நவீன காலத்தில்
பலவிதமான அறிவியல் இயந்திரங்களின் உதவியோடு நோய்களைப் பற்றி அறிந்து
மருத்துவம் செய்கிறார்கள். ஆனால், இப்படியான எந்தவித வசதியும் இல்லாத
அந்தக் காலத்தில் நம் ரிஷிகள் தவம் எனும் சீரிய சக்தியால் நவ கோள்களையும்
சாட்சியாக்கி, மனிதனுக்கு உண்டாகும் நோய் முதலான அத்தனை பாதிப்புகளையும்,
அவற்றை குணமாக்குவதற்கான கால நேரத்தையும், வழிமுறைகளையும் மிகத்
துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பது வியப்புக்கு உரியது.
மருத்துவ சிகிச்சையோடு தொடர்புடைய பல்வேறு விதமான
ஜோதிடத் தகவல்கள் நமது பழைமையான நூல்களில் உள்ளன. நம் முன்னோரால்
காலங்காலமாக கவனித்து, ஆராய்ந்து அறிந்து பதிவு செய்யப்பட்ட அந்தத்
தகவல்களில் சிலவற்றை நாமும் அறிவோம்.
நோய் அறிய ஜோதிடக் கூறுகள்...
1. பாவத்தில் உள்ள கிரகம்
2. பாவாதிபதி
3. பாவத்தைப் பார்க்கும் பிற கிரகங்கள்
4. பாவாதிபதியைப் பார்க்கும் பிற கிரகங்கள்
5. 6-ம் பாவத்தின் இயற்கை காரகர்களாகிய சனி மற்றும் செவ்வாயின் நிலை.
6. லக்னத்தின் பலம் மற்றும் பலவீனம்
7. லக்னாதிபதியின் பலம் மற்றும் பலவீனம்
8. லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு இருபுறமும் அசுபர் இருக்கும் பாவகர்த்தரி யோகம் ஏற்பட்டு இருத்தல்
9. சந்திரன் நிலை
10. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் அசுபர்
சிகிச்சையை ஆரம்பித்தல்...
நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது சிகிச்சையை
ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்கள்: அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம்,
புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை,
சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய 16
நட்சத்திரங்கள்.
சாதாரண காய்ச்சல் போன்ற உபாதைகள் பூரம், பூராடம்,
பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திர நாட்களில்
வந்தால் மட்டும் சிகிச்சை தேவை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்
முன்னோர்கள்.
வகிரகங்கள் குறிப்பிடும் நோய்கள்:
சூரியன்: கண் நோய்கள், காய்ச்சல், இதய நோய், படபடப்பு,
தோல் நோய்கள், எலும்பு நோய்கள், எலும்பு முறிதல், பித்தம் தொடர்பானவை, தலை
வழுக்கை விழுதல்.
சந்திரன்: இதய நோய், நுரையீரல் நோய், வயிற்றுப்போக்கு,
வாந்தியெடுத்தல், ரத்தநோய், உடலில் கட்டிகள், புற்றுநோய், தூக்கமின்மை,
மனநோய், காசநோய், கருப்பை தொடர்பான நோய்கள் மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள்.
செவ்வாய்: மார்பகத்தில் ஏற்படும் நோய்கள், ரத்தம்
தொடர்பான நோய்கள், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வலிப்புநோய், பித்தம்
தொடர்பான நோய்கள், சூட்டுப் புண்கள்.
புதன்: அனைத்துவிதமான மனநோய்கள்
குரு: மண்ணீரல், ஈரல், சிறுநீரகம், காது தொடர்பான நோய்கள், மஞ்சள்காமாலை, கட்டிகள், சிறுநீரில் உப்பு, மூலம், நீரிழிவு.
சுக்கிரன்: நீரிழிவு, முகம் தொடர்பான நோய்கள், கண்
நோய்கள், சிறுநீரக நோய்கள், ரத்தசோகை, பித்தம் தொடர்பான நோய்கள்,
வெள்ளைப்படுதல் எனும் பெண்கள் தொடர்பான நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள்.
சனி: மூட்டுவலி, பாரிசவாதம், காலில் ஏற்படும் நோய்கள், வயிற்று நோய், மன நோய், தசை வலி, வழுக்கை, நரம்பு தொடர்பான நோய்கள்.
ராகு: புற்று நோய், தோல் நோய், அம்மை, தொழுநோய்,
ஆஸ்துமா, மண்ணீரல் வீங்கிப்போதல், புழுக்களால் வரும் நோய்கள், அலர்ஜி
தொடர்பான நோய்கள், நரம்புகள் தொடர்பான நோய்கள்.
கேது: மன நோய், வயிற்று நோய், கட்டிகள், குறைந்த ரத்த
அழுத்தம், புழுக்களால் வரும் நோய்கள், ஆந்த்ராக்ஸ் போன்ற கிருமிகளால்
ஏற்படும் நோய்கள்.
பஞ்சாங்க நுணுக்கமும், சிகிச்சையும் ஞாயிற்றுக்கிழமை,
சதுர்த்தி திதி ஆகியவற்றுடன் திருவாதிரையோ, ஆயில்யமோ, மக நட்சத்திரமோ
சேர்ந்துள்ள நாளில் உடல் நலம் குன்றினால், தொடர் சிகிச்சை அவசியம் தேவை.
அதேபோன்று, கீழ்க்காணும் அமைப்புள்ள நாட்களிலும் உடல் நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவ சிகிச்சை அவசியப்படும்.
செவ்வாய் - நவமி - கேட்டை, சுவாதி, பரணி
சனிக்கிழமை - சதுர்த்தசி - பூரம், பூராடம், பூரட்டாதி
மேலும், ஒருவரது ஜன்ம நட்சத்திரம் அல்லது அந்த
நட்சத்திரத்துக்கு 3, 5, 7 -வது நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களிலும் நோய்
ஏற்பட்டால், துன்பம் மிகும்.
சிகிச்சைக்கு ஏற்ற நாளும் நட்சத்திரமும்
திங்கள் - அஸ்தம்
புதன் - அஸ்வினி
வியாழன் - சித்திரை
வெள்ளி - புனர்பூசம்
இந்தக் கிழமைகள் அல்லது நட்சத்திர நாட்கள் சிகிச்சை செய்ய உகந்தவை ஆகும்.
மேலும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்
தங்களது சுயவர்க்கங்களில் இருப்பதும், சர ராசி, உதய லக்னம் அல்லது
நவாம்சமாக இருப்பதும் சிறப்பு.
டைஃபாய்ட் போன்ற காய்ச்சலில் பாதிக்கப்பட்டோர் ஞாயிறு
அன்று நவமி, சதுர்த்தி, சதுர்த்தசி ஆகிய திதிகள் வரும் நாளில் சிகிச்சை
ஆரம்பிக்கலாம். ஆனால், அன்றைய நடப்பு நட்சத்திரம் பரணி, திருவாதிரை,
விசாகமாக இருக்கக் கூடாது.
உக்ர யோகம் உள்ள நாட்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் நோய் நிச்சயம் குணமாகும்.
உக்ர யோகம் காணும் முறை எப்படி தெரியுமா? கீழ்க்காணும் நட்சத்திரங்கள்- திதிகள் இணையும் நாள் உக்ரயோகம் கூடிய தினமாகும்.
நட்சத்திரம் திதி
1. ரோகிணி திருதியை, நவமி
2. உத்திரம் சதுர்த்தி
3. திருவோணம் பஞ்சமி
4. மிருகசீரிடம் சஷ்டி
5. ரேவதி சப்தமி
6. கிருத்திகை நவமி
7. பூசம் தசமி
8. அனுஷம் துவாதசி,திருதியை
9. கிருத்திகை, மகம் திரயோதசி
அறுவை சிகிச்சை செய்ய உகந்த நாட்கள்
வளர்பிறை காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது நன்று. அமாவாசை நாளில்
அறுவை சிகிச்சை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஜாதகரின் பிறந்த
ராசியில் சந்திரன் இருக்கும் நாளில் அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட
வேண்டும்.
செவ்வாய், சனிக்கிழமைகள் நன்று. செவ்வாய் வலுவாக இருப்பதும், 8-ம் இட சுத்தமும் முக்கியம்.
சதுர்த்தி திதி, திருவாதிரை நட்சத்திர இணைவும், கேட்டை
நட்சத்திரம் நவமியுடன் இருப்பதும், ஆயில்யம் அல்லது மூலம் திரயோதசியுடன்
இருப்பதும் நன்று.
ஆக, 'நோய் நாடி நோய் முதல் நாடி...’ எனும்
திருவள்ளுவரின் அறிவுரைப்படி செயல்படுவதுடன், உரிய காலத்தையும் கருத்தில்
கொண்டு சிகிச்சை மேற்கொண்டால், நோயிலிருந்து விடுபட முடியும்.
பிணிகளும் நட்சத்திரங்களும்...
பிணிகள் எந்தெந்த நட்சத்திர நாள்களில் உண்டாகின்றன
என்பதைக் கொண்டு... அந்தப் பிணிகள் குணமாகுமா? அது குணமாவதற்கு எத்தனை
காலம் பிடிக்கும் எனப் போன்ற கணிப்புகளையும் ஜோதிட சாஸ்திரம் விவரிக்கிறது.
அஸ்வினி: 25 நாள்களில் குணமாகும்.
கார்த்திகை: 5 அல்லது 7 நாள்களில் குணமாகும். இல்லையெனில் 21 அல்லது 27 நாட்களுக்குள் குணமாகிவிடும்.
ரோகிணி: 8 அல்லது 11 நாள்களில் குணமாகும்.
மிருகசீரிடம்: 6 அல்லது 9 நாள்களில் குணமாகும்.
புனர்பூசம்: 13, 15 அல்லது 27 நாள்களில் குணமாகும்.
பூசம்: 3 அல்லது 7 நாள்களில் குணமாகும்.
பூரம்: 7 நாள்களில் குணமாகும்.
உத்திரம்: 8, 9 அல்லது 21 நாள்களில் குணமாகும்.
அஸ்தம்: 7 அல்லது 20-ம் நாளில் குணம்.
சித்திரை: 8 அல்லது 27-ம் நாளில் குணம்.
சுவாதி: 10 அல்லது 45 நாளில் குணமாகும்.
மூலம்: 10 அல்லது 27 நாள்களில் குணமாகும்.
பூராடம்: 6 அல்லது 9 நாள்களில் குணமாகும். அல்லது 8-9 மாதங்கள் ஆகலாம்.
திருவோணம்: 8 நாள்களில் குணமாக வாய்ப்பு உண்டு. எனினும் முழுமையாக பிணியிலிருந்து விடுபட ஒருவருட காலம் பிடிக்கும்.
சதயம்: 13 நாள்களில் குணமாகும்.
உத்திரட்டாதி: 14 நாள்களில் குணம் ஆகும். அல்லது பல வருடங்கள் அந்தப் பிணியால் துன்பம் அடைய நேரிடும்.
ரேவதி: 8, 14 அல்லது 27 நாள்களில் குணமாகும்.
எனினும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிணிகள் தொடங்கிய
சரியான நட்சத்திர நாளை அறிந்தால்தான், மேற்சொன்ன பலன்களை கணிக்கமுடியும்.
ஆயில்யம், பரணி, கேட்டை, பூரட்டாதி, விசாகம், மகம், திருவாதிரை, அனுஷம்
ஆகிய எட்டு நட்சத்திர காலத்தில் தோன்றும் பிணியானது உடலை மிகவும்
வருத்தும். இவற்றுள் சில நட்சத்திர தினங்களில் உருவாகும் நோய் மரணத்தையும்
ஏற்படுத்தலாம் என்றும் குறிப்புகள் உண்டு. எனினும், மரணத்தையும் வெல்லும்
சக்தி பிரார்த்தனைக்கு உண்டே! ஆகவே, உரிய பிரார்த்தனை பரிகாரங்களால்
துன்பத்தில் இருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment