Search This Blog

Monday, March 03, 2014

அருள்வாக்கு - அம்மா!





தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்குமே காணமுடியவில்லை. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலும்கூட, தாயாராகப்பட்டவள் அதைப் பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள். ‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்று இதைத்தான் சொல்லுகிறோம். ‘தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்’ என்று அம்பாளிடமே நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிற துதி ஒன்று இருக்கிறது. அதில் ‘துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு. ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது’ என்று வருகிறது. பரிபூரணமாக அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும், அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடிகிறது.


கன்று ‘அம்மா’ என்று கத்துவதில் உள்ள ஆவல் மாதிரி வேறெங்கும் அன்பைப் பார்க்க முடியவில்லை. இதைப் பார்த்துத்தான் மநுஷ்ய ஜாதியே ‘அம்மா’ என்று கூப்பிட ஆரம்பித்ததோ என்று தோன்றுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மஹாராஷ்டிரம், கன்னடம் முதலிய பாஷைகளிலும் ‘அம்மா’ என்றே தாயாரைச் சொல்கிறார்கள். மலையாளத்தில் ‘அம்மை’ என்பார்கள். ஸம்ஸ்கிருதத்தில் ‘மா’ என்றும் ‘அம்பா’ என்றும் சொல்லுவதும் இதேதான். ஹிந்தியில் ‘மா’, ‘மாயி’ என்கிறார்கள். இங்கிலீஷ் மம்மி, மம்மா எல்லாமும் கன்று குட்டியின் அம்மாவிலிருந்து வந்தவைதான் போலிருக்கிறது.இந்த அம்மாவின் அன்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இவள் இந்த சரீரத்திற்கு மட்டும்தான் அம்மா. அவளுடைய அல்லது நம்முடைய சரீரம் போன பிற்பாடு இந்த அம்மாவுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. அப்புறம் வேறு கர்ப்பவாஸம். வேறே அம்மாள் வருவாள். இப்படிச் சரீரத்திற்கு மட்டும் அம்மாவாக இல்லாமல், உயிருக்கு அம்மாவாக இருக்கிற ஒருத்தி இருக்கிறாள். சரீரம் அழிகிற மாதிரி உயிர் அழிவதில்லை. இந்தச் சரீரம் போன பிற்பாடு அந்த உயிர் இன்னொரு சரீரத்திற்குப் போகிறது. இந்த உயிரின் அம்மாதான் நமக்கு சாசுவதமாக, நிரந்தரமாக, எந்நாளும் தாயாராக இருந்து கொண்டிருக்கிறாள்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment