ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்களில் பட்டும் படாமலும் தனது 125
ஆண்டுப் பாரம்பரியத்துடன் காட்சியளிக்கும் ‘அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கம்’
பற்றித் தெரியுமா?
அரசினால் அமைக்கப்பட்ட வணிகநோக்கற்ற டிரஸ்டே இந்தக் கொட்டகையை நடத்துகிறது.
இதற்குத் தமிழக கவர்னர் ஒரு புரவலர், மாவட்ட ஆட்சியரே டிரஸ்ட்டின் தலைவர்
என்றால் நம்ப முடிகிறதா? ஊட்டியில் தங்கிய ஆங்கிலேயரின் பொழுதுபோக்காக உருவானது இந்தத் தியேட்டர்.
அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வெலிங்டன் சீமானின் மனைவி ஐம்பதாயிரம்
ரூபாய்க்கு இக்கொட்டகையை பிரவுன்
என்பவரிடம் இருந்து வாங்கினார். அதில் அன்றாடம் ஆங்கில நாடகங்கள், பேண்டு
வாத்திய இசை என அரங்கேறியதாம். பின்னர் திரைப்படங்கள் கோலோச்சத் தொடங்கிய
பின்னர், இதில் ஆங்கிலப் படங்கள்
மட்டுமே திரையிடப்பட்டு வந்தனவாம். 1939ஆம் ஆண்டு முதல் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய், 50 பைசா என்ற கட்டணங்கள்
வசூலித்ததாம் இத்தியேட்டர். இதில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்
‘சிந்தாமணி’. அது 4000 ரூபாய் வசூலித்து சாதனை
செய்ததாம். இந்தத் திரையரங்கில் மைசூர் மகாராஜா, அண்ணாதுரை, அமிதாப்பச்சன்,
ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் படம் பார்த்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான திரையரங்குகள்
மூடுவிழா கண்டுவரும் இந்தக் காலகட்டத்தில் 125 ஆண்டுகால பாரம்பரியத்தை
தொடர்ந்து வருவது ஊட்டிவாசிகளுக்கு மட்டுமல்ல திரை உலகினருக்கே
பெருமைக்குரிய விஷயம்தான். இன்றளவில் திரைப்படம் பார்க்க
100 ரூபாய், 200 ரூபாய் கட்டணங்கள் வசூலிக்கப்படும் சூழலில் 4 ரூபாய்
கட்டணத்தில் சொகுசு இருக்கையில் அமர்ந்து ஊட்டி அசெம்ப்ளி ரூம்ஸ்
திரையரங்கில் இன்றும் படம் பார்க்கலாம் என்பதுதான் சிறப்பு!சமீபத்தில் புதுப்பிக்க இத்தியேட்டரில் புதிய சவுண்ட் சிஸ்டம், புதிய
புரொஜக்டர்கள் பொருத்தப்பட்டன. பழமை மாறாமல் இன்றும் ஆங்கிலப் படங்களோடு
தமிழ்ப்
படங்களும் அவ்வப்போது இத்தியேட்டரில் திரையிடப்படுகின்றன.
No comments:
Post a Comment