எட்டு சதவிகிதத்திற்கு மேல் இருந்த ஜி.டி.பி.யை ஐந்து சதவிகிதமாக
குறைத்தது, வெங்காயம், தக்காளியைக்கூட சாதாரண மனிதர்கள் வாங்கிச் சாப்பிட
முடியாதபடி விலை உயர்த்தியது என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்த
சாதனைகள் பல. இந்தப் பட்டியலில் இன்னொரு முக்கியமான சாதனையும் இப்போது
சேர்ந்திருக்கிறது. எக்கச்சக்கமான கறுப்புப் பணத்தை ரியல் எஸ்டேட் துறையில்
பாயவிட்டதன் மூலம் இன்றைக்கு வீடு விலை உச்சத்தை அடைந்து, எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் சகட்டுமேனிக்கு குறையலாம் என்கிற ஆபத்தை வெற்றிகரமாக
உருவாக்கியதுதான் அந்தச் சாதனை.
கடந்த பத்து ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் விலை
கன்னாபின்னாவென்று எகிறி, பெரும் லாபம் கிடைத்ததால், கட்டட
கான்ட்ராக்ட்டர்கள் என்று மட்டும் இல்லாமல், தொழில் அதிபர்களும் தங்கள்
பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தனர். தொழில் போர்வையைப்
போட்டுக்கொண்டு, வங்கிகளில் பெரும் தொகையைக் குறைந்த வட்டிக்கு கடனாக
வாங்கி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து கொள்ளை லாபம் பார்த்தனர். இதனால்
மனைகளின் விலை புயல் வேகத்தில் உயர்ந்தது. ஆனால், தொழில்கள் முடங்கின.
விளைவு, ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள், நாணயமான
அதிகாரிகள் எல்லோருக்கும் சொந்த வீடு என்கிற கனவு தகர்ந்து போனது.
பணக்காரர்கள், அந்நிய முதலீட்டாளர்கள் வாங்க... விற்க... இரண்டாவது வீடு,
மூன்றாவது வீடு வாங்க... விற்க... என தேவைக்கு என்று இருக்கவேண்டிய ரியல்
எஸ்டேட், இன்று ஒரு விலை பொருளாக (commodity) மாறியதுதான் நாட்டின் பெரும்
துயரம்.
ஏகத்துக்கும் உயர்ந்த ரியல் எஸ்டேட்களின் விலை பல பெரிய
தொழில்களையும் விரட்டி அடித்தது. இந்தியாவில் தொழிற்சாலை ஆரம்பித்து நாலு
காசு லாபம் பார்க்கலாம் என்று வந்த பல நிறுவனங்கள் இடங்களுக்குச்
சொல்லப்படும் விலையைக் கண்டு அதிர்ந்து ஓடிவிட்டன.
தொழில் வளர்ச்சியின் மூலாதாரமான இடத்தை அரசு கையகப்படுத்துவதைகூட
விவசாயிகள் அனுமதிக்க மறுக்கின்றனர். பூமி விளைந்து தங்களைக் காப்பாற்றும்
என்பதற்காக அல்ல; வித்து காப்பாற்றும் என்பதால்தான். அரசு
கையகப்படுத்தினால் அடிமாட்டு விலைதானே கிடைக்கும். ஏக்கர் ஒரு கோடி வரை
விற்பனையாகும் விவசாய நிலத்தின் வழிகாட்டு மதிப்பு 5 லட்சம், 6 லட்சம்
ரூபாய் என்றுதானே இருக்கிறது. இதுவரை வழிகாட்டு விலை கொடுத்த அரசு, இன்று
நான்கு மடங்கு அதிகம் தரவேண்டும் என்கிறது. அமெரிக்காவில் ஓர் ஏக்கர்
விவசாய நிலம் விலை 1,000 டாலர். அதாவது, 65,000 ரூபாய். ஆனால்,
ஆண்டிபட்டியில் 5 லட்சம் ரூபாய்! விளங்குமா இந்த நாடு? ரியல் எஸ்டேட்டில்
அமெரிக்காவையே அடிச்சுட்டோம்லன்னு வேண்டுமானாலும் நாம் பீத்திக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில் அரசியல்வாதிகள், பெரிய அரசு
அதிகாரிகள், தங்களது லஞ்சப் பணத்தையும், பெரும் முதலாளிகள் தங்களது
கறுப்புப் பணத்தையும் பதுக்கிப் பாதுகாக்க ரியல் எஸ்டேட் பூலோக சொர்க்கமாக
மாறியதால், உற்பத்தி அல்லாத துறையில், அனைத்து மூலதனங்களும் முடங்கின.
விளைவு, விவசாயம் 1.8% வளர்ச்சி வீழ்ச்சி; தொழில் 0.8% வளர்ச்சி வீழ்ச்சி;
ஆனால், ரியல் எஸ்டேட் மட்டும் 9% அமோக வளர்ச்சி. ஒரு பொருளாதாரத்திற்கு
விவசாயமும், தொழில் துறையும் அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு
எல்லாமே தலைகீழாக இருந்தால், பொருளாதாரம் சீட்டுக்கட்டுபோல சரியாமல் என்ன
செய்யும்?
அந்நிய முதலீடுகள், அற்றகுளத்து அருநீர் பறவைகள்போல...
வந்தன, லாபம் பார்த்தன.. பறந்துவிட்டன. சில முதலீடுகள் இன்று வானுயர்ந்த
கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. கடைவிரித்தாகிவிட்டது கொள்வாரில்லை. 20 -
25% ப்ளாட் விலை சரிவு... விற்பனை சரிவு... பொருளாதாரத்தை, விவசாயப்
பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த வேண்டிய பணம், இன்று கட்டடங்களாக
முடங்கிக்கிடக்கின்றன.
என்றும் வளர்ச்சி தொடரும் என்று எண்ணி... 2, 3 என மனைகள் வாங்குவதற்காக
வங்கிகளில் கடன் பெற்றவர்கள், குடும்பச் செலவு கூடிவிட்டதால் கடன்
கட்டமுடியாமல் விழி பிதுங்குகின்றனர். கடனை வசூலிக்கவும் முடியாமல்,
ப்ளாட்களை விற்கவும் முடியாமல் தடுமாறுகின்றன பல வங்கிகள்.
இந்த அரசாங்கம் உண்மையில் நாட்டு மக்கள் மீது அக்கறைகொண்ட அரசாக
இருந்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? இன்னும் இரண்டு வருடங்களுக்கு
யாரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக் கூடாது... அந்நிய முதலீட்டிற்கு
ரியல் எஸ்டேட்டில் அனுமதி இல்லை என்றல்லவா கறாராகச் சொல்லி இருக்க
வேண்டும். ஆனால், மாப்பிள்ளை செத்தால் என்ன, பொண்ணு செத்தால் என்ன மாலைப்
பணம் கிடைச்சா போதும் என்றல்லவா இந்த அரசாங்கம் நினைத்தது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில்
பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்த அரசாங்கம் நிலங்களை கூறுபோட்டு விற்கத்தானே
செய்தது? நாளைக்கு அந்நிய நாட்டு முதலீடு அள்ளிக்கொண்டு வருமெனில்
இன்னுமொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கி, அங்கு கஞ்சா வளர்த்து,
அதையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் ஆச்சர்யமில்லை. இந்த
அரசாங்கத்திற்கு வேண்டியதெல்லாம் அந்நிய முதலீடு மட்டும்தானே!
ஆக மொத்தத்தில், விலை ஏறும், விலை ஏறும் என்று
ஒன்றுக்கு இரண்டாக வீட்டை வாங்கிப் போட்டவர்கள் இனி குமிழ் (Bubble)
உடைந்து, விலை இறங்கப் போவதை எப்படித்தான் தாங்கிக்கொள்ளப் போகிறார்களோ!
நினைத்தாலே பாவமாக இருக்கிறது!
No comments:
Post a Comment