மீண்டும் பி.சி.சி.ஐ.யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்
ஸ்ரீனிவாசன். பி.சி.சி.ஐ.யின் தெற்கு மண்டல கிரிக்கெட் சங்கங்களின்
முழுமையான ஆதரவு இருந்ததால் அவர்மீது யாரும் கை வைக்க முடியவில்லை.
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான சர்ச்சைகளால், ஸ்ரீனிவாசன்
பி.சி.சி.ஐ.யை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆங்கில ஊடகங்கள் தொடர்ந்து
போராடிக் கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றமும் பி.சி.சி.ஐ.யின்
நடவடிக்கைகள் குறித்து பல
கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சூழலில், ஸ்ரீனிவாசனின் இந்த ஆதிக்கமும்
எதிர்நீச்சலும் எப்படிச் சாத்தியமாயின? தமிழ்நாட்டின் வலுவான மனிதர் என்று
ஸ்ரீனிவாசனை
ஊடகங்கள் குறிப்பிடுவதன் பின்னணி என்ன?
இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடட் (ஐ.சி.எல்.) நிறுவனத்தை 1946ல் தொடங்கியவர்,
ஸ்ரீனிவாசனின் தந்தை டி.எஸ்.நாராயணசுவாமி. 1968ல் தந்தை இறந்த பிறகு,
அமெரிக்காவில் கெமிகல் இன்ஜினீயரிங் படித்துக் கொண்டிருந்த
ஸ்ரீனிவாசன், உடனே இந்தியா சிமெண்ட்ஸோடு தம்மை இணைத்துக் கொண்டார். இந்தியா
சிமென்ட்ஸின் நிர்வாக இயக்குனர் ஆனபிறகு, வரிசையாக கோரமண்டல் சிமென்ட்ஸ்,
விசாகா சிமென்ட்ஸ், ஸ்ரீவிஷ்ணு சிமென்ட்ஸ், அருணா சுகர்ஸ்
போன்ற நிறுவனங்களை வாங்கியதோடு, 1998ல், ஆந்திராவில் மிகவும் லாபத்துடன்
இயங்கிய ராசி சிமென்ட்ஸையும் தம்வசப்படுத்தினார். பிஸினஸ் பத்திரிகைகளின்
பாராட்டுகளோடு நட்சத்திரத் தொழிலதிபராக ஆனது அப்போதுதான்.
ஏ.சி. முத்தையாவின் உதவியால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குள்
(டி.என்.சி.ஏ.) நுழைந்தார் ஸ்ரீனிவாசன். 1995ல், ஸ்ரீனிவாசன்
டி.என்.சி.ஏ.வின் வைஸ் பிரசிடெண்ட் ஆனார். 2005ல் பி.சி.சி.ஐ.யின்
பொருளாளர்.
இதன் பிறகு, ஏறுமுகம்தான். 2008ல், பி.சி.சி.ஐ.யின் செயலாளர். 2011லிருந்து
பி.சி.சி.ஐ. யின் தலைவர். ஸ்ரீனிவாசனுக்கும் ஐ.சி.எல்.க்கும் பலமான
கிரிக்கெட் பின்புலம் உண்டு. கிரிக்கெட்டில் பணப்புழக்கமே
இல்லாத சமயத்தில், 1965லேயே கிரிக்கெட் வீரர்கள் ஐ.சி.எல்.லில் முழு நேரப்
பணியாளர்களாக வேலைக்குச் சேர்ந்தார்கள். இன்று, தோனி, ஐ.சி.எல்.ன் வைஸ்
பிரசிடெண்ட். அஸ்வின், பத்ரிநாத், தினேஷ் கார்த்திக், பாலாஜி
உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஐ.சி.எல்.ன்
ஊழியர்கள். பணம், அதிகாரம், அரசியல் பலம் போன்ற பக்க பலங்களில்லாமல்
ஸ்ரீனிவாசனால் இவ்வளவு உயரத்துக்கு வளர்ந்திருக்க முடியாது. அந்தப்
பலங்கள்தான்
அவரை சோதனையான கால கட்டத்திலிருந்தும் காப்பாற்றி வருகின்றன.
பி.சி.சி.ஐ. விதிகளின்படி, எந்த ஒரு நிர்வாகியும் பி.சி.சி.ஐ. நடத்தும்
மேட்சுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் நேரடியாகப் பங்கெடுத்து வர்த்தகத்தில்
ஈடுபடக்கூடாது. ஆனால், ஸ்ரீனிவாசனுக்காகவே 2008ல் விதிமுறை மாற்றப்பட்டது.
ஆந்திராவின்
ஜகன்மோகன் ரெட்டியின் சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றப் பத்திரிகையிலும்
ஸ்ரீனிவாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.தம் பதவியின் மூலமாக நினைத்த காரியங்களை முடித்துக் காட்டுகிறார் என்கிற
விமரிசனம் ஸ்ரீனிவாசன் மீது உள்ளது. சென்ற வருடம், இந்தியத் தேர்வுக் குழு,
தோனியை கேப்டன்
பதவியிலிருந்து நீக்க முயற்சி செய்தபோது அதைத் தடுத்து நிறுத்தினார்
ஸ்ரீனிவாசன். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் ஓய்வூதியத் திட்டம்
என்கிற பெயரில்
ஒவ்வொருவருக்கும் ரூ. 60 லட்சத்திலிருந்து ஒன்றரை கோடி வரை அளிக்கப்பட்டது.
இதனால்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட யாரும் ஸ்ரீனிவாசனுக்கு
எதிராகப் பேசுவதில்லை
என்கிற குறை பலருக்கும் உண்டு. இந்த வருட ஐ.பி.எல்.லின்போது, ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக ராஜஸ்தான் அணியின்
மூன்று கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாய்
குருநாத் மெய்யப்பனைச் சூதாட்டம் தொடர்பாக
மும்பை போலீஸ் கைது செய்தபிறகு, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மருமகனின்
தவறுக்குப் பொறுப்பேற்று ஸ்ரீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று
எதிர்ப்புகள் கிளம்ப தற்காலிகமாக பதவி விலகினார். இப்போது, ஏகோபித்த
ஆதரவுடன்
மீண்டும் தலைவர் ஆகியிருக்கிறார். ஸ்ரீனிவாசன் பதவியில் நீடிப்பது தொடர்பான வழக்கில், அவர் ஐ.பி.எல்.லில்
இருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
கருத்துத் தெரிவித்துள்ளது. இனி
பி.சி.சி.ஐ.யின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் உச்ச நீதிமன்றத்தில் பதில்
சொல்லியாக வேண்டிய நிலைமை. பி.சி.சி.ஐ.க்கும் ஸ்ரீனிவாசனுக்கும் இந்தக்
கண்காணிப்பு அவசியம்தான்.
ச.ந.கண்ணன்
No comments:
Post a Comment