Search This Blog

Friday, October 11, 2013

ஓ பக்கங்கள் - சர்ச்சைகள் ஓயாத டயானா! ஞாநி

 
பாரிஸில் ஈஃபல் டவருக்கருகே ஸீன் நதிக்கு மறுபுறம் ஒரு சுரங்கப் பாதை இருக்கிறது. இதில் நடந்த கார் விபத்தில்தான் பிரிட்டிஷ் இளவரசி டயானா மரணமடைந்தார். டயானா இறந்த இடத்துக்கு மேலே கைப்பிடிச் சுவரில் டயானா அபிமானிகள் விதவிதமான அஞ்சலிக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்கள். 
 
டயானாவும் அவரது புது சிநேகிதர் டூடி ஃபாயிதும் வந்த காரை பரபரப்புச் செய்திகளுக்காக அலையும் புகைப்படக்காரர்கள் துரத்தி வந்தபோது, விபத்து ஏற்பட்டது. டயானா வந்த கார் டிரைவர் மது வேறு குடித்திருந்தார். புகைப்படக்காரர்கள் கார்கள் நெருங்க விடாமல் வேகமாகச் செல்ல அவர் முயன்றபோது விபத்து ஏற்பட்டது. டிரைவர், டயானா, ஃபாயிது மூவரும் இறந்தார்கள். இது விபத்து இல்லை, கொலைச் சதி என்றே இன்று வரை ஃபாயிதின் தந்தையும் மிகப் பெரிய ஹரோட் கடைகளின் உரிமையாளருமான முகமது அல் ஃபாயிது சொல்லி வருகிறார். எகிப்து நாட்டு முஸ்லிமான தங்கள் குடும்பத்துடன் டயானா மண உறவு கொண்டுவிடக் கூடாது என் பதற்காக பிரிட்டிஷ் உளவுப் பிரிவினர் இந்தக் கொலைகளைச் செய்ததாக அவர் சொல்கிறார்.
 
டயானா இறந்த சுரங்கப்பாதை அருகே ஒரு தங்கத்தாலான ‘விடுதலைச் சுடர் சிலை’ இருக்கிறது. இதையே டயானாவுக்கான நினைவுச் சின்னம் என்று பல டூரிஸ்ட்டுகள் கருதுகிறார்கள். டூரிஸ்ட் கைடுகளும் இதை டயானா மெமோரியல் என்று குறிப்பிடுகிறார்கள். டயானா இறந்தது 1997ல் இந்தச் சிலை நிறுவப்பட்டது 1989ல்!
 
இந்த விடுதலைச் சுடர் என்பது அமெரிக்காவில் இருக்கும் லிபர்டி சிலைப் பெண்ணின் கையில் இருக்கும் சுடர் மாதிரி. இந்தச் சிலை வைக்கப்படக் காரணமாக இருந்தது ஒரு பத்திரிகை. இன்டர் நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் என்ற ஏடு பிரான்சி லிருந்து வெளியாகும் ஆங்கில ஏடு. 1987ல் இது நூற்றாண்டைக் கொண்டாடியபோது பிரான்சுக்கு நன்றி தெரிவிக்க இந்தச் சிலை அதன் வாசகர்களின் நன்கொடையால் உருவாக்கப்பட்டது. 1997ல் டயானா இறந்ததும் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள் மலர் வளையங்கள், பூச்செண்டுகளையெல்லாம் இந்தச் சிலைக்குக் கீழே வைத்ததில் இது டயானாவின் நினைவுச்சின்னம் ஆக்கப்பட்டு விட்டது. உண்மையில் டயானாவுக்கென்றே இரு நினைவுச் சின்னங்களை எழுப்பியிருப்பவர் இறந்த டயானா சிநேகிதர் ஃபாயிதின் தந்தை முகமது ஃபாயிதுதான். தன் ஹரோட் கடைகளில் இந்த நினைவுச் சின்னங்களை அவர் வைத்திருக்கிறார். ஒன்று டயானா கடைசியாகப் பயன்படுத்திய மதுக்கோப்பை. இன்னொன்று டயானாவும் ஃபாயிதும் கைகோர்த்து நடனமாடும் சிலை. பின்னர் நான் லண்டன் சென்றபோது அங்கே பக்கிங்ஹாம் அரண்மனையில் டயானாவுக்கு ஏதாவது நினைவுச் சின்னம் இருக்கிறதா என்று தேடி னேன். பெரிதாக ஏதும் இல்லை. அரண்மனைக்குச் செல்லும் வழியில் நடைபாதையில் ஒரு வட்டத்தகடு பதித்திருப்பதை மட்டுமே பார்க்க முடிந்தது. அதில் ‘இளவரசி டயானா நினைவு நடை’ என்று பொறிக்கப்பட்டு பல கால்களில் மிதிபட்டு கொஞ்சம் உடைந்தும் போயிருக்கிறது.  இப்போது பாரிசில் டயானா இறந்த இடத்தில் இன்னொரு சர்ச்சை நடக்கிறது. டயானா என்ற பெயரில் வெளிவர இருக்கும் புதிய படத்துக்கான விளம்பரப் பலகைகளை இந்தச் சுரங்கப் பாதையருகே வைத்திருக்கிறார்கள். இது டயானாவை இழிவுபடுத்துவதாகும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. டயானா இறந்து 16 வருடங்களான பின்னரும் அவரையொட்டிய சர்ச்சைகள் ஓய்வதில்லை.
 
பாரீசில் நான் சென்ற இன்னொரு இடம் ஒரு ரயில்வே ஸ்டேஷன். இப்படிச் சொன்னால் விசித்திரமாகத்தான் இருக்கிறது. பாரீஸ் முதல் ஐரோப்பாவில் நான் சென்ற எல்லா ஊர்களிலும், விதவிதமான ரயில்வே ஸ்டேஷன்கள் இருக்கின்றன. சுரங்க ரயில், மெட்ரோ ரயில், அண்டர் கிரவுண்ட், டிராம் என்று பல வகை ரயில்கள் நிலையங்கள். நான் குறிப்பிடும் பாரீஸ் ஸ்டேஷன், ரயிலே இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.  இந்த ரயில் நிலையம் பாரீசில்ஸீன் நதியின் இன்னொரு கரையில் இருக்கும் ஆர்சே வீதியின் பிரம்மாண்டமான கட்டடம். முதலாம் நெப்போலியன் இங்கேதான் தம் வெளியுறவுத் துறைக்கென்று ஓர் அரண்மனையை நிர்மாணித்தான். அது பின்னாளில் எரிக்கப்பட்டு சிதிலமாயிற்று. அங்கே வேறென்ன கட்டலாம் என்று திட்டங்கள் வகுக்கப்பட்டன. கடைசியில் சுமார் 115 வருடங்களுக்கு முன்னால் இதைக் கட்ட ஆரம்பித்தார்கள். 1900ல் பாரீசில் நடக்க இருந்த எக்ஸ்போ கண்காட்சிக்குள் தயாராக வேண்டுமென்ற திட்டப்படி இந்த ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. எக்ஸ்போ கண்காட்சியில் பல உலக நாடுகள் பங்கேற்றன. அதைவிட முக்கியம் அதில் வைக்கப்பட்ட பல விஷயங்கள் இன்று சர்வசாதாரண விஷயங்களாக நடைமுறைக்கு வந்துவிட்டன என்பது தான். நகரும் படிக்கட்டு, பேசும் படம், டீசல் எஞ்சின் போன்றவை இந்த எக்ஸ்போவில்தான் அறிமுகமாகின. எக்ஸ்போவுக்குச் செய்த செலவுக்கு வருமானம் கம்மி. எக்ஸ்போ முடியும் சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதி (அமெரிக்காவில்) கொலை செய்யப்பட்டு விட்டதால் துக்கம் அனுசரிக்க தற்காலிகமாகச் சில தினங்கள் மூடிவைத்து பின் திறக்கப்பட்டது. பார்வையாளர் எண்ணிக்கை மிகக் குறைவு. எக்ஸ்போவில் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் பெரும் நஷ்டம். இதன் பின்னர் பாரீசில் சர்வதேசக் கண்காட்சிகள் நடத்தும் ஆர்வமே போய்விட்டது.
 
இதற்காகக் கட்டப்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டும் 1900 முதல் 39 வருடங்கள் நன்றாக இயங்கியது. ஆனால் அதன்பின் அந்த ரயில் நிலையம் போதாமல் போய்விட்டது. நடைமேடை யின் நீளத்தைவிட நீளமான புது ரயில்கள் வந்து விட்டன. எனவே 1939ல் இந்த நிலையத்தை மூடிவிட்டார்கள். 1970 வரை இது செயல்படவில்லை. இதையொட்டிக் கட்டிய ஓட்டல் மட்டும் செயல் பட்டது. இதை இடித்து இங்கேயும் பெரிய ஓட்டலாக்கிவிடலாம் என்று நினைத்தபோது புராதனச் சின்னங்களின் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்த்தன. 1878ல் கட்டப்பட்ட ஒரு உணவுப் பொருட்கள் மார்க்கெட்டை 1972ல் இடித்ததும் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியது. அந்த அலையில் இந்த ரயில் நிலையம் இடிபடாமல் தப்பிற்று.  

இதைக் கலைப் பொருட்களுக்கான மியூசியமாக ஆக்கிவிடலாம் என்ற யோசனை ஏற்கப்பட்டது. ஏற்கெனவே லூவ்ரு மியூசியம் ஒரு காலகட்டத்தை பிரதிபலிக்கிறது. மாடர்ன் ஆர்ட் மியூசியம் தற்காலத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே லூவ்ருவுக்கும் மாடர்ன் ஆர்ட் மியூசியத்துக்குமிடைப்பட்ட காலக் கலை வரலாற்றுக்கான மியூசியமாக ஆர்சே மியூசியத்தை உருவாக்கத் திட்டமிட்டார் கள். இங்கே 1845 முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தின் ஓவியம், சிற்பக் கலைப் படைப்புகளைப் பார்க்கலாம். ரயில் நிலையக் கட்டட அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும் செய்து மியூசியத்தை அமைத்தார்கள். உள்ளே நுழைந்ததும் இருபுறமும் டிக்கட் கவுன்டர், புக் ஷாப். பின்னர் நீண்ட பிளாட்பாரங்கள்; அவற்றின் இருபுறமும் தனித்தனி கூடங்கள். மாடியறைகளும் கூடங்களும் கூட உண்டு.நான் இந்த மியூசியத்துக்குச் சென்ற அன்றைய தினம் இலவச அனுமதி நாள். மாதத்தில் ஒரு ஞாயிறன்று இலவச அனுமதி என்பது பல மியூசியங்களில் இருக்கும் நடைமுறை. கட்டணம் இருக்கும் போதே மியூசியங்களில் பெரும் கூட்டம் இருப்பது வழக்கம். அன்றைய தினம் பின்னிப் பின்னி வளைந்து வரிசையில் நின்ற கூட்டத்தைப் பார்த்தால் நம் ஊரில் இலவச வேட்டி சேலை, டி.வி., மிக்ஸி வழங்கலில் மட்டுமே அத்தகைய கூட்டத்தைப் பார்க்க முடியும் என்பதை யோசித்துப் பார்த்தேன்.

No comments:

Post a Comment