ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, தெலங்கானா என்று பல
தலைவலிகளில் சிக்கித் தவித்து பரிதவித்துக் கொண்டு இருக்கும்
காங்கிரசுக்கும் மேலும் ஒரு சிக்கலாய் வந்துசேர்ந்து இருக்கிறது
காமன்வெல்த் மாநாடு. நவம்பர் 14ஆம் தேதி கொழும்புவில் தொடங்கவிருக்கும்
இம்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று உண்ணா விரதங்களும்
ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தில் அன்றாட நிகழ்வாகிவிட்ட நிலையில்
அடுத்த சில நாள்களில் இன்னமும் பலமான குரல்கள் காங்கிரஸைத் தாக்க
இருக்கின்றன. என்ன செய்யும் காங்கிரஸ்?
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஒருகாலத்தில் அடிமையாக இருந்த
நாடுகள் ஒன்றுகூடி தங்கள் பொது நன்மைக்காக அமைத்துக் கொண்டதுதான்
காமன்வெல்த் அமைப்பு. பல்வேறு நாடுகளில் நிலவும் பிரச்னைகள்,
பொருளாதார நெருக்கடிகள், நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் போன்ற பல
அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் ஒரு தளமாக இருப்பதுதான் காமன்வெல்த்
அமைப்பு.மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோதச் செயல்கள் ஆகியவற்றைக் கண்டித்தும்
அவற்றைக் கட்டுப்படுத்தாத உறுப்பு நாடுகளை, அமைப்பைவிட்டே நீக்கவும்
செய்யும் இந்த அமைப்பு. தற்சமயம் இந்த
அமைப்பில் 54 நாடுகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சிறிய,
மிகச்சிறிய நாடுகள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அமைப்பு கூடுகிறது.
இதுவரை 21 முறை கூடியிருக்கிறது. இதில் ஒரே
முறைதான் இந்தியாவில் கூடியிருக்கிறது.இலங்கையில் முதன்முறையாக காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கிறது. இதற்கான
ஏற்பாடுகள் கொழும்புவில் அமர்க்களமாக நடந்து வருகின்றன. எந்த நாட்டில்
நடக்கிறதோ
அந்த நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த்
அமைப்பின் தலைவராக இருப்பார். இங்கேதான் பிரச்னை தலைதூக்குகிறது.
போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களுக்காக ஐ.நா.வின் மனித உரிமை ஆணைய
விசாரணையைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது இலங்கை. காமன்வெல்த்
அமைப்புக்கு
ராஜபட்சே தலைவராக வந்துவிட்டால், அவருக்கு இயல்பாகவே ஒரு பாதுகாப்புக்
கவசம் (இம்யூனிட்டி) கிடைத்துவிடும். காமன்வெல்த் அமைப்பில் இருக்கும்
நாடுகள் ராஜபட்சேவை இக்கட்டில் இருந்து
காப்பாற்றவே முயலும். அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு இந்தியாவும் தள்ளப்படக்
கூடாது. மாநாட்டில் இந்தியா பங்கேற்காமல் இருந்தால் போர்க்குற்றங்களுக்காக
ராஜபட்சே அரசுக்கு
ஒரு எச்சரிக்கை விடுவது போல இருக்கும். முள்ளிவாய்க்கால் இன அழிப்பை
கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்ததாக இந்தியா மீது ஏற்கெனவே பழி
இருக்கிறது. மேலும் மேலும்
ஈழத்தமிழர்களுக்கு விரோதமான செயல்களில் மத்திய அரசு இறங்கக்கூடாது.
உண்மையில் பார்க்கப் போனால், இந்த மாநாட்டை நடத்தும் தகுதி இலங்கைக்குக்
கிடையாது. எங்கு மனித
உரிமை மீறல்களும் சர்வாதிகாரப் போக்கும் தலைதூக்குகிறதோ அங்கு மாநாடு
நடத்தக் கூடாது என்று காமன்வெல்த் அமைப்பின் விதிகளே சொல்லுகின்றன. இனவெறி
குற்றத்துக்காக தென்னாப்பிரிக்காவை
இந்த அமைப்பில் இருந்து முன்பு நீக்கி வைத்திருந்தார்கள்.
குற்றவாளிக்கூண்டில் நிற்கும் ராஜபட்சேவை காமன்வெல்த் நாடுகளின்
தலைவராக்கும் கொடுமைக்கு இந்தியாவும் ஒரு சாட்சியாக
இருக்கக்கூடாது. ‘சிங்கள அரசின் அராஜக இன அழிப்பைக் கண்டிக்கும் விதமாக
மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை’என்று கனடா பிரதமர்
அறிவித்திருக்கிறார். கனடாவுக்கு இருக்கும் அக்கறை
கூட இந்தியாவுக்கு இல்லாவிட்டால் தமிழர்களின் உணர்வை மத்திய அரசு ஒரு
பொருட்டாகக் கருதவில்லை என்பதுதானே பொருள்? வரும் மார்ச் மாதத்துக்குள்
போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. மனித உரிமை
அமைப்பில் ராஜபட்சே பதில் சொல்ல வேண்டும். அதிலிருந்து அவரை தப்புவிக்கும்
விதமான எந்த நடவடிக்கைக்கும் இந்தியா உதவியாக இருந்து விடக் கூடாது. அந்த
அடிப்படையில், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா
புறக்கணிக்க வேண்டும்.
இந்தியா பங்கேற்காவிட்டாலும் மாநாடு நடக்கத்தான் போகிறது. தமிழ்நாட்டில்
இருக்கும் தமிழர்கள் தான் இவ்வாறு குரல் கொடுக்கிறார்களே தவிர, இலங்கையில்
உள்ள தமிழ்
தேசியக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள், இந்தியா மாநாட்டில் கலந்து கொள்ள
வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். இலைகள் வெறுமனே இருந்தால்கூட காற்று
அவற்றை சும்மா
இருக்கவிடாது என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள்
தேவையில்லாமல் இந்தப் பிரச்னையில் சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள்.பிரதமர் மட்டும் மாநாட்டைத் தவிர்க்கும் வாய்ப்பு இருக்கிறது.
இங்கே எல்லாமே அரசியல்தான்.
No comments:
Post a Comment