எல்லோரும் எதிர்பார்த்த ஒரு தருணம். அதேசமயம், இது நடந்துவிடக் கூடாதே
என்கிற பயமும் இருந்தது உண்மை. 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாதித்து வந்த
சச்சின் டெண்டுல்கர், தம்முடைய ஓய்வுக்கு நாள் குறித்துவிட்டார்.
‘என் மனம் என்ன சொல்கிறதோ, அதைப் பொறுத்தே என் ஓய்வு அமையும். எதிர்கால
கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நவம்பரில் முடிவெடுப்பேன். ஓய்வு பெறும்
தருணத்தை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. ஓய்வு பெறுவது மிகவும் கடினமான
ஒன்று’ என்று
முதல்முறையாக தம் ஓய்வு பற்றி டைம்ஸ் நவ் சேனலுக்குப் பேட்டி
கொடுத்திருக்கிறார். 2015 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளதா என்கிற
கேள்விக்கு, ‘இப்போதைய நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை. இனிவரும்
கிரிக்கெட் தொடர்கள், அணி நிர்வாகம்
என்ன நினைக்கிறது, எனக்குள் என்ன தோன்றுகிறது போன்றவற்றைப் பொறுத்தே
அமையும்’ என்று வெளிப்படையாகப் பதில் சொல்லியிருக்கிறார். 2013க்குப் பிறகு
டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டி ஏதாவது ஒன்றில் ஓய்வு பெறுவேன் என்று தோனி
கூறியதை இங்கே ஞாபகம் கொள்ள
வேண்டும். இருவரும் ஒரேசமயத்தில் ஓய்வு பெற்று விட்டால் இந்திய அணி?
2007 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்தியா மிக மோசமாக வெளியேறிய
நாள்முதல் ஓய்வு தொடர்பான கேள்விகள் சச்சினைத் துரத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால், சச்சின் எந்த விமர்சனங்களுக்கும் பலியாகவில்லை. பதிலாக, ஆட்ட
முறையில் மாற்றம் கொண்டுவந்தார்.
அதிரடியை விட்டு விட்டுப் புதிய பாணியில் ஆடினார். இதனால் சச்சினால்
தொடர்ந்து அதிக ரன்களைக் குவிக்க முடிந்தது. பல சாதனைகளைத் தொட முடிந்தது.
தம்முடன் ஆடிய கங்குலி, திராவிட், கும்பிளே, லஷ்மண் போன்ற வீரர்கள் ஓய்வு
பெற்றபோதும் சச்சினின் பயணம்
தொடர்ந்தது.
ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்ற பிறகு, ஒருநாள் போட்டியிலிருந்து
சச்சின் ஓய்வுபெறுவார் என்கிற கணிப்பையும் சச்சின் சீந்தவில்லை.
ஓய்வுக்குப் பதிலாக எல்லாத் தொடர்களிலும் பங்கேற்பதை நிறுத்தினார். சென்ற
வருடம் மேற்கிந்திய டூரில் சச்சின் கலந்து கொள்ளவில்லை.
‘குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டிருப்பதால் அவர்களுடன் பொழுதைக்
கழிக்கவுள்ளேன்’ என்று காரணம் சொன்னார்.
அதேபோல இந்த வருடம் ஒருநாள் தொடருக்காக இந்திய அணி, இலங்கை சென்றபோதும்
மீண்டும் அதே லீவ் லெட்டர். ஆனால் சச்சின் இதுவரை இதுபோன்ற காரணங்களை
முன்வைத்து ஐ.பி.எல்., சாம்பியன் லீக் போட்டிகளைத் தவறவிட்டதில்லை.
ஆஸ்திரேலியாவில் ராகுல் டிராவிட் தொடர்ந்து பலமுறை க்ளீன் போல்ட்
ஆனதால், அதுவே அவருடைய ஓய்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல
சச்சினும் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் மூன்றுமுறை போல்ட் ஆனது
விமர்சனங்களுக்குள்ளானது. கவாஸ்கர், அசாருதீன்
உள்பட பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தார்கள், சச்சினின் காலம்
முடிந்து விட்டதாக பலருக்கும் அச்சம் ஏற்பட்டது.
‘நான் 30 வயதைக் கடந்து 9 ஆண்டுகள் ஆனபிறகும் நன்றாகவே விளையாடி
இருக்கிறேன். எனவே எல்லோருக்குமே வயதாகும்போது அவர்களின் வேகம் குறைவது
இயற்கையானதுதான். எனது இளமைக்காலம் முதலே மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன
சொன்னாலும், அதைப் பொருட்படுத்துவது இல்லை’ என்று விளக்கமளிக்கிறார்
சச்சின்.
இதுவரை 190 டெஸ்டுகளில் ஆடியிருக்கிறார் சச்சின். தென் ஆப்பிரிக்கா
தொடர்வரை சச்சின் நீடித்துவிட்டால், 200 டெஸ்டுகளில் ஆடிய முதல் வீரர்
என்கிற பெருமையை அடைவார். அப்படி நடந்தால், அதுவே சச்சினின் கடைசித் தொடராக
இருக்கும். எனவே, அடுத்த எட்டு டெஸ்டுகளின் தன்மையைப் பொறுத்துதான் சச்சின்
எப்போது ஓய்வ்வு பெறுவார் என்பது தெரியவரும்.
இந்திய கிரிக்கெட்டுக்கு இது மிக நெருக்கடியான காலகட்டம். தோனியின்
தலைமைப் பண்பின் உபயோகம் பற்றி எல்லோருக்கும் கேள்வி எழுந்துவிட்டது.
ஷேவாக், கம்பீர், ரைனா போன்றோரின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம்
கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த
நிலையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட சச்சினும் தயாராகிவிட்டார். சச்சின்
இந்திய அணிக்குள் நுழையும்போது இதே போன்றதொரு ஸ்திரத் தன்மையற்ற நிலைமைதான்
இருந்தது.
அடுத்த கட்டம், அடுத்த தலைமுறை என்று இப்போது ஒரு புது அத்தியாயத்துக்குள் நுழையத் தயாராகிவிட்டது இந்திய கிரிக்கெட்.
no need retrierment for master sachin
ReplyDelete