அமெரிக்காவில் ‘அரசு மூடல்’ காரணமாக ஒரே நாளில் 8 லட்சம் பேர்
வேலையிழந்திருக்கின்றனர். அமெரிக்கப் பொருளாதாரம் ஆடிப்போயிருக்கிறது.
அதன் பாதிப்பு இந்தியாவில்
எப்படியிருக்கும்?
கடந்த அதிபர் தேர்தலில் ஒபாமா முன்வைத்த ஒரு விஷயம்,(தமிழக அரசு
காப்பீட்டு வசதி போல) ‘ஒபாமா ஹெல்த்கேர்’ என்ற சாமானியனுக்கும் மருத்துவ
இன்சூரன்ஸ்
திட்டம். மருத்துவச் செலவு மிகமிக அதிகமாயிருக்கும் அமெரிக்காவில் இந்த
இன்சூரன்ஸ் ‘அரசு மற்றும் தனியார் துறையில் பணியிலிருப்பவர்கள் மற்றும்
வேலையில்
இல்லாத, எளிய மக்களுக்கும் உதவும்’ என்பதனால் மக்களிடம் ஆதரவு இருந்தது.
ஒமாபா வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் அரசு வரிப் பணத்தை, வரியே
செலுத்தாதவர்களுக்கு ‘சமூக நலத்திட்டங்கள்’ என்ற பெயரில் செலவழிப்பதை
எதிர்க் கட்சியான ‘குடியரசுக் கட்சி’ எதிர்த்தது. அதிபர் தேர்தலில் தங்கள்
வேட்பாளர்
வெற்றி பெறாததால் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஒரு
சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தது. அதனால் பட்ஜெட்டை நிறைவேற்றாமல்
இழுபறி செய்து கொண்டிருந்தது குடியரசுக்
கட்சி.
‘நிதி மசோதா நிறைவேற வேண்டுமானால் ‘ஒபாமா கேர்’ திட்டத்தில்
திருத்தங்கள் செய்ய வேண்டும். அல்லது ஓராண்டுக்குத் தள்ளி வைக்க வேண்டும்’
என்ற தீர்மானத்தை
குடியரசுக் கட்சி கொண்டுவந்து தன் மெஜாரிட்டி பலத்தால் நிறைவேற்றியும்
விட்டது. ஆனால் ஆளும்கட்சியான ஜனநாயகக் கட்சி தாங்கள் மெஜாரிட்டியாக உள்ள
செனட் சபையில் இந்தத் தீர்மானத்தைத் தோற்கடித்தது.
நிதியாண்டின் கடைசி நாளான செப்டெம்பர் 30ஆம் தேதி வருடாந்திர பட்ஜெட்
நிறைவேறாவிட்டால், குறுகிய கால அவசர செலவிற்காக அரசுக்கு நிதி தர
நாடாளுமன்றம் அனுமதி தர வேண்டும். தங்கள் தீர்மானம்
தோற்கடிக்கப்பட்டதில் கடுப்பாகிப் போன குடியரசுக் கட்சி, ‘இந்தத்
தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டுமானால் காப்பீட்டுத் திட்டச் செலவைக்
குறையுங்கள். அல்லது ஓராண்டுக்குத் தள்ளிப்போடுங்கள்’ என மிரட்டியது.
ஒபாமா பணிய மறுத்து, ‘நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் பிரச்னையை மக்களிடம்
கொண்டுபோவேன்’ என பதிலுக்கு மிரட்டினார்.
செப்டெம்பர் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை நீடித்த இந்தப் போராட்டம்
முடிவுக்கு வருவதற்குள் நிதியாண்டு முடிவுக்கு வந்துவிட்டது. ஆளும் கட்சி
காலியான
கஜானாவுடன் ஆட்சியைத் தொடர வேண்டிய நிர்ப்பந்தம். அதன் விளைவுதான் இந்த
‘ஷட்- டவுன்’ அறிவிப்பு. சுருக்கமாகச் சொன்னால், இரண்டு கட்சிகளும் தங்கள்
கொள்கையை
விட்டுக் கொடுக்க மறுத்த அகம்பாவத்தின் விளைவு இது.
அமெரிக்க அரசியலில் இப்படி அரசை முடக்குவது என்பது இதற்கு முன்பே 17
முறை நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் அதிபர்கள் ரீகன், புஷ், கார்ட்டர்
காலங்களிலும் ‘அரசு மூடல்’ நடந்திருக்கிறது. ஆனால்
அவையெல்லாம் சில நாட்களிலேயே சரியானது. ஆனால் 17 ஆண்டுகளுக்குப்பின்
அமெரிக்கா சந்திக்கும் இந்த அதிர்ச்சி சில வாரங்களாவது நீடிக்கும் என்பது
வல்லுனர்களின் மதிப்பீடு. அதுவரை அமெரிக்கப்
பொருளாதாரம் இழக்கப்போவது வாரத்துக்கு நூறு கோடி டாலர்கள்.
1996ல் கிளிண்டனை மண்டியிடச் செய்ய குடியரசுக்கட்சி இதே முறையை
கையாண்டதில் மக்கள் வெறுப்பாகி கிளிண்டனை ஆதரித்தார்கள். தற்போது பல
முனைகளில் தோல்வியைச்
சந்தித்து மக்களின் செல்வாக்கை இழந்துவரும் ஒபாமாவிற்கு அதை மீட்க
குடியரசுக் கட்சியின் இந்தப் பிடிவாதம் உதவப் போகிறாய்? உலகம் பார்த்துக்
கொண்டிருக்கிறது.
இந்திய சாஃப்ட்வேர் நிறுவனங்கள், அமெரிக்க பெடரல் அரசின் பணிகளை அதிகம்
செய்வதில்லை. அதனால் அவர்களுக்குப் பாதிப்பு இல்லை. ஆனால் நிலைமை
நீடித்தால் அரசாங்கப் பணிகளைச் செய்யும் நிறுவனங்களுக்கு உதவும் இந்திய
நிறுவனங்கள் பாதிக்கப்படும்," என்கிறார் சோம் மிட்டல். இவர் இந்திய
கம்ப்யூட்டர் தொழில்
கூட்டமைப்பின் தலைவர்.
ரமணன்
No comments:
Post a Comment