அறிவியல் பார்வை, முற்போக்கு, நாகரிகம்... என்றெல்லாம் கதை அளக்கும்
இங்கிலாந்து இலக்கிய ஆர்வலர்களுக்கு மந்திர தந்திரக் கதைகளின் மீதான
மயக்கமும் எப்போதும் இருக்கும்.அதுதான் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசிலும்
எதிரொலித்து இருக்கிறது. 'மேன் புக்கர் பரிசு’க்காக இந்த ஆண்டு 'தி
லூமினரீஸ்’ என்ற ஒரு நாவலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 'விக்டோரியா
காலத்து எழுத்து நடையில் இந்த மர்ம நாவல் எழுதப்பட்டிருக்கிறது’ என்று
கொண்டாடப்படும் இந்த நாவல், 19-ம் நூற்றாண்டின் பின்னணியில்
அமைக்கப்பட்டிருக்கிறது.
வால்டர் மோடி (மூடி) என்ற பேராசைக்காரன் ஒருவன்,
குறுக்கு வழியில் பணக்காரனாக, தங்கச் சுரங்கத்தைத் தேடி நியூஸிலாந்து
நாட்டுக்கு வருவதாக இந்த நாவல் ஆரம்பிக்கிறது. ஜோசியத்தோடு பின்னிப்
பிணைந்து எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில், 12 ராசிகளை
நினைவுபடுத்துவதுபோல மொத்தம் 12 அத்தியாயங்கள். பௌர்ணமி நிலவு தேய்ந்து
அமாவாசையாக மறைவதை நினைவுபடுத்துவதைப்போல இந்த நாவலின் பக்கங்களும்
அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, முதல் அத்தியாயத்தில் இருப்பது 358
பக்கங்கள் என்றால், இரண்டாவது அத்தியாயத்தில் அதில் பாதி அளவுதான். ஒவ்வொரு அத்தியாயமும் இப்படியே தேய்வதால், கடைசி அத்தியாயத்தில் வெறும் இரண்டு பக்கங்கள்தான்.
சரி, பாத்திரப் படைப்பு?
கதையில் ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரங்களுக்கும்
அதனதன் ராசிப்படிதான் நல்லதும் கெட்டதும் நடக்கின்றன. அந்த ஊரில், மர்மமான
முறையில் ஏற்படும் மரணங்களைப் பற்றியும் காணாமல்போகும் நபர்களைப்
பற்றியும், இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றியும் ஆராய்வதாக
நகரும் இந்த மர்மக் கதையில் ஆவிகளுக்கும் மாந்திரீகத்துக்கும் பஞ்சமே
இல்லை.
இதுதவிர, இந்தக் கதையை இங்கிலாந்து நாட்டவர் கொண்டாட இன்னொரு காரணமும்
உண்டு. இதை எழுதிய எலேனார் கேட்டன் என்ற நியூஸிலாந்து நாட்டுப் பெண்ணுக்கு
28 வயதுதான் ஆகிறது. இந்தப் பெண்ணுக்கு இதுதான் இரண்டாவது நாவல். ஒரு
பெண்ணுக்கு இந்தப் பரிசு கிடைத்தது மட்டும் பெரிய விஷயம் அல்ல. இந்த ஆண்டு
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 13 நாவல்களில், ஏழு நாவல்கள் பெண்
எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. அடுத்ததாக, இந்தப் பரிசின் தன்மையே அடுத்த
ஆண்டிலிருந்து மாறப்போகிறது. இந்த புக்கர் பரிசு ஆரம்பிக்கப்பட்டதில்
இருந்து, அதாவது 1969-ம் ஆண்டில் இருந்து, இங்கிலாந்து மற்றும் அதன் காலனி
ஆதிக்கத்தில் இருந்த நாட்டவர்கள் (காமன்வெல்த் நாடுகள்) எழுதும்
நாவல்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. ஆனால், அடுத்த ஆண்டில் இருந்து
உலகத்தின் எந்த நாட்டில் எழுதப்படும் ஆங்கில நாவலுக்கும் இந்தப் பரிசு
வழங்கப்படப்போவதால்... புக்கர் பரிசை இதன் ஒரிஜினல் சட்டதிட்டப்படி வென்ற
கடைசி எழுத்தாளர் என்ற பெருமையும் எலேனார் கேட்டனுக்கு கிடைத்திருக்கிறது.
புக்கர் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை நியூசிலாந்து நாட்டில் இந்த
நாவல் வெறும் 6,000 பிரதிகள்தான் விற்பனையாகி இருந்தது. புக்கர் பரிசால்
இந்த நாவலின் விற்பனை எத்தனை மடங்கு உயரப்போகிறது என்பது போக போகத்தான்
தெரியும்.
- பி.ஆரோக்கியவேல்
No comments:
Post a Comment