Search This Blog

Tuesday, October 23, 2012

உணவா...விஷமா

கடந்த 50 ஆண்டுகளில் பல துறைகளிலும் விஞ்ஞானம் அசுர வேகத்தில் முன்னேறி வந்துள்ளது. தொலைத்தொடர்பு, கணினி, விண்வெளி ஆராய்ச்சி... இவை எல்லாவற்றுக்கும் இணையாக மருத்துவம்!

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சராசரி இந்தியனின் ஆயுட்காலம், வெறும் 28 வயதுதான். அந்த காலகட்டத்தில்... வளர்ந்த மேலை நாடுகளில் சராசரி வயது 58. இப்போது இந்தியனின் சராசரி ஆயுள் 68 என உயர்ந் திருப்பது ஆச்சர்யமான உண்மை!

அப்படியானால், நாம் இப்போது மிக ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமா?

அதுதான் இல்லை. 100-ல் 40 பேருக்கு சர்க் கரை நோய், 100-ல் 30 பேருக்கு ரத்தக்கொதிப்பு, 100-ல் 10 பேருக்கு புற்றுநோய்... இன்னும் பலப்பல. அதாவது ஒவ்வொரு இந்தியனும் ஏதோ ஒன்று அல்லது பல நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களையும், மருத்துவமனை களையும் சார்ந்து 68 வயது வரை வாழ்நாளை எப்படியோ ஓட்டுகிறான்.

உலகளவில், இன்று நம் நாடுதான் சர்க்கரை, மாரடைப்பு, எய்ட்ஸ் என பல நோய்களிலும் முதலிடம். புற்றுநோயில் இப்போதைக்கு இரண்டாவது இடம், முதல் இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம் என்பது கூடுதல் தகவல். எலும்புச்சிதைவு நோயில் தற்போது இரண்டாவது இடம்.


இன்னொரு பக்கம், இருக்கும் இடத்தைப் பறிகொடுக்கும் பயங்கரமான, பூதாகாரமான பிரச்னை ஒன்று நம்மை மிரட்டுகிறது. என்ன அது..?

இதுவரை ஜனத்தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் வகித்திருக்கிறோம். அதற்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. இப்போதைய இந்திய ஆண்களில் பலருக்கு ஆண்மைக் குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு இருக்கிறது என்பது மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. முன்பெல்லாம் தம்பதியருக்கு குழந்தை இல்லை என்றால், பெரும்பாலும் பெண்களிடம் மட்டுமே குறைபாடு இருந்தது. பின்னர் இந்நிலை மாறி, பெண்களில் 75%, ஆண்களில் 25% குறைபாடு என்ற நிலை உருவானது. பிறகு, 50% - 50% என்று மாறிய இந்தக் குறைபாடு... தற்போது ஆண்கள் 75%, பெண்கள் 25% என்று தலைகீழாக மாறிவிட்டது.

அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் கலந்துகொண்ட 205 நாடுகளில் நம்நாடு 45-ம் இடத்தில் வந்தது. சில லட்சங்களே ஜனத்தொகை கொண்ட சிறுநாடுகள் தங்கப்பதக்கங்களை அள்ளிச்சென்ற வேளையில், 120 கோடி ஜனத்தொகை கொண்ட நம்நாடு ஒரு தங்கம்கூட வெல்ல முடியவில்லை என்ற கசப்பான உண்மையைப் பார்த்தோம்.

மோசமான வியாதிகளில் மட்டும் நாம் ஏன் இப்படி முதலிடத்திலிருந்து 'தங்க'ங்களை அள்ளிக் குவிக்கிறோம்? ஆயுளும் அதிகரித்து, அதேநேரத்தில் வியாதிகளும் அதிகரித்திருப்பது வேடிக்கையாக இல்லையா?

முதலில், இன்றைய இந்தியனின் ஆயுள் அதிகரித்ததின் ரகசியத்தை ஆராய்வோம்...

முன்பெல்லாம் தொற்றுநோய் களின் தாக்கம் மிகவும் அதிகம். அம்மை நோய் வந்தால், ஊரிலுள்ள குழந்தைகளில் 100-க்கு 90 பேரை இழந்துவிடுவோம் (எங்கள் கிராமத்தில் அம்மை நோயில் தப்பிப் பிழைத்த ஒரு சில குழந்தைகளில் நானும் ஒருவன்!). காலரா நோய் வந்தால் ஊரில் பாதிப்பேர் இறந்துவிடுவார்கள் (இப்போது காலரா இருக்கிறது - ஆனால் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சையில் பிழைத்துக் கொள்கிறார்கள்). பிளேக், மலேரியா போன்ற நோய்களும் மனிதர்களை ஒட்டுமொத்தமாக அழித்து வந்தன.

பின் நாட்களில் காசநோய், தொழுநோய் போன்ற நோய்களும் இதே வேலையைச் செய்தன. ஆகவே, டார்வின் பரிணாமக் கொள்கைப்படி உயிர் வாழ்வதற்குப் போராட்டம், இயற்கையின் தேர்வு முறை மற்றும் தகுதியானவர்களே ஜெயிப்பர்  என்ற தத்துவப்படி காலரா, பிளேக், அம்மை போன்ற நோய்களில் தாக்குப் பிடித்தவர்கள், 100 வயதுவரை பூரண ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். ஆனாலும், மொத்தத்தில் சராசரி வயது வெறும் 28-தான். 
 
இன்று நிலைமை வேறு. அம்மை, பிளேக் போன்ற கொடிய நோய்களை வேரோடு பிடுங்கிவிட்டோம். அம்மை நோய் இருப்பதாக யாராவது தகவல் கொடுத்தால் 1 லட்ச ரூபாய் பரிசுதர அரசாங்கம் தயாராக இருக்கிறது. மலேரியா, காலரா, காசநோய், தொழுநோய் போன்ற நோய்களுக்கும் நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. 'பென்சிலின்’ மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பாக்டீரியா கிருமிகளின் தாக்கம் வெகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. தற்போது எல்லோரையும் பயமுறுத்தும் எய்ட்ஸ் நோய்கூட கூடிய சீக்கிரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆக, யாரும் 28 வயதுக்குள் சாவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 68 வயது வரை கட்டாயம் வாழ்ந்து தீர வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

சரி, ஆயுள் அதிகரித்த அதேசமயம், ஆரோக்கியம் குன்றிப்போனதற்கான கார ணங்கள் என்ன..?

உலகளவில், அலசப்படும் 10 முக்கியக் காரணங்களில், ஆறு காரணங்கள் உணவு முறை சம்பந்தப்பட்டவை என்கின்றன ஆய்வு முடிவுகள்!

ஆம்! மாறிவிட்ட நம் உணவுப் பழக்கங்கள், எத்தனை தூரம் நம்மை நோய்களிடம் அழைத்துச் செல்கின்றன என்பதை யாரும் அறிவதில்லை. 'சுத்திகரிக்கப்பட்ட' (ரீஃபைண்ட்) என்கிற வார்த்தை மயக்கத்தில், அரிசி, சர்க்கரை, எண்ணெய், கோதுமை, பருப்பு என எல்லாமே 'ரீஃபைண்ட்’ பிராண்ட்களாகத்தான் விரும்புகிறோம். விளைவு... கணையத்தில் இன்சுலின் சுரக்கச் செய்யும் பீட்டா செல்களை நாம் உண்ணும் 'ரீஃபைண்ட்’ உணவுப் பொருட்கள் அழிக்க, அது சர்க்கரை நோய் ஏற்படக் காரணமாகிறது.

விவசாயத்துக்குப் பயன்படுத்தும் ரசாயன பூச்சிக்கொல்லிகள், விளைபொருட்களில் விட்டு வைக்கும் ரசாயன எச்சங்களை, உணவுடன் சேர்த்து உண்கிறோம்... அதன் பாதிப்பு நரம்பு மண்டலம் வரை தொந்தரவு செய்யும் என்பதை அறியாமல்!

மரபணு மாற்றம் செய்யப் பட்ட விதைகளில் விளைந்த உணவுப் பொருட்கள், விலை கொடுத்து வாங்கும் ஸ்லோ பாய்சன்கள்.

அலுவலகத்தில், ஹோட்டல்களில், டீக்கடைகளில் என தொடர்ந்து பேப்பர் கப்களில் காபி, டீ அருந்துகிறோம். அந்தக் கப்களில் 'கோட்டிங்’ கொடுக்கப் பட்டிருக்கும் மெழுகு, வயிற்றில் சேகரமானதால் அவதிப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றுமளவுக்குச் சென்றவர் களின் கதைகளும் இங்கே உண்டு.

இன்னும் நிறைய நிறைய!

சின்ன சின்ன விஷயங்கள்தான் என்று நினைத்து நாம் உணவில் செய்யும் தவறுகள், பெரிய ஆபத்துகளைத் தரவல்லவை. தேவை அச்சம் அல்ல... விழிப்பு உணர்வே.


2 comments:

  1. அலட்சியம், கவனமின்மை, அறியாமை - இவை போல பல காரணங்களும் உள்ளன...

    நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete