'அப்பனுக்கு ஒரு
ராத்திரி அது சிவராத்திரி. உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்து வழிபடவேண்டிய
புண்ணிய தினம் அது. அம்மைக்கோ ஒன்பது ராத்திரிகள், அதாவது; நவராத்திரி.
ஆனால், அம்மையானவள் நாம் உண்ணாமல் இருப்பதைப் பொறுப்பாளா? எனவேதான் நித்தம்
ஒரு சுண்டல், சித்ரான்ன பிரசாதம் என நவராத்திரியை கொண்டாட
அருளியிருக்கிறாள்!’ நவராத்திரி வழிபாடு குறித்து திருமுருக கிருபானந்த
வாரியார் அருளிய அற்புதமான விளக்கம் இது.
ஆமாம்! அகில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன்
மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்கடாட்சிக்கும்
அற்புதமான காலம்தான் நவராத்திரி. இந்தப் புண்ணிய காலத்தில், அம்பிகையின்
திருக்கதைகளையும், அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் பாடி வழிபடுவது
விசேஷம்.
நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது.
புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள்
நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும். நவராத்திரிக்கு முதல் நாள் அதாவது
அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய
தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு
பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி,
கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம்
உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில்
அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.
பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீள-அகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.
பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத்
தயாராக வேண்டும். (இயன்ற வரையிலும், தகுந்த அந்தணர்களை வரவழைத்து,
வழிபாடுகள் நடத்தி வைக்கச் சொல்வது சிறப்பு).
பூஜை
மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்கு-சக்கரம், கதை
மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம்
அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை- ஆபரணம்,
மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில்
நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து
மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் துவங்க வேண்டும்.
''அம்மா... உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை
செய்யப் போகிறேன். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில்
ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை
எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்'' என்று மனதார வேண்டிக்கொண்டு
பூஜிக்க வேண்டும்.
பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா,
பலா முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தியம் செய்து
வழிபட வேண்டும். இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். 9
நாட்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும்.
தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.
9 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள்... சப்தமி,
அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும்
இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள்
பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி
யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.
புதுக்கோட்டை
பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது கீழ ராஜவீதி. இங்கே
இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களின் துயர்களையெல்லாம் துடைத்து,
இன்பமும் நிம்மதியுமாக அவர்களை வாழச் செய்து அருள்கிறாள் ஸ்ரீமனோன்மணி
அம்மன்.
சுமார் 200 வருடங்கள் பழைமை மிக்கது இந்தக் கோயில்.
ஒருகாலத்தில், தென்னந்தோப்பு ஒன்றில் அம்மனின் விக்கிரகம்
கண்டெடுக்கப்பட்டு, சிறியதொரு கோயிலாக அமைக்கப்பட்டு, வழிபட்டு வந்ததாகச்
சொல்வர்.
''ஸ்ரீமனோன்மணி அம்மன் எனத் திருநாமம் கொண்ட தேவி,
மனிதனின் மனத்தை ஒருநிலைப்படுத்தக்கூடியவள். நமக்கெல்லாம் மனோபலத்தைத்
தந்தருள்பவள். மனத்தில் தேவையற்ற குழப்பம், திடீர் திடீரென வந்து தாக்குகிற
பயம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் தரும் நாயகி இவள்!'' என்கின்றனர்
பக்தர்கள்.
நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன்,
ஸ்ரீபிரம்மாவுக்கு உரிய அட்ச மாலையும், கமண்டலமும் கொண்டு அழகுறக் காட்சி
தருகிறாள் அம்பாள். சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு, புதுக்கோட்டையின்
மையப்பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அரளிப்பூ மாலை
சார்த்தி, தாமரை மலர்கள் அணிவித்து அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.
இங்கே, இன்னொரு சிறப்பு... அம்மன் இங்கு சிவ- சக்தி
சொரூபமாக, சிவனாரின் சக்தியையும் கொண்டு காட்சி தருகிறாள். அதாவது,
சிவலிங்கத்தில் உள்ள ஆவுடையார் எனும் பகுதிக்கும் மேலே, நின்ற
திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீமனோன்மணி அம்மன். எனவே,
சிவனாருக்கு உரிய ரிஷப வாகனத்தையே இங்கு அம்மனும் கொண்டிருக்கிறாள்.
தவிர, ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டிருப்பதும் கோயிலின்
சாந்நித்தியத்தை உணர்த்துகிறது. சப்த கன்னியரில் ஒருத்தியான
ஸ்ரீபிராம்மியின் அம்சமாகத் திகழ்வதால், தினமும் இரவில் நடை
சார்த்தப்படுவதற்கு முன்னர், விசேஷ பூஜை நடைபெறுகிறது. அப்போது, அம்மனுக்கு
ஸ்ரீசரஸ்வதிதேவி போல் வெண்பட்டாடை உடுத்தி, பூஜை செய்வது வழக்கம்.
ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய
நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அம்மன் இங்கே, பஞ்சமி
திதியில் குடியமர்ந்ததாக ஐதீகம். எனவே, ஒவ்வொரு பஞ்சமி திதி நாளிலும் ஐந்து
விதப் பழங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு வழிபட்டால், நினைத்த காரியம்
அனைத்தையும் மனோன்மணி அம்மன் நிறைவேற்றித் தருவாள் என்பது ஐதீகம்!
அதேபோல், தினமும் ஸ்ரீசரஸ்வதி ரூபமாகக் கொண்டு இரவில்
பூஜை செய்யும்போது, ஐந்து விளக்குகள் ஏற்றி அவளை வழிபட்டால், குழந்தைகள்
கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தை மாதம் ராஜமாதங்கி நவராத்திரி, பங்குனியில் வசந்த
நவராத்திரி, ஆடியில் ஆஷாட நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி என
வருடத்துக்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. இந்த நான்கு நவராத்திரிகளுமே
இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
புரட்டாசி- சாரதா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அலங்காரத்தில் ஜொலிப்பாள் அம்மன். நிறைவு நாளில், ரிஷப வாகனத்தில்
அம்மன் திருவீதியுலா வரும் அழகே அழகு!
நவராத்திரி நாட்களில்- ஸ்படிகத்தால் ஆன ஸ்ரீசக்ர
தரிசனம், இந்தக் கோயிலின் சிறப்பம்சம். நவராத்திரியில் இங்கு வந்து
ஸ்ரீமனோன்மணி அம்மனையும், ஸ்ரீசக்கரத்தையும் தரிசித்து வழிபட, மங்கல
வாழ்வும் மனத்தில் நிம்மதியும் கைகூடும்.
- கே.அபிநயா, படங்கள்: தே.தீட்ஷித்
''வீரபாண்டி
லட்சுமி நரசிங்கப் பெருமாளைக் கண்ணாரத் தரிசிச்சு வேண்டிக்கிட்டா
போதும்... நம்ம கவலையெல்லாம் பறந்தோடிடும்'' என்கின்றனர் பக்தர்கள்.
கோவை- காரமடையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில்
உள்ளது வீரபாண்டி பிரிவு ரோடு. இங்கே, அழகுறக் கோயில்கொண்டிருக்கிறார்
ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம்
செல்லும் பேருந்தில் சென்று வீரபாண்டி பிரிவில் இறங்கி, சிறிது தூரம்
நடந்தால் கோயிலை அடையலாம்.
ஒருகாலத்தில், இந்தப் பகுதி முழுவதும் வனமாகத்
திகழ்ந்ததாம். அப்போது பூமியில் இருந்து சுயம்புவாகத் தோன்றியவராம்
ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள். பிறகு, அந்த விக்கிரகத் திருமேனியைப்
பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் மக்கள்.
பிற்காலத்தில் அந்நியர் படையெடுப்பின்போது, ஸ்வாமியின்
விக்கிரகத்தைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, அதை எடுத்து அருகில் உள்ள
கிணறு ஒன்றில் போட்டுவிட்டார்கள். கால ஓட்டத்தில் இந்த விஷயம் எவருக்குமே
தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில், ஊர்ப்பெரியவர் ஒருவரின் கனவில்
தோன்றிய பெருமாள், 'கிணற்றுக்குள் இருக்கும் என்னை எடுத்துப் பிரதிஷ்டை
செய்து வழிபட்டால், இந்த ஊரே செழிக்கும்’ என்று அருள்புரிந்தாராம். அதன்படி
கிணற்றில் இருந்த ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாளின் விக்கிரகத் திருமேனியை
எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து, அவருக்குக் கோயில் எழுப்பி, வழிபடத்
துவங்கினார்கள் ஊர்மக்கள்.
அன்று துவங்கி இன்று வரை, காரமடையைச் சுற்றியுள்ள மொத்த
கிராமங்களையும் கிராமத்து மக்களையும் காத்தருளி வருகிறார் ஸ்ரீலட்சுமி
நரசிங்கப் பெருமாள்.
மூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அருகில் பிரகலாதனும்
காட்சி தருவது ஆலயத்தின் சிறப்பு! ஒரே கல்லால் ஆன கொடிமரம், பன்னிரு
ஆழ்வார்களின் சந்நிதி, ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஅனுமன், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீயோக
நரசிம்மர் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கும் அற்புதமான கோயில் இது.
பொதுவாக, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீநரசிம்மர்
வழிபாடு அமர்க்களப்படும். அந்த நாட்களில் மட்டுமின்றி,
செவ்வாய்க்கிழமைதோறும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை தாமரைப் பூவால் அர்ச்சித்து
வழிபட்டால், சகல சந்தானங்களும் பெறலாம்; எதிரிகள் தொல்லை ஒழியும்; எடுத்த
காரியம் இனிதே வெற்றி பெறும் என்பது ஐதீகம்!
ஆனி மாதம் சித்திரை நட்சத்திர நாளில் பெருமாளுக்குக்
கலசாபிஷேகமும், வெள்ளி ரதத்தில் வீதியுலாவும் விமரிசையாக நடைபெறும்.
அதேபோல், புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று, இங்கு நடைபெறும் நாட்டிய நாடகம்
வெகு பிரசித்தம். அன்று இரவு முழுவதும் பஜனைப் பாடல்கள் பாடி
வழிபடுவார்கள் பக்தர்கள்.
நவராத்திரியில் பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகளும்
அலங்காரங்களும் நடைபெறுகின்றன. நவராத்திரி கொலு வைபவமும், அப்போது சிறப்பு
அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா வருவதும் கொள்ளை அழகு!
ஐந்து, ஏழு, பதினொன்று அல்லது 16 சனிக்கிழமைகள், இங்கு
தொடர்ந்து வந்து பெருமாளுக்கு விளக்கேற்றி, 16 முறை சந்நிதியை வலம் வந்து
ஸ்வாமியை வழிபடுவது விசேஷம். இதனால், கடன் தொல்லை ஒழியும்; விவசாயம்
செழித்தோங்கும்; வியாபாரம் லாபம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- ஞா.சுதாகர், படங்கள்: ர.சதானந்த்
நவராத்திரி
ஒன்பது தினங்களில் முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்கா தேவியையும், அடுத்து
வரும் மூன்று நாட்கள் ஸ்ரீலட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள்
ஸ்ரீசரஸ்வதிதேவியையும் வழிபடவேண்டும் என அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள்.
அப்படி திருமகளை வழிபடும் தினங்களில் கீழ்க்காணும் தியான ஸ்தோத்திரத்தைப் பாடி பூஜிப்பது அதிவிசேஷம். ஸ்ரீதேவி பாகவதம்,
9-வது ஸ்கந்தத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்தோத்திரம், சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித் தரும் வல்லமை மிக்கது.
ஸகஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சச்வத்ஸுஸ்திரயௌவனாம்
ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜேசுபாம்
சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சச்வத்ஸுஸ்திரயௌவனாம்
ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜேசுபாம்
கருத்து: ஆயிரம்
தளத்துடன் கூடிய தாமரைப் பூவின் நடுவில் வசிப்பவளும், சிறந்தவளும், சரத்
காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான ஒளியை உடையவளும், அப்படியான தனது
ஒளியால் மிகவும் பிரகாசிப்ப
வளும், ஆனந்தமாகக் காட்சி அளிப்பவளுமாகிய
திருமகளை பூஜிக்கிறேன்.
பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த
தங்கத்தின் ஒளியானது உருவெடுத்து வந்ததுபோல் இருப்பவளும், பதிவிரதையும்,
ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும் தங்கப் பட்டாடைகள் அணிந்த வளும்,
மந்தஹாசத்தால் மலர்ந்த முகம் உடையவளும், நிரந்தரமான யௌவனம் உடையவளும்,
பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் அளிப்பவளும், மங்களம் அருள்பவளுமான
ஸ்ரீமகாலட்சுமியை பூஜிக்கிறேன்.
ஆறுபடைவீடுகளில்
ஒன்றான பழநியம்பதியில், மலையில் மைந்தன் கந்தவேள் கோயில்கொண்டிருக்க,
மலையடிவாரத்தில் அழகிய வேலைப்பாடு கொண்ட ஆலயத்தில், அற்புதமாகக்
குடிகொண்டிருக்கிறாள் அன்னை ஸ்ரீபெரிய நாயகி அம்பாள். திண்டுக்கல்
மாவட்டம், பழநி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்,
சண்முகா நதிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில்.
நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்
இது என்கின்றன கல்வெட்டுகள். பழநியம்பதிக்கு வந்த அருணகிரியாரும் இந்தக்
கோயிலைப் பார்த்து மெய்ம்மறந்து சிலாகித்துப் பாடியுள்ளதை, திருப்புகழ்
பாடல் தெரிவிக்கிறது.
பழநி மலையில் ஸ்ரீபாலதண்டாயுதபாணியாக வீற்றிருக்கும்
குமரக் கடவுள், இங்கே ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமியாகக் காட்சி தருகிறார்.
சிவாலயங்களில் நடைபெறுவது போல், சிவனாருக்கு உரிய வைபவங்கள் இங்கே
சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. அதேபோல், அம்பிகை கோலோச்சும் கோயில்களைப்
போலவும் ஸ்ரீமுருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயத்தில் நடைபெறுவது
போலவும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய விழாக்கள் விமரிசையாகக்
கொண்டாடப்படுகின்றன.
நவராத்திரி விழாவின் முதல் நாளில் இருந்து பத்து
நாட்களும் கோயிலும் கோயில் அமைந்துள்ள தெருவும் களைகட்டத் துவங்கிவிடும்.
காப்புக்கட்டுதலுடன் துவங்குகிற விழாவில், ஒவ்வொரு நாளும் அம்பாள்
விதவிதமான அலங்காரத்தில் திருவீதியுலா வரும் அழகைத் தரிசித்துக்கொண்டே
இருக்கலாம்.
வேறு எங்கும் இல்லாத சிறப்பாக, நவராத்திரியின் ஒன்பது
நாட்களும் அம்பாள் எப்படி சர்வ அலங்காரத்தில் ஜொலித்தபடி காட்சி
தருகிறாளோ... அதேபோல், முருகப்பெருமானும் ஒவ்வொரு அலங்காரத்தில் அழகுத்
ததும்பக் காட்சி தருவது, இந்தத் தலத்தின் சிறப்புகளில் ஒன்று.
''விஜயதசமி நாளில், இந்தக் கோயிலின் உத்ஸவர்
ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமி, ஸ்ரீகாளியம்மன் சந்நிதிக்கு வருவார். அங்கே
இரண்டு பேருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். விசேஷ பூஜைகள்
நடைபெறும். மேலும் பழநியாண்டவர் கோயிலில் இருந்து, பராசக்தி வேலை
எடுத்துக்கொண்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஆலயத்துக்கு வருவார்கள். நவராத்திரி
முழுவதும் ஒவ்வொரு நாளும் முருகக்கடவுளுக்கும் அவரின் சக்திவேலுக்கும்
விசேஷ பூஜை நடைபெறுவதைத் தரிசித்தால், வாழ்வில் தீவினைகள் யாவும் அகன்று,
நிம்மதியும் பூரிப்புமாக வாழலாம்'' என்கிறார் இந்தக் கோயிலின் அமிர்தலிங்க
சிவாச்சார்யர்.
நவராத்திரி முடிந்ததும் சக்திவேலை எடுத்துச் சென்று, பழநிமலைக் கோயிலில் சேர்ப்பித்துவிடுவார்களாம்.
தினமும் காலையில் கோ பூஜைக்குப் பிறகு கோயிலின் நடை
திறக்கப்படும். தைப்பூசத் திருவிழாவின்போது முதலில் இங்கு கொடியேற்றிய
பின்னரே பழநி முருகன் கோயிலில் கொடியேற்றப்படும். அம்பிகைக்கு எதிரில்
சூரிய பகவான் சந்நிதி கொண்டிருப்பது சிறப்பு. பழைமை வாய்ந்த ஓவியங்களும்
நுட்பமான சிற்பங்களும் கொண்ட ஆலயம், பழநித் தலத்தில் இது ஒன்றே என்று
போற்றுகின்றனர், பக்தர்கள்.
செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை,
செவ்வாய்க்கிழமைகளில் வந்து வணங்கி வழிபட்டால், திருமணத் தடை அகலும்;
விரைவில் கல்யாண வரம் தகையும் என்பது நம்பிக்கை!
- உ.சிவராமன்
படங்கள்: வீ.சிவக்குமார்
சிவகங்கை
மாவட்டம், காரைக்குடியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது
கோட்டையூர். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கண்டனூர்.
இங்கே... நாட்டார், நகரத்தார் என சகல தரப்பினரையும் வாழ வைத்து
அருள்பாலித்து வருகிறாள் ஸ்ரீசெல்லாயி அம்மன்.
முன்னொரு காலத்தில், அருகில் உள்ள வையக்கருப்பர் எனும்
ஆலயத்தில் வைத்து செல்லாயி அம்மனை வழிபட்டு வந்தார்களாம். பிறகு, அம்மனைத்
தனிக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வழிபடலாம் என கிராம மக்கள் முடிவு செய்து,
ஊருக்குள்ளேயே அம்மனுக்குப் புதிய விக்கிரகம் அமைத்து பிரதிஷ்டை செய்து,
வழிபடத் துவங்கினார்கள்.
இன்றைக்கும் வையக்கருப்பர் ஆலயத்தில், ஸ்ரீஆதி செல்லாயி
அம்மன் விக்கிரகமும் சந்நிதியும் உள்ளன. சுமார் 200 வருடங்கள் பழைமை
மிகுந்த அம்மனின் ஆலயத்தில், வருடந்தோறும் பல விழாக்கள் சிறப்புறக்
கொண்டாடப்படுகின்றன.
எனினும், செல்லாயி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா
வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள், சொர்ண அங்கியில்
ஜொலிப்பாள் அம்மன். அடுத்த நாள், ராஜ அலங்காரத்தில் கம்பீரம் காட்டுவாள்.
3-ஆம் நாள் ஸ்ரீபைரவி அலங்காரத்தில் வாஞ்சையுடன் திகழ்பவள், 4-ஆம் நாளன்று
ஸ்ரீமகிஷாசுரமர்த்தினியாக உக்கிரம் காட்டுவாள். 5-ஆம் நாள் சந்தான
லட்சுமியாக அழகு ததும்ப தரிசனம் தருபவள், 6-ஆம் நாளில் சிவ- சக்தி
சொரூபமாகக் காட்சி தருவாள்.
அதையடுத்து, ஸ்ரீவனதுர்கையாகவும், ஞான சம்பந்தருக்கு
ஞானப்பால் வழங்குவது போன்ற அலங்காரத்திலும், ஸ்ரீஅன்னபூரணியாகவும், 10-ஆம்
நாளில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் கம்பீரமும் கருணையும் பொங்க
திருவீதியுலா வந்து அருள்பாலிக்கும் செல்லாயி அம்மனைத் தரிசித்துக்கொண்டே
இருக்கலாம்.
நவராத்திரி நிறைவு நாளில், ஸ்ரீசுந்தரேஸ்வரரும்
ஸ்ரீநிவாசப் பெருமாளும் இணைந்து ஸ்ரீசெல்லாயி அம்மனுடன் சேர்ந்து
திருக்காட்சி தருவது சிறப்பு.
வியாபாரம் செழிக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க
வேண்டும், வீட்டில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்க வேண்டும், கடன்
தொல்லையில் இருந்து விடுபடவேண்டும் என்று நவராத்திரியின்போது அம்மனை
வேண்டிக்கொண்டால், அதனை இனிதே ஈடேற்றித் தருவாள் செல்லாயி அம்மன் என்று
நம்பிக்கை பொங்கச் சொல்கின்றனர் பக்தர்கள்.
கண்டனூர், கோட்டையூர் பகுதியில் உள்ளவர்கள் நவராத்திரி
நாளில் ஸ்ரீசெல்லாயி அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு, காரைக்குடியில்
பிரசித்தி பெற்ற அம்மன் தலமாகத் திகழும் ஸ்ரீகொப்புடையம்மனையும் வணங்குவதை
வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவையக்கருப்பர், ஸ்ரீஆதி செல்லாத்தா, ஸ்ரீஅஷ்டதேவர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
- சு.மணிகண்டன், படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்
திருநெல்வேலி
- பாபநாசம் செல்லும் வழியில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 25 கி.மீ.
தொலைவில் உள்ளது வீரவநல்லூர். இங்கே, ஊருக்கு நடுவே, பிரமாண்டமான கோயிலில்
குடியமர்ந்து, ஊர்மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்
ஸ்ரீவிக்கிரபாண்டீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள்.
இங்கே, ஸ்ரீவிக்கிரபாண்டீஸ்வரராக சிவனார் கிழக்குப்
பார்த்தபடியும் உமையவள் ஸ்ரீசெண்பகவல்லி அம்பாளாக தெற்கு முகமாவும் தன்
பரிவார மூர்த்திகளுடன் அழகுறத் தரிசனம் தருகின்றனர்.
ஒருகாலத்தில், செண்பக வனமாகத் திகழ்ந்ததாம் இந்தப்
பகுதி. அப்போது இந்த ஊர், 'முடி வழங்க பாண்டி சதுர்வேதி’ என
அழைக்கப்பட்டது. குலசேகர பாண்டிய மன்னனின் காலத்தில், இந்த வனப்பகுதியில்,
சிவலிங்கத் திருமேனி சுயம்பு மூர்த்தமாக வெளிப்பட்டதாம்! சிலிர்த்துப் போன
மன்னன், இந்த இடத்தில் லிங்கத் திருமேனியை அப்படியே பிரதிஷ்டை செய்து,
அழகிய ஆலயம் அமைத்து, வழிபடத் துவங்கினான் என்கிறது ஸ்தல வரலாறு. செண்பக
வனத்தில் கோயில் அமைக்கப்பட்டதால், அம்பாளுக்கு ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள்
எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர்.
பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, ஐப்பசி
அன்னாபிஷேகம், திருவாதிரை என சிவனாரைப் போற்றிக் கொண்டாடுகிற பல விழாக்கள்
விமரிசையாக நடைபெறும் இந்த ஆலயத்தில், நவராத்திரி இன்னும் கோலாகலமாகக்
கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் ஸ்ரீகணபதி ஹோமத்துடன் துவங்கும். பிறகு
ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அப்போது ருத்ர
பாராயணமும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும் சிறப்புற நடைபெறும்.
நவராத்திரி நாட்களின் ஒவ்வொரு நாளும் ஸ்ரீபார்வதி,
ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபகவதி,
ஸ்ரீஆண்டாள், ஸ்ரீதுர்கை, ஸ்ரீசரஸ்வதி என ஒவ்வோர் அலங்காரத்தில்
அற்புதமாகத் தரிசனம் தருவாள் ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள். இந்த நாளில்,
அம்பிகையைத் தரிசித்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்தால், விரைவில்
நினைத்தது நடந்தேறும் என்பது ஐதீகம்!
நவராத்திரியின்போது... இந்த ஊரில் இருந்தும்,
சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் அம்பாளைத் தரிசிக்க வரும் பெண்கள்,
கையுடன் பொம்மைகளைக் கொண்டு வருகிறார்கள். அதை, கோயிலில் உள்ள
கொலுமண்டபத்தில் வைத்து, பாட்டுப் பாடி வழிபட்டுச் செல்கின்றனர்.
ஆலயத்தின் இன்னொரு சிறப்பு... ஸ்ரீசெண்பகவல்லி
அம்பாளின் பீடத்தில், ஸ்ரீசக்ர யந்த்ரம் பதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசக்ர
பீடத்தில் நின்றிருக்கும் அம்பிகையையும் வடக்குப் பார்த்தபடி காட்சி தரும்
ஸ்ரீதுர்கையையும் தீபமேற்றி வழிபட்டால், பில்லி- சூனியம் முதலான ஏவல்
தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரிவினைகள் நீங்கி, ஒற்றுமையுடன்
இனிதே வாழ்வர் என்பது நம்பிக்கை!
நவராத்திரி நாளில், ஸ்ரீசெண்பகவல்லி அம்பாளை
வணங்குங்கள். நம் வாழ்க்கைச் சிக்கல்களையெல்லாம் களைந்து நம்மை வாழ்வாங்கு
வாழச் செய்வாள், தேவி!
- கட்டுரை, படங்கள்: தி.ஹரிஹரன்
திருநெல்வேலி
நெல்லையப்பர் ஆலயத்தில் விளக்குகள் ஏற்றும் பணி செய்து வந்தார் அன்பர்
ஒருவர். கோயிலுக்கு வந்த சந்நியாஸி ஒருவர், இந்த அன்பருக்கு அபிராமி
அந்தாதியின் ஒரு பாடலைச் சொல்லிக்கொடுத்திருந்தார். அன்பரும் தினமும்
இந்தப் பாடலைப் பாடி அம்பாளை வழிபட்டு வந்தார்.
ஒருநாள், அப்போது நெல்லைச் சீமையை அரசாண்ட மன்னன்
கோயிலுக்கு வந்தார். தன்னுடைய மந்திரியின் சூழ்ச்சிகளையும் சதிகளையும்
வெல்லும் மார்க்கத்தையும் வல்லமையையும் வேண்டி, கோயிலுக்கு வந்திருந்தார்
அரசர். அதே நேரம் சந்நியாஸி சொல்லிக் கொண்டிருந்த பாடலை உரக்கப்
பாடிக்கொண்டிருந்தார் அன்பர். அதைக் கேட்ட அரசருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
அவரைப் பார்த்ததும், மந்திரியாகும் தகுதி அனைத்தும் அந்த அன்பரிடம்
இருப்பதாக உணர்ந்தார். சற்றும் தாமதிக்காமல் தனது அமைச்சரை பதவியை விட்டு
விலக்கி, அன்பரை மந்திரியாக்கினார்.
அன்பரை அமைச்சராக்கிய உன்னத பாடல் இதுதான்:
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனை யாள்அடித் தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவமுடை யார்க்கு உளவாகிய சின்னங்களே
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனை யாள்அடித் தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவமுடை யார்க்கு உளவாகிய சின்னங்களே
அம்பாள் அடியார்க்கு உரிய சின்னங்களான சில செல்வ
அடையாளங்களை விவரிக்கிறது இந்தப் பாடல். நவராத்திரி புண்ணிய காலத்தில்
இந்தப் பாடலைப் பாடி அம்பிகையை வழிபட, அந்தச் செல்வங்கள் நமக்கும்
கிடைக்கும்.
- பி.சந்திரமௌலி
'யாதேவி சர்வபூதேவி
மாத்ரு ரூபேன சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
மாத்ரு ரூபேன சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
- என்று தேவியை நமஸ்கரித்துப் பிரார்த்திப்பது சிறப்பு
என்கின்றன ஞானநூல்கள். சிறப்புகள் பல கொண்ட ஸ்ரீஅன்னை ஜகன்மாதா, ஈரேழு
பதினான்கு லோகங்களையும் படைத்துக் காத்தருளி வருகிறாள். அவளைப் போற்றிச்
சிறப்பிக்கும் விதமாக பல வழிபாட்டு முறைகள் இருந்தாலும், நவராத்திரி நாளில்
அவளைப் போற்றி வழிபடுவது கூடுதல் பலனையும் மகிழ்ச்சியையும் தரும்.
மதுரை தெப்பக்குளத்தையும் அருகில் உள்ள மாரியம்மன்
கோயிலையும் அனைவரும் அறிவர். அந்தத் தெப்பக்குளத்தின் இன்னொரு பகுதியில்,
அழகிய பிரமாண்டமான ஸ்ரீமுக்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளதை அறிவீர்களா?
ஒருமுறையேனும், ஸ்ரீமுக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்து
தரிசியுங்கள். உண்மையிலேயே ஞானமும் யோகமும் தருவதுடன் முக்தியும்
தந்தருள்வார் ஸ்ரீமுக்தீஸ்வரர். இங்கு அம்பாளின் திருநாமம் ஸ்ரீமரகதவல்லி
அம்பாள்.
சிவனாரின் 64 திருவிளையாடல்களில், ஐராவதம் யானையின்
சாபம் நீக்கிய திருவிளையாடல் நிகழ்ந்த அற்புதமான திருத்தலம் இது. சூரிய
பகவான் தன் கதிர்களால் இறைத் திருமேனியை வணங்கும் தலங்களில் முக்தீஸ்வரர்
கோயிலும் ஒன்று.
இங்கே மகா சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருவாதிரைத்
திருவிழா, சித்திரைப் பெருவிழா எனப் பல விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன.
குறிப்பாக, நவராத்திரியை ஒட்டி பத்து நாள் விழாவும் ஏக அமர்க்களமாக
நடைபெறும் என்கின்றனர் பக்தர்கள்.
பிரமாண்ட கொலு காட்சிகள், அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அலங்காரம், சிறப்பு பூஜைகள், திருவீதியுலாக்கள் என விமரிசையாக
நடைபெறுவதைக் காண, மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம்
பக்தர்கள் திரண்டு வந்து, தரிசித்து அருள்பெற்று செல்வார்கள்.
புரட்டாசி அமாவாசைக்கு மறு நாளில் தொடங்கி விஜயதசமி
வரை, ஒவ்வொரு நாளும் மாலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்,
பூஜைகள் என நவராத்திரி கோலாகலங்கள் நடைபெறும். இந்த நாளில் அம்மனுக்கு
அரளிப்பூ மாலை சார்த்தி, மனதார வேண்டிக்கொண்டால், மாங்கல்ய பலம் காப்பாள்
அம்பிகை என்று போற்றுகின்றனர் பெண்கள்.
முதல் மூன்று நாள் ஸ்ரீதுர்கையாகவும், அடுத்த மூன்று
நாள் ஸ்ரீலட்சுமியாகவும், நிறைவான மூன்று நாட்களும் ஸ்ரீசரஸ்வதிதேவியாகவும்
பாவித்து, வழிபாடுகள் சிறப்புற நடைபெறுகின்றன. இந்த நாட்களில் இங்கு வந்து
வணங்கினால் கல்வி, செல்வம், மனோ தைரியம் என அனைத்தும் கிடைக்கப் பெற்று,
சகல ஐஸ்வரியங்களுடன் வாழலாம் என்பது ஐதீகம்.
vikatan
No comments:
Post a Comment