒரு
விமானத்தைக் கடத்த
முடியும் என்பதற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கலாம். வருங்காலத்தில்
இதேபோன்று செயல்பட்டு, மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த தீவிரவாதிகள்
முனையலாம் என்று வெள்ளை மாளிகை
அதிகாரிகள் கருதுகிறார்கள்" என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் சொல்கிறது.
விமானம் பற்றி மர்மம் நீடிக்கும்வரை, புதுப்புது கதைகளும் ஊகங்களும் பயங்களும் அதிகரிக்கப் போவது உறுதி.
துளசி
No comments:
Post a Comment