Search This Blog

Saturday, October 06, 2012

எனது இந்தியா ( 4 மனைவிகள் 71 காதலிகள்! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

பாபிக்கும் ரோஷனாராவுக்கும் முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. விருந்தும் தடபுடலாக இருந்தது. அன்று இரவு, நடனமும் இசைக் கச்சேரியும் நடத்தப்பட்டன. புதுமண தம்பதியான நாய்களுக்கு என்று தனிப் படுக்கை ஒதுக்கப்பட்டது. அதை முறையாகக் கவனித்துக்கொள்ள இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் நாய்களுடன் கூடவே இருந்தார். இந்தக் கல்யாணத்துக்கு 60,000 டாலர்கள் செலவு.  நாய்களை மட்டுமில்லாது சிங்கங்களையும் நேசித்த ஜுனாகத் நவாப், அவற்றைப் பாதுகாக்க காடுகளை அழிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். கத்திவாடா குதிரை இனத்தை விருத்தி செய்வதற்கு என்றே தனி அலுவலர்களை நியமித்து இருந்தார். ஜுனாகத், மக்களைத் தவிர சகல உயிரினங்களையும் பேரன்புடன் நேசித்தார்.

நாய்களின் காவலனாக விளங்கிய நவாப், சுதந்திர இந்தியாவோடு சேர்வதில் தனக்கு இஷ்டம் இல்லை, பாகிஸ்தானோடு சேரப்போகிறேன் என்று அறிவித்தார். ஜுனாகத் பகுதியில் 20 சதவிகிதம் மட்டுமே இஸ்லாமியர்கள் இருந்தனர். மீதம் இருந்தவர்கள் இந்துக்கள். மேலும், அவரது சமஸ்தானம் பாகிஸ்தான் எல்லையோடு எந்த விதத்திலும் தொடர்பற்றது. ஆகவே, அவரது அறிவிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துக் கலகம் செய்தனர்.


உள்துறைச் செயலாளராக இருந்த வி.பி.மேனன், 1947-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி ஜுனாகத்துக்கு வந்தார். திவான் நவாஸ் புட்டோவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நவாப்பை சந்தித்து இந்திய அரசின் சார்பில் தான் பேச விரும்புவதாக மேனன் கூறினார். ஆனால், நவாபுக்கு உடல்நலம் சரியில்லை. ஆகவே, அவரைச் சந்திக்க முடியாது என்று நவாஸ் புட்டோ மறுத்துவிட்டார். அதனால், ஜுனாகத்துக்குச் செல்லும் உணவுப் பொருட்கள் மற்றும் சாலைகளைத் தடுத்து நெருக்கடியை ஏற்படுத்தியது இந்திய அரசு.

இனிமேலும், இங்கே இருக்க முடியாது என்று உணர்ந்த நவாப், 1947-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி தனது மந்திரி மற்றும் செல்ல நாய்களுடன் விமானத்தில் ஏறி பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். சமஸ்தானம் எங்கும் உருவான நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திவான், இந்திய அரசிடம் உதவி கேட்பது என்று முடிவு செய்து அழைப்பு விடுத்தார். இந்திய அரசு தலையிட்டு ஜுனாகத்தைக் கைப்பற்றிக்கொண்டது.

ஜுனாகத் நவாப், கராச்சியில் வாழ்ந்து தனது 59-வது வயதில் இறந்து போனார்.
காஷ்மீரை அப்போது மகாராஜா ஹரி சிங் ஆண்டு வந்தார். பாகிஸ்தானோடு இணைவதா, அல்லது இந்தியாவோடு சேர்வதா என்பதில் அவருக்குக் குழப்பம் இருந்தது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் காஷ்மீரைத் தங்களுடன் இணைத்துக்கொள்ள தொடர்ந்து நெருக்கடிகளை உருவாக்கின. அதனால், இழுபறி நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, எதிர்பாராத ஆக்கிரமிப்புகள், தாக்குதல்கள் எனப் பிரச்னை வலுவாகியது. இன்று, வளர்ந்து விஸ்வரூபமாகி உள்ள காஷ்மீர் பிரச்னையின் வேர் இந்த இணைப்பில் ஏற்பட்ட விவகாரமே. 


ஹைதராபாதின் வரலாறு தொன்மையானது, தொடக்கக் காலத்தில் காகதீய வம்சம் அதை ஆண்டு வந்தது. அதன் பிறகு, கோல்கொண்டாவைத் தலைநகராகக்கொண்டு குதுப் சாகிப் மன்னர்கள் 1518-ல் இருந்து 1687 வரை ஆட்சி செய்தனர். இதில், ஐந்தாவது குதுப் இளவரசன் முகமது குவாலி, பாக்மதி என்ற பஞ்சார இனத்தைச் சேர்ந்த பெண் மீது காதல்கொண்டான். அவளோ ஓர் இந்துப் பெண். அதனால், அவளைத் திருமணம் செய்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. காதலின் உணர்ச்சி வேகத்தில் அவள் வாழ்ந்த கிராமத்துக்குச் சென்று வருவதற்காக மூசி நதி மீது பாலம் கட்டினான் குவாலி. அந்தப் பாலம் இன்றும் இருக்கிறது. 1591-ல் தான் மன்னராகப் பதவி ஏற்றவுடன் பாக்மதியை மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண்டான். அவளுடைய பெயரை ஹைதர் மகால் என்றும், அவள் நினைவாக கோல்கொண்டாவை ஹைதராபாத் என்றும் மாற்றி அமைத்தார் என்றும் கூறப்படுகிறது.

குதுப் வம்சத்தின் ஷா ஆட்சியின்போது ஒளரங்கசீப் படையெடுத்து, ஹைதராபாதைக் கைப்பற்றினார். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மகபத் கான், கோல் கொண்டாவின்  கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, ஹைதராபாதில் இருந்து ஒளரங்காபாத்துக்கு தலைநகரம் மாற்றப்பட்டது. அதனால், ஹைதராபாத் செல்வாக்கு இழந்து போனது. 1713-ல் குவாமாருதீன், முதல் நிஜாமாக பட்டம் சூடினார். நிஜாம் உல் முல்க் என்பது ஒரு பட்டம், அதன் பொருள் 'பிரதேச ஆட்சியாளர்’ என்பதாகும். அதன் பிறகு, நிஜாம் பரம்பரையைச் சேர்ந்த ஏழு நிஜாம்கள் ஹைதராபாதை ஆட்சி செய்தனர். 1911-ம் ஆண்டு ஏழாவது நிஜாமாக உஸ்மான் அலிகான் பொறுப்பு ஏற்றார். அவர், சுதந்திர இந்தியாவோடு ஹைதராபாத் இணைய விருப்பம் இல்லை என்றும், பிரிட்டிஷ் ஆதரவுள்ள சுதந்திர நாடாகவே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இதை, படேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக, பிரிட்டிஷ் பார்லிமென்ட் வரை சென்றார் ஹைதராபாத் நிஜாம். இந்தியாவோடு ஹைதராபாத் நிஜாம் சேர வேண்டும் என்றது அன்றைய தக்காண காங்கிரஸ். ஆனால், பாகிஸ்தானோடுதான் சேர வேண்டும் என்றன இஸ்லாமிய அமைப்புகள்.

மௌன்ட் பேட்டன் ஆலோசனைப்படி, இதற்கு தீர்வு காணும் வரை இரு தரப்புக்கும் இடையே ஓர் ஆண்டு கால நிலை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் காலகட்டத்தில், இரு தரப்பும் தங்களுக்குள் பேசிப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், நிஜாம் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனது ராணுவ பலத்தை வலிமையாக்கினார். பாகிஸ்தானோடு ஹைதராபாத் சேர வேண்டும் என்பதற்கு ஆதரவாக ரஸாக்கர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு, காசிம் ராஸ்வி தலைமை வகித்தார். இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்த வேண்டும் என்று, ரஸாக்கர்கள் தூண்டிவிட்டனர். பம்பாயில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலை, ரஸாக்கர்கள் தாக்கினர். இதனால், பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.

1948-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி, நிஜாம் ராஜ்ஜியத்துக்குள் நுழைந்தது இந்திய ராணுவம். ஹைதராபாத் சமஸ்தானம் நாலா பக்கமும் சுற்றி வளைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை 'ஆபரேஷன் போலா’ என அழைக்கப்பட்டது. செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கி ஐந்தே நாட்களில் நடவடிக்கை முடிவுக்கு வந்தது. தோல்வி நிச்சயம் என்ற நிலையில், இந்திய ராணுவத்திடம் 17-ம் தேதி நிஜாம் சரண் அடைந்தார். ஐந்து நாட்கள் நடந்த சண்டையில், இந்திய ராணுவத்தில் 97 பேர் காயம் அடைந்தனர். 32 வீரர்கள் கொல்லப்பட்டனர். நிஜாம் தரப்பில் 490 வீரர்கள் கொல்லப்பட்டனர். 122 பேர் காயம் அடைந்தனர். 1,373 ரஜாக்கர்களும் இறந்தனர். 1,911 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய அரசின் உத்தரவுப்படி, ஹைதராபாத் நிஜாம் தானே வானொலி நிலையத்துக்குச் சென்று, இந்திய ராணுவத்தை வரவேற்பதாகவும், அமைதியான முறையில் அதிகாரப் பறிமாற்றம் நடக்கும் என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜெனரல் சவுத்ரி தற்காலிக கவர்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு, இந்தியாவுடன் ஹைதராபாத் முறையாக இணைக்கப்பட்டது. எழுத்தாளர் அசோகமித்திரன் தனது 'பதினெட்டாவது அட்சக் கோடு’ என்ற நாவலில், ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்த சூழலில் ஏற்பட்ட கலவரம் பற்றி அற்புதமாக விவரித்து இருக்கிறார். சரித்திர நிகழ்வு ஒரு குடும்பத்தை எப்படிப் பாதிக்கிறது என்பது அந்த நாவலில் சிறப்பாக விவரிக்கப்பட்டு இருக்கிறது.

பிரிட்டிஷ் காலத்தில் இருந்த சுதேசி மன்னர்களில், ஹைதராபாத் நிஜாம் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்பட்டார். நிஜாம்கள் வாழ்ந்த சௌமஹல்லா அரண்மனை ஆடம்பரமானது. நிஜாம் ஆட்சியில், ஹைதராபாத் ரூபாய் என்று தனியாகப் பணம் அச்சிடப்பட்டது. வைரம், தங்கம், வெள்ளி நகைகள் அரண்மனையில் கொட்டிக்கிடந்தன.  உலகின் ஏழாவது பெரிய வைரமான 'ஜேக்கப்’, ஹைதராபாத் நிஜாமிடம்தான் இருந்தது. அதை விலைக்கு வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, நகைகள் விற்கும் ஏஜென்ட்டுக்கும் நிஜாமுக்கும் இடையே கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

நிஜாமின் சேமிப்பில் இருந்த நகைகளில் ஒரு பகுதியை இந்திய அரசு 206 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அதற்கு வருமான வரியாக 30 கோடி செலுத்த வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. ஆனால், வரி செலுத்த முடியாது என்று நவாப் தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாக இழுபறியிலேயே இருக்கிறது. இன்று, ஹைதரபாத் நிஜாமின் சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவதாக இருக்கிறார் ஹைதராபாத் நிஜாம். பெரிய கோடீஸ்வரராக இருந்தபோதும் நிஜாம் மிகவும் கஞ்சத்தனம்கொண்டவர். உடைந்துபோன வாக்கிங் ஸ்டிக்கைத்தான் பயன்படுத்துவார். விலை மலிவான சிகரெட்தான் புகைப்பார். கிழிந்த காலுறைகளை மாற்ற மாட்டார். ஒரு வாரத்துக்கு அவரது செலவுக்கு ஏழு ஷில்லிங்குகள் மட்டுமே வைத்துக்கொள்வார் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், இது உண்மை அல்ல. அவர் இஸ்லாமியராக இருந்தபோதும் இந்து மற்றும் கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு நிறைய நன்கொடைகள் கொடுத்திருக்கிறார். ஊழியர்களுக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறார் என்று, மன்னர் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

நிஜாமின் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்குச் சேர வேண்டும் என்ற வாரிசுச் சண்டை இன்னும் நடக்கிறது. நிஜாமுக்கு, அதிகாரப்பூர்வமாக நான்கு மனைவிகள். 71 ஆசைநாயகிகளும் இருந்தனர். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 112 என்கிறார்கள். இதில் 75 பேர் இறந்துவிட்டனர். மீதி இருப்பவர்கள் 36 பேர். இவர்களுக்குள்தான் சொத்து உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் இன்றும் நடக்கின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில், லண்டன் நாட்வெஸ்ட் வங்கியில் ஏழு கோடி ரூபாய் பணம் போட்டுவைத்தார் ஹைதராபாத் நிஜாம். அந்தப் பணம் பற்றி இந்திய அரசுக்குத் தெரிய வந்தபோது, அதை முடக்க வேண்டும் என்று லண்டன் வங்கிக்கு இந்திய அரசு கடிதம் அனுப்பியது. இதையடுத்து, அந்தப் பணத்தை வங்கி முடக்கிவைத்தது. இப்போது, அந்தப் பணம் 250 கோடியாகப் பெருகி இருக்கிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, ஏற்பட்ட பணக் கஷ்டத்தை போக்கிக்கொள்ள நிஜாம் பல முறை உதவி செய்திருக்கிறார். அப்படி, அனுப்பிவைக்கப்பட்ட பணம்தான் அது. இந்தப் பணம் தங்களுக்கு தருவதற்காக நிஜாம் வங்கியில் போட்டது என, பாகிஸ்தான் உரிமை கோருகிறது. இன்னொரு பக்கம், அது தங்களின் உரிமை என நிஜாம் வாரிசுகள் வழக்கு நடத்தி வருகின்றனர்.

இன்று நாம் காணும் ஒருமித்த இந்தியாவை உருவாக்கிய பெருமை வல்ல பாய் படேலையே சாரும். படேலின் நடவடிக்கைகள் குறித்து இன்று பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன. ஆனாலும், சரித்திரம் அவரது உறுதியான நிலைப்பாட்டைப் போற்றவே செய்கிறது.



No comments:

Post a Comment