Search This Blog

Monday, March 24, 2014

ஆனந்த் - கர்நாடக கிரிக்கெட் -சானியா மிர்சா - சோயிப் மாலிக் - ராகுல் டிராவிட்


விஸ்வநாதன் ஆனந்தின் கதை முடிந்துவிட்டது என்றார்கள். ஜூரிச் மற்றும் லண்டன் கிளாசிக் போட்டிகளில் அவர் தோற்றபோது இதன் பாதிப்பால் கேண்டி டேட்ஸ் போட்டியில் கலந்துகொள்ளவே மாட்டார் என்றும் எழுதினார்கள். இது கார்சலனின் யுகம், ஆனந்துகளுக்கு வேலையில்லை என்று குட்டினார்கள். ஆனால் ஒரே ஒரு ஆட்டத்தில் ஆனந்த் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்திவிட்டார். 

இப்போது நடந்து கொண்டிருக்கும் கேண்டிடேட்ஸ் போட்டியின் (இதில் வெற்றி பெறுபவர் கார்ல்சனுடன் உலக சாம்பியனுக்கான போட்டியில் மோதுவார்.) முதல் ஆட்டத்தில், முன்னணி வீரர் ஆரோனியனை நுட்பமான காய் நகர்த்தல்களால் வென்று, அத்தனை பேர் வாயையும் அடைத்துவிட்டார் ஆனந்த். ‘போட்டியை யார் வெல்வார்?’ என்று செஸ் உலகம் எண்ணிக் கொண்டிருக்கிறதோ அவரையே முதல் ஆட்டத்தில் ஆனந்த் வென்றது பெரிய இன்ப அதிர்ச்சி.  

வாழ்நாள் முழுக்க நினைவிலிருக்கும் ஆட்டம். ‘ஆனந்த் என்றால் ஆனந்த்தான்’ என்று ஆனந்த் வென்ற விதத்தை செஸ் நிபுணர்களும் செஸ் வீரர்களும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனந்த் இந்தப் போட்டியை வெல்கிறாரா, இல்லையா என்று தெரியாது. ஆனால், தம்மால் இந்தத் தலைமுறை செஸ் வீரர்களோடு ஈடுகொடுத்து ஆடமுடியும் என்பதை அந்த ஒரு ஆட்டத்தில் நிரூபித்துவிட்டார். 

கர்நாடக கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்திய அளவில் மிகச்சிறந்த கிரிக்கெட் அணி என்றால் அது கர்நாடகம்தான். இந்த வருட ரஞ்சிப் போட்டியை வென்ற கர்நாடக அணி, இதர உள்ளூர் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக ஆடிவருகிறது. சர்வதேச ஆட்டங்கள் நடத்தும் அளவுக்கு மிகச்சிறந்த மைதானங்களும் கர்நாடகாவில் உருவாகிவிட்டன. பெங்களூருவில் மட்டுமில்லாமல் இதர நகரங்களிலும் சர்வதேசத் தரத்திற்குரிய மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்ற வருடம் மேற்கு இந்திய அணியின் ஏ தொடர் முழுக்க கர்நாடகாவில் நடைபெற்றது. பெங்களூரு, மைசூர், ஹூப்ளி என முழுத் தொடரும் கர்நாடகாவில் மட்டுமே நடந்தது. இந்தச் சிறப்பு வேறு எந்த மாநிலத்திலாவது இருக்குமா என்று தெரியவில்லை. இப்படி, கர்நாடகாவின் கிரிக்கெட் வளர்ச்சி ஊரே மெச்சும்படி உள்ளது. (ஐ.பி.எல்.லிலும் பெங்களூரு சிறந்த அணிகளில் ஒன்று.) இந்திய கிரிக்கெட்டின் மையமாக இருக்கும் சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், கர்நாடகாவின் பாதையில் செல்லுமா என்கிற கேள்வியும் எழுகிறது.  

தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர வேறு எங்காவது முக்கியமான கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முடியுமா என்றால் சந்தேகம்தான். கிரிக்கெட் நிர்வாகம், கிரிக்கெட் அணி என எல்லாவற்றிலும் கர்நாடகா தரத்தை உறுதிப்படுத்தியிருந்த போதும் இந்திய அணியில் அவர்களுடைய பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. டி20 உலகக்கோப்பை, ஆசியக் கோப்பை, நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இடம்பிடித்த வீரர்களில் பின்னி மட்டுமே கர்நாடக வீரர். டெஸ்ட் அணியில் ஒருவர்கூட கிடையாது. ராஜஸ்தான் அணி தொடர்ந்து இரண்டு முறை ரஞ்சிக் கோப்பையை வென்றபோதும் (2011, 2012) அந்த அணியிலிருந்து ஒருவர்கூட இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போனது விந்தையிலும் விந்தை. அந்த துரதிர்ஷ்டம் கர்நாடகாவுக்கும் வாய்க்கக்கூடாது.

இரண்டு பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டால் அதற்கென்று சில சாதக பாதங்கள் இருக்கும். இதுவரை சாதகமான விஷயங்களையே சந்தித்துக் கொண்டிருந்த சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதிக்கு இப்போது பாதகத்தைச் சந்திக்க வேண்டிய நேரம். ஒரு டென்னிஸ் தொடர்பான இணையதளத்தில் ‘சானியா மிர்சாவும் சோயிப் மாலிக்கும் பிரிந்துவிட்டார்கள்’ என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள். பல மாதங்களாக இருவரும் இணைந்து வெளியே வராததால், மீடியா முன் காட்சி தராததால், ‘ஓஹோ அப்போ பிரிந்துவிட்டார்களா?’ என்று அபத்தமாக தோன்றிய கற்பனையின் விளைவு இது. நல்லவேளையாக உடனடியாக இருதரப்பினரிடமிருந்தும் இதற்கு மறுப்பு வந்ததால் மேலும் வதந்தி பரவாமல் பொசுங்கிப் போனது. ‘இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பதால் சேர்ந்து வாழ நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகப் பிரிந்துவிட்டார்கள் என்று எழுதுவது அபத்தம்’ என்று சோயிப் குடும்பத்தினர் பேட்டி கொடுக்கிறார்கள்.

சானியாவின் தந்தை, ‘இருவரும் யு.எஸ். ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகளில் ஒன்றாக வந்ததை டி.வி.யில், செய்தித்தாள்களில் எல்லோரும் பார்த்திருப்பீர்களே, பிறகு எப்படி இப்படியொரு ஆதாரமில்லாத செய்தியை வெளியிடுகிறார்கள்?’ என்று கோபமாகப் பேசுகிறார். பாவம், இருவரையும் வாழவிடுங்கள்!  இந்திய கிரிக்கெட்டில் மிகக் குறைவான சர்ச்சைகளைச் சந்தித்தவர் ராகுல் டிராவிட். பழகுவதிலும் நடத்தையிலும் ஜென்டில்மேன் என்று பெயர் எடுத்தவர். ‘டங்கன் ஃபிளட்சர் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க வேண்டாம். இந்திய அணி மோசமாக ஆடுவதற்கு அவரும் ஒரு காரணம், ராகுல் டிராவிடை இந்திய அணியின் பயிற்சியாளராக்கவேண்டும்’ என்று திடீரென கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்கு டிராவிட் மௌனமாக இருந்திராமல் தம் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் தகுதியானவன் என்று நினைத்து கவாஸ்கர் என்னைப் பரிந்துரை செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பயிற்சியாளர் பொறுப்புக்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும். ஆண்டுக்கு ஏறக்குறைய 11 மாதங்கள் இந்திய அணியோடு இருக்க வேண்டியிருக்கும். நான் இப்போதுதான் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். இப்போது எனக்கு நேரம் இல்லை என்பதால், கவாஸ்கரின் யோசனையை மறுக்க வேண்டிய நிலைமையில் உள்ளேன்" என்கிறார் டிராவிட். டங்கன் ஃபிளட்சர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்று பி.சி.சி.ஐ.யும் சொல்லிவிட்டதால் அடுத்த 2015 உலகக்கோப்பை வரை ப்ளட்சரே நீடிப்பார் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment