Search This Blog

Monday, October 08, 2012

சந்தீப் படேல் தேர்வு, சரியா?


1983 உலகக்கோப்பை அணியில் விளையாடியவர்கள்தான் இன்றைய இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தை முடிவு செய்கிறார்கள். வெங்சர்கார், ஸ்ரீகாந்துக்குப் பிறகு இப்போது சந்தீப் படேல் தேர்வுக்குழு தலைவராகியிருக்கிறார். மொஹிந்தர் அமர்நாத்துக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் சந்தீப் படேல் தேர் வானதில் பெரிய ஆச்சர்யம் எதுவுமில்லை. கிரிக்கெட் வீரராக சாதித்ததை விடவும் ஒரு சிறந்த நிர்வாகியாக, தம்மைத் தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார் சந்தீப் படேல்.
சந்தீப் படேல், மும்பைக்காரர். 1983 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல இவரும் ஒரு காரணம். அடிலெயிடில் அடித்த 174 ரன்களும் பாப் வில்லிஸின் ஒரு ஓவரில் ஆறு பவுண்டரிகள் விளாசியதும் சந்தீப் படேலின் மறக்கமுடியாத கிரிக்கெட் தருணங்கள். மறக்கக்கூடிய ஒன்று, 1984ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், பொறுப்பாக ஆடாததால் அடுத்த டெஸ்ட் மேட்சிலிருந்து படேல் (கபில்தேவும்தான்) கழற்றப்பட்டார். அடிக்கடி அவுட் அஃப் ஃபார்முக்குச் சென்றதால் பலமுறை அணியிலிருந்து நீக்கப்பட்டவர். 45 ஒருநாள் ஆட்டங்களும் 29 டெஸ்டுகளும் மட்டுமே ஆடி 30 வயதோடு தம் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். ‘நான் என்னுடைய முழுத்திறமைகளையும் வீணடித்தவன். இதனால் பலரை ஏமாற்றியிருக்கிறேன். ஆனாலும், பல ஆயிரம் திறமையான வீரர்கள் இருந்தபோது நான் இந்தியாவுக்காக ஆடியதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். கிரிக்கெட்டுக்குப் பிறகு பிஸினஸில் ஈடுபட்டேன். மராத்தி பத்திரிகை ஒன்றின் எடிட்டராக இருந்தேன். ஒரு ஹிந்திப் படத்திலும் நடித்தேன். கமெண்டேட்டராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளேன். இதுதான் கனவு என்கிற ஒற்றை இலக்குடன் வாழ்ந்தவனில்லை நான். என்னுடைய தவறுகளை இன்றைய இளைஞர்கள் செய்யக்கூடாது’ என்று சுய விமர்சனம் செய்து கொள்கிறார் சந்தீப் படேல். 
இந்தியத் தேர்வுக்குழுவில் பணியாற்ற எவ்விதத் தகுதிகள் வேண்டும்? இந்தியாவுக்காக ஆடியிருக்கவேண்டும் அல்லது 25 முதல்தர ஆட்டங்களில் பங்கேற்றிருக்க வேண்டும். மற்றும் இந்தியாவுக்காகக் கடைசியாக ஆடி 10 வருடங்களாகியிருக்க வேண்டும். ஆனால், சந்தீப் படேலின் பயோடேட்டா மிரளவைக்கக்கூடியது. ஒரு பயிற்சியாளராக அவர் செய்த சாதனை ஈடு இணையற்றது.  யாராலும் சீந்தப்படாமல் இருந்த கென்யா அணியை, தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2003 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை முன்னேற வைத்தது ஒரு வரலாற்றுச் சாதனை. சந்தீப் படேல் கென்யா அணியிலிருந்து வெளியேறிய பிறகு, அந்த அணியால் சிறுவளர்ச்சிகூட அடையமுடியாதது படேலின் பங்களிப்பை மேலும் உறுதி செய்கிறது. அதன்பிறகு ஓமன் அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் பயிற்சியாளராக இருந்தார். 1996ல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாலும் சில மாதங்களில் அவரை வீட்டுக்கு அனுப்பியது பி.சி.சி.ஐ. 2005, 2007 ஆண்டுகளில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். ஆனால் கிரேக் சேப்பல், கேரி கிரிஸ்டன் போன்ற பிரபலங்களை படேலால் வெல்ல முடியவில்லை.
பி.சி.சி.ஐ. தம் திறமையை மதிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுடன் கபில் தேவின் தலைமையில் இயங்கிய ஐ.சி. எல்-லில் சேர்ந்து கொண்டார். ஆனால் அவர் பயிற்சியாளராக இருந்த மும்பை சேம்ப்ஸ் அணி, மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டதால், ஐ.சி.எல்-லிலிருந்து விலகிக்கொண்டார். பிறகு பி.சி.சி.ஐ.யுடன் சமாதானமாகி நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இப்போது தேர்வுக் குழுத் தலைவர் பதவி. அவருக்குத் துணையாக ரோஜர் பின்னி, சபாகரிம், விக்ரம் ரத்தோர், ரஜிந்தர் ஹன்ஸ் ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்கள்.

தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு வருடத்துக்கு ரூ. 60 லட்சம் சம்பளம். நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் வருடத்துக்கு ரூ. 70 லட்சம் வாங்கி வந்ததால், படேலுக்கு மட்டும் கூடுதலாக பத்து லட்சம் சேர்த்து வருட சம்பளமாக ரூ. 70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராகுல் திராவிட் ஒருநாள் அணியிலிருந்து விலக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த படேல், ‘வெங்சர்கார், திராவிடை நீக்கியது தவறு, பி.சி.சி.ஐ. இதில் தலையிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இப்போது, அடுத்த தலைமுறைக்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு படேல் வசம் உள்ளது. முந்தைய தேர்வுக்குழுத் தலைவர்கள் செய்த மாபெரும் தவறுகளை படேல் செய்யாமல் இருந்தாலே இந்திய அணி தப்பிக்கும்.

No comments:

Post a Comment