Search This Blog

Tuesday, October 23, 2012

டாலி - குளோனிங் - நோய் தீர்க்குமா 'நோபல்' கண்டுபிடிப்பு?

இந்த ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்று இருக்கும் ஜான் கார்டன் - சின்யா யாமனாகா ஆகியோரின் ஆராய்ச்சி பெரிய புரட்சியையே உருவாக்கலாம். அவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இவர்கள் செய்த ஆராய்ச்சி என்ன? இது மனித குலத்திற்கு எப்படி நன்மை பயக்கும்?
 
''1997-ம் ஆண்டு முதன் முறையாக குளோனிங் முறையில் டாலி என்ற ஆட்டுக் குட்டி உருவாக்கப்பட்டபோது உலகமே ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றது. இந்த டாலி ஆட்டுக்குட்டியை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்தவர்தான் ஜான் கார்டன். மருத்துவ உலகத்தால், 'குளோனிங்கின் தந்தை’ என்று பாராட்டப்படுபவர். இதே துறையில் பல வியத்தகு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் சின்யா யாமனாகா.


நாம் அனைவரும் வளமூட்டப்பட்ட முட்டை செல்களில் இருந்துதான் வளர்ச்சி அடைந்தோம். உடல் உறவு நடந்து கருவூட்டல் ஏற்பட்டதற்கு அடுத்த நாள் 'எம்ப்ரியோ’ எனப்படும் கருமுட்டையின் மையப் பகுதியானது முதிர்வடையாத திசுக்களைக்கொண்டதாக இருக்கும்.

இந்த ஒவ்வொரு திசுவும் வளர்ச்சியடைந்த உடலில் உள்ள எந்த ஓர் உறுப்பாகவும் வளர்ச்சியடையும் தன்மைகொண்டது. இந்தத் திசுக்கள் நம்முடைய மூளையின் நரம்பு செல்லாகவும் தசைத் திசுவாகவும் கல்லீரல் திசுவாகவும் மாறும்.

ஜான் கார்டன் மற்றும் சின்யா யாமனாகா இருவரும் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால், எம்ப்ரியோ திசுக்களாகவும், திசுக்கள் செல்களாகவும் மாறுவதைப் போல, செல்கள் திசுக்களாகவும் எம்ப்ரியோவைப் போன்ற ஸ்டெம் செல்களாகவும் மாறும் தன்மைகொண்டவை என்று கண்டுபிடித்து  இருக்கிறார்கள்.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான சர் ஜான் கார்டன் தவளையின் முட்டையை எடுத்து, அதில் 'நியூக்ளியஸ்’ எனப்படும் மையப் பகுதியை நீக்கினார். அதே நேரத்தில், வேறு ஒரு தவளைக் குஞ்சின் குடல் திசுவைப் பிரித்து எடுத்து அதை அந்த முட்டையில் சேர்த்தார். இந்த மாற்றியமைக்கப்பட்ட முட்டையைக்கொண்டு புதிய தவளைக் குஞ்சு உருவாக்கப்பட்டது. இதுதொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை 1962-ல் வெளியானது. முதிர்ந்த ஒன்றில் இருந்து இளையதான ஒன்றை உருவாக்கும் இவரது கோட்பாடு பல்வேறு மருத்துவ உண்மைகளில் நேர்மாறாக இருந்தது. இதுபற்றி தொடர் ஆராய்ச்சிகள் மற்றும் விவாதங்கள் நடந்தன. தொடர் ஆராய்ச்சியின் விளைவாக, தவளைத் திசுவைக்கொண்டு செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சியைப் பாலூட்டி இனத்தில் செய்து பார்க்க முடிவு எடுக்கப்பட்டது. இப்படி 1997-ல் உருவாக்கப்பட்டதுதான் டாலி ஆடு. இரண்டு ஆடுகளில் இருந்து முட்டை, டி.என்.ஏ. பெற்று, மாற்றம் செய்யப்பட்ட எம்ரியோவை மற்றொரு ஆட்டில் செலுத்தி இந்த டாலி உருவாக்கப்பட்டது.

கார்டரின் ஆராய்ச்சி வெளியாகிக் கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் கழித்து ஜப்பானைச் சேர்ந்த யாமனாகா இந்த முறையைப் பின்பற்றி, சில மாற்றங்கள் செய்து முதிர்ந்த செல்லை அதன் பழைய இளம் நிலைக்கு கொண்டுவருவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் அடிப்படையில் எலியின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட செல்லில் அவர் நான்கு முக்கிய ஜீன்களை மாற்றினார். மாற்றி அமைக்கப்பட்ட இந்த செல்லானது எந்த ஒரு திசுவாகவும் மாறும் தன்மைகொண்ட 'ப்ளூரிபொட்டன்ட்’ செல்லாக மாற்றப்பட்டது. இந்தக் கோட்பாட்டின்படி ஓர் எலி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இந்த செல்லை மனிதர்களிடம் பயன்படுத்தி பல்வேறு நோய்களைக் குணமாக்க முடியும். நோய் வருவதற்கு முன்பு மட்டும் அல்ல, நோய் வந்தவர்களின் உடலில் இருந்தும் செல்லை எடுத்தும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் இதயம், மூளை நரம்பு, ரத்தம் உள்ளிட்ட எல்லா வகைத் திசுக்களையும் உருவாக்க முடியும். இதுதான் ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் உடலில் பழுதடைந்த செல்லை மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இவர்களின் ஆராய்ச்சி மூலம் 'பார்க்கின்சன்’ எனப்படும் நடுக்குவாதம் போன்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். மூளையில் 'டோபோமின் நியூரான்’ என்ற செல் பழுதடைந்துவிடுவதால், நடுக்குவாதம் ஏற்படுகிறது. இவர்களின் ஆராய்ச்சி முறைப்படி பழுதடைந்த செல்லுக்கு பதிலாக இளம் செல்லை உருவாக்குவதன் மூலம் பார்க்கின்சன் நோயைக் குணப்படுத்த முடியும்.

இதுவரை 'ஸ்டெம்செல்’ உருவாக்க, கருச்சிதைவு, கருகலைப்பு செய்யப்பட்டவர்களிடம் இருந்துதான் 'எம்ரியோ’ பெறப் பட்டுவந்தது. இதனால் இந்தத் திசுவைப் பெறுவது மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், யாமனாகாவின் ஆராய்ச்சி மூலம் இனி கருச்சிதைவு இல்லாமலேயே முதிர்ச்சியடையாத செல்லைப் பெற முடியும். இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை!''


 

No comments:

Post a Comment