Search This Blog

Friday, April 25, 2014

அர்த்தநாரீஸ்வரர்


நல்ல வெயில்... சோர்வாக நடந்து வந்து கொண்டிருந்தாள் கர்ப்பிணியான அந்த செட்டிப் பெண்! தாகம் அவளை வருத்தியது.சோலைகளும், பயிர்ப் பச்சைகளும் நிறைந்திருந்தபோதும் எங்கும் தண்ணீரைக் காண முடியவில்லை. தாகமும், களைப்பும் வாட்ட, அப்படியே மயக்கமானாள். அங்குக் கோயில் கொண்டிருந்த ஈசன், அவள் தாகத்தைத் தீர்க்க எண்ணினார். அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். தாகம் நீங்கி புத்துணர்வு பெற்றாள் அப்பெண். அந்தப் பெருமான் ‘குலைவணங்கி நாதர்’. தலம், வடகுரங்காடுதுறை.

இனி, ஆலயத்துள் நுழைவோம். ஐந்துநிலை கோபுரம். உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் நவக்கிரக சன்னிதி. அடுத்து அம்மன் சன்னிதி. அதன் எதிரில், சிவனை நோக்கிய நந்தியம்பெருமான். மேலே, ஈசனின் கயிலாயக் காட்சி கண்களுக்கு விருந்து! ஈசன் சன்னிதியின் வலப்பக்கம் ஐயனின் பிள்ளைகளான துவார விநாயகர், ஆறுமுகன், பூர்ணா புஷ்கலா சமேத அய்யனாரை வணங்குகிறோம்.  

கர்ப்பக்கிரகத்தில் சற்று குட்டையான பாணத்துடன் அழகுறக் காட்சி தருகிறார் தயாநிதீஸ்வரர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டுமின்றி, தன்னை வணங்கிய ஒரு சிட்டுக் குருவிக்கும்கூட அருள் செய்த இவ்விறைவன் ‘சிட்டுலிங்கேஸ்வரர்’ என்றும் போற்றப்படுகிறார். ஆலய விமானத்தில் கர்ப்பிணிக்கு இறைவன் அருளிய காட்சியும், சிட்டுக்குருவி, வாலி மற்றும் அனுமன் பூஜித்த காட்சிகளும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன!

ஹனுமன் வழிபட்ட ஐந்து சிவாலயங்களில் இதுவும் ஒன்று. கர்ப்பக்கிரகத்துக்கு முன்புள்ள மண்டபத்தில் ஹனுமன் இப்பெருமானை பூஜிக்கும் காட்சி அமைந்துள்ளது. இந்த ஹனுமனிடம் வேண்டிக் கொண்டு ஒரு மட்டைத் தேங்காயைக் கட்ட வேண்டும். காரியம் நடந்ததும் அந்தக் காயை அவிழ்த்துவிட்டு, ஹனுமனுக்கு வடைமாலை சாத்தி, தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டும்.

சுற்றுப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி எட்டு சீடர்களுடன் மோன நிலையில் காட்சி தருகிறார். குருபலம் வேண்டுவோர் இச்சன்னிதியில் வேண்டிக்கொண்டால் உடன் நிறைவேறும். படிப்பு, நல்ல வேலை வேண்டுவோர் இங்கு வழிபட்டு பலன் பெறலாம்.

கோஷ்டத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர். சிவனும், சக்தியும் இணைந்து, முறுவல் பூத்த முகத்துடன்... அய்யன் வலக்கையில் மழுவும், அம்மையின் இடக்கையில் மலரும் ஏந்தி நளினத்துடன் காட்சி தருகின்றனர். இவரை வணங்குவோரின் இல்லறம், நல்லறமாக விளங்கும். மன வேற்றுமை, விவாகரத்து இவற்றைப் போக்கி கணவன் - மனைவியை இணைத்து வைக்கிறார் இந்தப் பெருமான்.

இதற்கென பிரத்யேக பூஜை முறை உண்டு. அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை, ரோகிணி நட்சத்திரம், மாத சிவராத்திரி நாட்களில் ஒரு வெள்ளை நிற ரவிக்கை துணியையும், ஒரு மஞ்சள் நிற ரவிக்கை துணியையும் இணைத்துத் தைத்து சமர்ப்பிக்க வேண்டும். அர்த்தநாரீஸ்வரருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம், அர்ச்சனை செய்து, எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்தால், பிரிவு நீங்கி இருவரும் மனமொத்து வாழ்வர். இது கண்கூடாகப் பலர் வாழ்விலும் நடந்துள்ளதாக பக்தர்கள் அனுபவம்.

ஆலயத்தைச் சுற்றி வரும்போது, வள்ளி, தெய்வானை சமேத முருகன், கயிலாய லிங்கம், கஜலக்ஷ்மி, அஷ்டபுஜங்களுடன் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை என தரிசிக்கிறோம். ஐந்து வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து ராகு காலத்தில் இந்த துர்கைக்கு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்ற, தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். பெண்கள் தாலி பாக்கியம் பெறுவர். 

இங்கு அமைந்துள்ள நடராஜர் சபை கல்லினால் ஆனது. சனி பகவான் இங்கு திருநள்ளாறு போன்று தனியாகக் காட்சி தருகிறார். அவருக்கு எதிரில் கஜலக்ஷ்மி சன்னிதி இருப்பதால் பொங்கு சனியாகவும் போற்றப்படுகிறார். தவிர, காலபைரவர், சூரியன், நாகர், அப்பர், நாவுக்கரசர், சுந்தரர், செட்டிப்பெண்ணின் சிலை ஆகியவையும் உள்ளன.

வெளியில் வந்ததும் இடப்பக்கம் ஜடாமகுட நாயகியின் சன்னிதி. உயர்ந்த ஜடைகளால் ஆன கொண்டை அணிந்தவளாதலால் ஜடாமகுட நாயகி, அழகு சடைமுடியம்மை என்று திருநாமம். சன்னிதிக்கு வலப்புறம் வெளியில் கரம் பின்னமான அம்பிகை சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்மனின் கை பின்னமாகியதால் அந்தச் சிலையை அப்புறப்படுத்திவிட்டு, வேறு புதிய சிலை நிறுவப்பட்டதாகவும், அச்சமயம் அம்மன் ஒருவர் கனவில் வந்து தன்னையும் பூஜிக்கும்படி கூறியதால் பின்னப்பட்ட சிலைக்கும் வழிபாடு நடக்கிறது. உயர்ந்த கொண்டையுடன் நான்கு கரங்கள் கொண்டு, கீழிரண்டு கரங்கள் அபய, வரத ஹஸ்தங்களாகக் கொண்டு அழகு தேவதையாகக் காட்சி தரும் அம்மன் கண்களின் தீட்சண்யமும், கருணா கடாட்சமும் நம்மை நகர விடாமல் செய்கிறது.

பல்லாண்டுகட்கு முன் ஒரு சித்தர் மஹா மேருவை மண்ணால் பிரதிஷ்டை செய்து பூஜித்த புனிதமான தலம் இது. சத்ரபதி சிவாஜி பரம்பரையினர் மிக சிரத்தையுடனும், பக்தியுடனும் வழிபட அவர்களுக்கு ஓர் ஆண் சந்ததியை வாரிசாகத் தந்தவள் இந்த தேவி. இதற்காக, பௌர்ணமி நாட்களில் செய்யப்படும் முளைப்பயிறு பிரார்த்தனையினால் பயன் பெற்றோர் பலர். பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் முளை வந்த பச்சைப் பயிறை அம்மன் வயிற்றில் கட்டி, 5,7,9 என்ற ஒற்றைப்படை கணக்கில் மஞ்சளை திருமாங்கல்யக் கயிற்றில் கட்டி அம்மனுக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். மறுநாள் காலை ஆலயத்துக்குச் சென்று அம்மன் மடியிலிருந்து எடுத்து அர்ச்சகர் கொடுக்கும் முளைப்பயிறைத் தானும் சாப்பிட்டு, மற்றவருக்கும் விநியோகம் செய்ய வேண்டும். மஞ்சளை தினமும் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

இதுபோன்று ஐந்து பௌர்ணமிகள் தொடர்ந்து செய்ய, விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். கடைசி பௌர்ணமி அன்று நேரில் வந்து பிரார்த்தனையை பூர்த்தி செய்து, அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனையோடு சர்க்கரைப் பொங்கல் நிவேதனமும் செய்ய வேண்டும். இந்தப் பிரார்த்தனை மஞ்சளை தேய்த்துக் குளித்தால் மிக விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.  

தல விருட்சம் தென்னை. விவசாயிகள் நெல் நாற்றுகளையும், தென்னம் பிள்ளைகளையும் சன்னிதியில் வைத்து வழிபட்டு அதிக மகசூல் பெறுகின்றனர். ஆனி பௌர்ணமியில் ‘முப்பழ விழா’, ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல் சாற்று விழா, பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோத்சவமாக பங்குனி உத்திரத் திருவிழா, நவராத்திரி... என்று வருடம் முழுவதும் உத்சவங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி, தை வெள்ளிகளில் அம்மனின் அலங்காரம் காணக் கண்கொள்ளாக் காட்சி!


ராதா

No comments:

Post a Comment