Search This Blog

Friday, October 18, 2013

ஜ்வாலா கட்டா - 13 முறை நேஷனல் சாம்பியன் - பேட்மிண்டன்



காமன்வெல்த் கேம்ஸில் தங்கம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் பிரிவில் இரண்டு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர், 13 முறை நேஷனல் சாம்பியன் என பல சாதனைகளுக்கு உரியவர், ஜ்வாலா கட்டா. ஆனால், சாதனைகளுக்காகப் பேசப்பட்டதை விடவும் சர்ச்சைகளால்தான் அதிகம் செய்திகளில் இடம்பெறுகிறார். இப்போது, வாழ்நாள் தடை தொடர்பான ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். 

சமீபத்தில் நடந்த இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டியில் (ஐ.பி.எல்.), தில்லி அணி சார்பாக விளையாடினார் ஜ்வாலா. ஒரு ஆட்டத்தில், பெங்களூரு பீட்ஸ் அணி வீரர் ஹூயுன் காயம் அடைந்ததால், அவருக்குப் பதிலாக டென்மார்க் வீரர் ஜான் ஜோர்ஜென்சென் கடைசி நேரத்தில் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லி ஸ்மாஷர்ஸ் அணியின் கேப்டனான ஜ்வாலா, அந்த ஆட்டத்தைப் புறக்கணிக்கும்படி தம் அணி வீரர்களை வற்புறுத்தினார். பிறகு, சுமூகம் ஆகி (பெங்களூரு அணி, டென்மார்க் வீரரை ஆட்டத்திலிருந்து நீக்கியது.) 30 நிமிடங்கள் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. ஐ.பி.எல். முடிந்தவுடன், இதுபற்றி இந்திய பேட்மிண்டன் சங்கம் விசாரணை நடத்தியது. ஜ்வாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  புறக்கணிப்பு செய்வது என்கிற முடிவை தில்லி அணியின் நிர்வாகம்தான் எடுத்தது. இதில் என் தனிப்பட்ட முடிவு எதுவுமில்லை" என்று பதிலளித்திருந்தார் ஜ்வாலா. இதைத் தொடர்ந்து, ஜ்வாலாவுக்கு ஆயுள் காலத் தடை விதிக்க வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு சிபாரிசு செய்திருக்கிறது. அதை அமல்படுத்த இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் அமைத்துள்ள மூன்று பேர் கொண்ட கமிட்டி முடிவு செய்ய இருக்கிறது. அதுவரை ஜ்வாலா சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. ஜ்வாலாவுக்கும் பேட்மிண்டன் சங்கத்துக்குமிடையே நடப்பது இது முதல் சர்ச்சையல்ல. ஐ.பி.எல். போட்டி ஆரம்பிக்கும் முன்பே வழக்கம் போல ஜ்வாலாவுக்கும் போட்டி அமைப்பாளர்களுக்கு மிடையே பூசல் உருவானது. பெண்கள் இரட்டையர் ஆட்டங்களுக்கு அதிக ஆதரவு இல்லையென்று கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜ்வாலா மற்றும் அஸ்வினி ஆகிய இரட்டையர் வீரர்களின் மதிப்பு குறைந்தது. அடிப்படை ஏலத் தொகைரூ. 29 லட்சமாக இருந்த நிலையில், ஏலத்தில் ஜ்வாலாவுக்கு ரூ. 18 லட்சம்தான் கிடைத்தது. என்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று ஜ்வாலா கொதித்தெழுந்தார். இவருக்கும் பேட்மிண்டன் சங்கத்துமிடையே உள்ள விரிசலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் ஒருமுறை மாட்டிக் கொண்டார்.சில வருடங்களுக்கு முன்பு, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுடன் பலமாகக் கிசுகிசுக்கப்பட்டார் ஜ்வாலா. இவர் ஆடிய ஆட்டங்களுக்கு அசார் வருகை தந்ததால் காதல் செய்திகள் வலம் வந்தன. அதே சமயத்தில், தன் கணவரும் பேட்மிண்டன் வீரருமான சேதன் ஆனந்த்தை விவாகரத்து செய்திருந்தார் ஜ்வாலா. இதனால் அசார் - ஜ்வாலா கிசுகிசு உண்மையே என்று பலரும் நம்பினார்கள். ஆனால், இதற்கும் பேட்மிண்டன் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தினார் ஜ்வாலா. அசார், இந்திய பேட்மிண்டன் அமைப்பின் தலைவராக முடிவு செய்தார். இதை ஏற்றுக்கொள்ளாத பேட்மிண்டன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர், எங்களிருவரைப் பற்றியும் கதைகட்ட ஆரம்பித்தார்கள். எனக்காகத்தான் அவர் அமைப்புக்குள் நுழைகிறார் என்றார்கள். அசாருக்கு என் தந்தை வயது. புரளியைக் கிளப்பியவர்கள் யாராவது ஓர் இளம் நடிகருடன் என்னை இணைத்துப் பேசியிருக்கலாம். இந்த சர்ச்சையால் என் கணவரும் மிகவும் வேதனைப்பட்டார். அவரை நான் விவாகரத்து செய்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தியது" என்றார். 

சக பேட்மிண்டன் வீராங்கனை பிரஜ்க்தா, பிரபல பயிற்சியாளர் கோபிசந்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தபோது அவருக்கு ஆதரவாகக் கிளம்பிய ஒரே வீராங்கனை, ஜ்வாலாதான். அதனால், இப்போதைய ஆயுள்காலத் தடைப் பிரச்னையில், ஜ்வாலாவுக்கு உதவ மறுத்துவிட்டார் கோபிசந்த். நான் போதை மருந்து உட்கொள்ளவில்லை. மேட்ச் ஃபிக்ஸிங் செய்யவில்லை. யாரையும் கொலை செய்யவில்லை. எனக்கு பேட்மிண்டன் மட்டுமே விளையாடத் தெரியும். எனக்கு அரசியல் செய்யத் தெரியாது. என்னை ஏன் பேட்மிண்டன் சங்கத்தில் எதிரி போல நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. சரியான நபர்கள் சங்கத்தில் இருந்திருந்தால் என் விமரிசனங்களைப் பெரிதுபடுத்தியிருக்க மாட்டார்கள். சர்வதேச அளவில் பல சாதனைகளைச் செய்திருக்கிறேன். அதை விட்டுவிட்டு என் பேச்சுகளை ஏன் எதிர்மறையாக எண்ணுகிறார்கள்? நீதிமன்றம்வரை சென்று விளையாட அனுமதி கேட்கும் அளவுக்கு என்னைத் தள்ளி விட்டார்கள். ஆனால், என்னைப் பற்றிய சர்ச்சையால் இப்போது எல்லோரும் பேட்மிண்டன் சங்கத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்" என்கிற ஜ்வாலா, தன் மீதான ஆயுள்காலத் தடையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் விசாரணை முடியும் வரை, ஜ்வாலா கட்டாவை சர்வதேசப் போட்டிகளில் விளையாட உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், பேட்மிண்டன் சங்கத்தின் முடிவால், சீனா ஓபன் உள்பட பல சர்வதேசப் போட்டியில் ஜ்வாலா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஜ்வாலா செய்தது தவறாக இருந்தாலும் அதற்கு அபராதத் தொகை விதிப்பது மட்டுமே சரியான தண்டனையாக இருக்க முடியும். வாழ்நாள் தடை என்பதெல்லாம் பழைய பகையை மனத்தில் வைத்துக் கொண்டு எடுக்கப்படும் முடிவாகவே இருக்கிறது. வீரர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களுடைய குறைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதற்காகவும் தான் விளையாட்டு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். சங்கங்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனால், கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ், தடகளம் என எந்த விளையாட்டுகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், நிர்வாகிகள்தான் விளையாட்டுத் துறையின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ளதுபோல விளையாட்டு நிர்வாகிகள் - வீரர்களின் திறமை, பங்களிப்பு ஆகியவற்றில் அக்கறை செலுத்தினால் மட்டுமே இதுபோன்ற தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்க்க முடியும்.

1 comment: