இந்த மாதத்துடன் ‘இணைய வலை’ (www) வெள்ளி விழா கொண்டாடுகிறது, தெரியுமா?
மார்ச் மாதம் 1989-ல்தான் முதன் முதலில் ‘வையவிரிவு வலை’ என்ற 'WWW'
குழந்தை பிறந்தது. இதைக்
கணினி உலகில் செல்லமாக ‘டப் டப் டப்’ என்று கூறுவர் (டபிள்யூவின் சுருக்கம்
டப்). சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் உலக நடப்பை செய்தித்தாளில்,
தொலைக்காட்சியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப்
பார்த்துக் கொண்டிருந்தோம். இன்று உலகின் எந்த மூலையில் நடக்கும்
செய்தியானாலும் அடுத்த விநாடியே நம் கண்முன் வந்து விடுகிறது.
‘உலகமே ஒரு நாடக மேடை’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னதை நிரூபித்துக் காட்டியது
WWW என்றால் அது மிகையாகாது. நாடக மேடையில் நடக்கும் விஷயம் நேரடியாகக்
காண்பவர் கண்களுக்கு விருந்தாவது போல், உலக அரங்கில் நடந்தேறும் விஷயங்கள்,
மக்களின் அனுபவங்கள் அனைத்தும் வலையின் உபயத்தால் நம் கண்முன்னே!இன்று உலக மக்கள் தொகையில் 40% பேர் இணையத்தால் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதாவது சுமார் 300 கோடி மக்கள். இணைய வர்த்தகத்தின் மதிப்பு பல லட்ச
கோடிகளாகும். வளர்ந்த
நாடுகளின் ஜி.டி.பி.யில் (உள்நாட்டு மொத்த உற்பத்தி) 21% இணையத்தின்
பங்களிப்பாகும். இணைய வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை வைத்துப்
பார்க்கையில் இன்றைய தேதியில் இணைய உலகின்
ராஜா என்றால் அது அமெரிக்காதான். இணைய வருமானத்தில் 30% அமெரிக்காவின்
தயவினாலேயே கிடைக்கிறது. 1989-ல் சர் டிம் பெர்னர்ஸ்-லீ என்பவர்தான் வலையை உலகுக்கு
அறிமுகப்படுத்தியவர். பிரவுசர் எனப்படும் இணைய உலாவி ஒன்றை இவரே 1990-ல்
எழுதி முடித்தார். 1993இல் இவர் வேலை செய்த நிறுவனம் CERN தான்,
அதிகாரப்பூர்வமாக
WWW என்ற தொழில்நுட்பத்தை உலகுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது. இணையத்தில்
மீயுரை (http) கோப்புகளை அணுகுவதற்கான ஒரு
கட்டமைப்பே இந்த WWW. CERN நிறுவனத்தில் வேலை பார்த்த பொழுது,
ஆராய்ச்சியாளர்கள் படித்த விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு நெறிமுறையை
உருவாக்கி
தம் நிறுவனத்திடம் சொன்னார். அவருடைய கருத்தாக்கம் எல்லோருக்கும்
பிடித்துப் போகவே, அவருடன் ஐந்தாறு பேர் சேர்ந்து வலையை உருவாக்கினர்.
"Info.cern.ch" தான் முதன் முதலில் உருவான இணையதளம். இத்தளத்தில் உள்ள
"http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html" என்ற பக்கம்தான்
முதல் வலைபக்கம். வலை என்றால் என்ன, அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும், அதை
உருவாக்கிய குழு என்று
பல சுவாரஸ்யமான தகவல்கள் இங்கு உள்ளன. WWWவைப் பொறுத்தவரை அது எந்த மொழியானாலும், எந்த மென்பொருளானாலும், எந்தக்
கருவியானாலும் வேலை செய்யும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று மகாகவி
கூறியது போல், இதன் துணை
கொண்டு யாருடைய உத்தரவும் இன்றி எந்தக் கருத்தை யார் வேண்டுமானாலும்,
எப்பொழுது வேண்டுமானாலும் இணையத்தில் சொல்ல முடியும். ஆம், நாம் அனைவரும்
‘இணைய உலகின் மன்னர்’.சர் டிம் பெர்னர்ஸ் - லீ 1955இல் லண்டனில் பிறந்தவர். ஆக்ஸ்ஃபோர்டு
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் இயற்பியலில் முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்றவர். இங்கிலாந்து பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, இவர்
தற்பொழுது
பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இணையம் சம்பந்தமான ஆராய்ச்சியில் உதவி வருகிறார்.
ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின்
மிகவும் சக்தி
வாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக டைம் இதழால் தேர்வு செய்யப்பட்டவர். நல்ல
பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.இத்தருணத்தில் www.webat25.org என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
www மற்றும் இணைய உலகு சந்திக்கும் சவால்கள், அதன் எதிர்காலம், மீதமுள்ள
400 கோடி மக்களை எவ்வாறு இணையத்துக்கு அழைத்து வருவது, வலையின் உபயோகங்கள்
இப்படிப்
பலதரப்பட்ட விஷயங்களை விவாதிக்க மேற்கண்ட வலைதளத்துக்கு விஜயம் செய்யவும்.
தி.சு.பா.
No comments:
Post a Comment