அமெரிக்க அரசியல் களம் செம் ஹாட். நவம்பர் ஏழாம் தேதி அமெரிக்க அதிபர்
தேர்தல். ஒபாமா இரண்டாம் முறை போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி
ரோம்னியைத் தம் வேட்பாளராக அறிவித்தது. பல நிலைகளைத் தாண்டி
பிரசாரம் இப்போது தேசிய அளவில் டி.வி. விவாதங்களுக்கு வந்திருக்கிறது.
நேருக்குநேர் விவாதத்தில், அதிபர் பராக் ஒபாமாவை குடியரசுக் கட்சி
வேட்பாளர் மிட் ரோம்னி முந்தியுள்ளார். 90 நிமிட விவாதத்தைத் தொடர்ந்து,
சி.என்.என். மற்றும்
சி.பி.எஸ். தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்
வெளியிடப்பட்டன. இதில் 67 சதவிகிதம் வோட்டுகள் மிட் ரோம்னிக்குக்
கிடைத்தது. ஆனால், ஒபாமாவுக்கு 25 சதவிகிதம்.
மூன்று முறை இதுபோன்ற விவாதங்கள் நடக்கும். சிறப்பாகக் கருத்துக்களை
முன் வைக்கும் வேட்பாளருக்கு உடனடியாக மக்கள் ஆன்லைன் மற்றும் ஃபோனில்
வோட்டுப் போடுவார்கள். அதிக வோட்டு வாங்குபவருக்கு அது பிரசாரத்துக்குப்
பலம்
சேர்க்கும். இந்த விவாதங்களை நடத்துவது தேர்தல் கமிஷன் மாதிரியான ஒரு
நடுநிலை அமைப்பு.
ஒபாமாவுக்கும் ரோம்னிக்கும் நடந்த முதல் சுற்று டெலிவிஷன் குஸ்தியில்
ரோம்னிக்கே வெற்றி. ‘ஸ்டைல் பாயின்ட்ஸான பர்சனாலிட்டி, பேச்சுத்திறன்,
ஆளுமை, அதிரடி இவற்றில் ரோம்னி ஒபாமாவை ஒரு சில பாயின்ட்ஸ்
மிஞ்சி விட்டார். கென்னடி, கிளின்டன் போன்ற முந்தைய அதிபர்கள் மிகப்பெரிய
வெற்றிக்கு இந்த ஸ்டைல் பாயின்ட்ஸ் முக்கிய காரணங்கள்.
முதல் விவாதத்தில் ஒபாமா, தற்போதைய பொருளாதார மந்த நிலையைப் போக்குவது
பற்றிப் பேசினார். ஆனால், மிட் ரோம்னி அமெரிக்கப் பொருளாதாரம், சுகாதாரம்,
வேலை வாய்ப்பு, நிதித் தட்டுப்பாடு ஆகியவை
குறித்து விரிவாகப் பேசினார். பொருளாதார மந்த நிலையைப் போக்குவதில் ஒபாமா
தோல்வி அடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டினார். இதற்கு ஒபாமாவால் சரியாகப்
பதிலளிக்க முடியவில்லை. விவாதம் நடந்த அன்று ஒபாமாவின்
திருமண நாள். ஆனால் மனுஷன் மிக டல். சாதாரணமாக மிக நன்றாகப் பேசும் அவர்
அன்று சூப்பராகச் சொதப்பினார்.
1. பொருளாதாரம் 2. வரிச்சுமை 3. ஹெல்த்கேர்
ஒரே நாளிலோ, நாலே வருடங்களிலோ சரிசெய்ய முடியாத, மந்த கதியில் இருக்கும்
அமெரிக்கப் பொருளாதாரதையும், நாடு தழுவிய வேலையில்லாத் திண்டாட்டத்தையும்
போக்க ஒபாமா பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். ஏழைகள்
மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீது ரோம்னி வரிச்சுமையை ஏற்றிவிடுவார்.
பணக்காரர்களுக்குச் சலுகைகள் அறிவித்துவிடுவார். கனடா, பிரிட்டன் போல நாடு
தழுவிய ஹெல்த் இன்ஷூரன்ஸான ‘ஒபாமா கேர்’ திட்டத்தால் தனியார் இன்ஷூரன்ஸ்
கம்பெனிகளின் லாபம் குறையும்; மருந்து கம்பெனிகளின், ஆஸ்பத்திரிகளின்
கொட்டம் அடங்கும். அனைவருக்கும் நல்ல மருத்துவச் சிகிச்சை கிடைக்கும்...
போன்ற தம்மடைய பான்ட்களை அவர் அழகாகச் சொல்லவில்லை. ஆனால் நான்கு ஆண்டுகள்
ஒபாமா
ஒன்றும் செய்யாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். நான் வருமான வரியை மாற்றி
அமைத்து தொழிற்துறையை மேம்படுத்தி பல மில்லியன் அமெரிக்கர்களுக்கு
வேலைவாய்ப்பு தருவேன் என்பதை, எப்படி அதைச் செய்வேன் என்று சொல்லாமல்
ஆர்பாட்டமாகப் பேசிய
ரோம்னி மக்களைக் கவர்ந்துவிட்டார்.
சரி இரண்டு பேரில் இந்தியாவுக்கு யாரால் அதிக நன்மை? இரண்டு பேராலுமே
இல்லை. அவுட் சோர்சிங் முறையில் இந்தியர்கள் அமெரிக்கர்களின் இடத்தை
நிரப்பிவிட்டார்கள் என்று ஒபாமாவும், அவுட்சோர்ஸிங்கில் கோடிகளைச்
சம்பாதித்தாலும் இனி அதில் இந்தியாவை
ஒதுக்கி வைக்கப்போவதாக ரோம்னியும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் சரிந்து கிடக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் நிமிர்ந்தால்
பயன்பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. காரணம் நம் அன்னிய நாடுகளின்
வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு முக்கிய இடம் இருப்பதும், இங்குள்ள அன்னிய
முதலீடுகளில் அமெரிக்கர்களுடையது கணிசமாக இருப்பதும்தான். நமக்குத் தேவை
அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்றப் போகும் ஒரு பிரெஸிடெண்ட்.
ரமணன்
No comments:
Post a Comment