Search This Blog

Saturday, March 29, 2014

அமித் மிஸ்ராவின் விஸ்வரூபம்


கிரிக்கெட்டின் அற்புதமான காட்சிகளில் ஒன்று, லெக்ஸ்பின் பௌலிங்கைக் கண்டுகளிப்பது. கூக்லி, டாப்ஸ்பின், ஃப்ளிப்பர், ஸ்லைடர் என்று ஒரு லெக்ஸ்பின்னரால்தான் ஒவ்வொரு பந்திலும் அசத்த முடியும். சமீபகாலமாக, அமித் மிஸ்ராவின் பந்துவீச்சு அப்படியொரு சாகசத்தை வெளிப்படுத்தி வருகிறது. பல நாடுகள் கலந்துகொள்ளும் ஓர் உலகப்போட்டியில் சரியான முறையில் தன்னை நிரூபித்திருக்கிறார் மிஸ்ரா. இனி அவர் பெஞ்சில் அமர்ந்து துவண்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

2003ல், இந்திய அணிக்குள் நுழைந்த மிஸ்ரா, இதுவரை 23 ஒருநாள் ஆட்டங்களே ஆடியிருக்கிறார். டெஸ்ட்டிலும் இதே நிலைமைதான் (13 டெஸ்டுகள்). கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மிஸ்ராவால் ரஞ்சிப் போட்டியில் மட்டுமே ஆட முடிந்தது. கும்ப்ளே ஓய்வு பெற்று, ஹர்பஜன் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் மிஸ்ராவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. அஸ்வினும், ஜடேஜாவும் அமர்க்களமாக இந்திய அணியின் தூண்களாக மாறினார்கள். வயது வேறு 30ஐக் கடந்து விட்டது. ஆனால், மிஸ்ரா சலனப்படவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் தன்னை நிரூபிக்க ஆரம்பித்தார். ஐ.பி.எல்.-லை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஐ.பி.எல்.-லில் மூன்று முறை ஹாட்ரிக் எடுத்து, மிஸ்ராவுக்கு ஏன் இந்திய அணியில் இடமளிக்கப்படவில்லை என்கிற கேள்வியை உருவாக்கினார். சென்ற வருடம் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சென்றபோது, ஒருவழியாக நேரம், காலம், அதிர்ஷ்டக் காற்று எல்லாம் மிஸ்ரா பக்கம் திரும்பியது. இப்போது மிஸ்ரா இல்லாமல் 50 ஓவர், டி20 மேட்சுகளில் இந்தியாவால் களமிறங்க முடியாது என்கிற நிலைமை உருவாகிவிட்டது.

பங்களாதேஷில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடுத்தடுத்து மேன் ஆஃப் தி மேட்ச் பட்டங்கள் வாங்கியதால் மற்ற அணிகள் அஜ்மல், நரைனுக்குச் சமமாக மிஸ்ராவை மதிக்கத் தொடங்கியிருக்கின்றன. மிஸ்ராவின் இந்தத் தாக்கத்தால் சில மாற்றங்கள் உண்டாகப்போகின்றன. ஏற்கெனவே ஜடேஜாவிடம் டெஸ்ட் இடத்தை இழந்துவிட்ட அஸ்வின் இன்னும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். மிஸ்ராவின் எழுச்சியால் ஹர்பஜன் இனி மீண்டு வர முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் டெஸ்ட் மேட்ச் நடக்கும்போது ஓஜாவின் வாய்ப்பையும் மிஸ்ரா தட்டிப்பறிக்கலாம். திறமையை நீண்டநாள் ஒளித்து வைக்க முடியாது என்பதற்கு மிஸ்ராவே சிறந்த சாட்சி.

 

1 comment:

  1. திறமைக்கு வயது இல்லை! அருமையான கட்டுரை! நன்றி!

    ReplyDelete