Search This Blog

Monday, October 15, 2012

கேல்கர் கமிட்டி


மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரவினங்களையும் செலவினங்களையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ஏற்படும் இடைவெளியே நிதிப் பற்றாக்குறை. இதைச் சரிக்கட்ட அரசு அந்த அளவுக்குக் கடன் வாங்க நேரிடுகிறது. இந்த நிதி ஆண்டின் பற்றாக்குறையை சரிசெய்ய அரசு கடன் வாங்க வேண்டிய தொகை 5.70 லட்சம் கோடி ரூபாய். இதில் 3.70 லட்சம் கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலேயே வாங்கப்பட்டு விட்டது. மீதியுள்ள இரண்டு லட்சம் கோடி ரூபாயை அடுத்த 2013 - பிப்ரவரிக்குள் வாங்க அரசு திட்டமிட்டிருக்கிறது. முதல் ஐந்து மாதத்துக்குள்ளேயே பெரும் அளவு கடன் வாங்கக் காரணம் வரிவசூல் பட்ஜெட்டில் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருப்பதுதான்.

இந்த மாதிரி நிதிப் பற்றாக்குறை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போவது கவலை அளிக்கும் விஷயம். இதனால் மத்திய அரசு விஜய் கேல்கர் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து அரசின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டது. இந்த கமிட்டியின் அறிக்கை செப்டெம்பர் கடைசி வாரத்தில் வெளியானது. அந்த அறிக்கையில் கவலை அளிக்கக்கூடிய சில உண்மைகள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.

நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி - 2012ல் அப்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியினால் பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டில் வருவாயை சில இனங்களில் அதிகமாகவும், செலவை சில இனங்களில் குறைவாகவும் காண்பித்திருப்பதாக கேல்கர் கமிட்டி தெரிவித்திருக்கிறது. முக்கியமாக, பட்ஜெட்டில் மானியத் தொகையின் அளவைக் குறைத்துக் காண்பித்திருப்பதாகவும், இதனால் மொத்தச் செலவு குறைவாகவும் வருமானம் அதிகமாகவும் காண்பித்திருப்பதால் நிதிப் பற்றாக் குறையின் அளவு பட்ஜெட்டில் காண்பித்திருப்பதைக் காட்டிலும் அதிகமாக இன்னும் 1,30,000 கோடியாகும் என்றும் தெரிவித்திருக்கிறது. அதிர்ச்சியான சமாசாரம் இது. இந்த அதிக அளவு நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் 6.33 சதவிகிதமாக இருக்கும். (பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது 5.1 சதவிகிதம்) இந்த 6.33 சதவிகிதம் நாட்டின் மொத்த உற்பத்தி அளவு 102 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஆனால் தொழில் வளர்ச்சியில் தேக்கம் என்ற இன்றைய நிதர்சன உண்மையை எடுத்துக் கொண்டால், நிதிப் பற்றாக்குறை 6.33 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கமிட்டியின் அறிக்கை கூறுகிறது.

நிலைமையைச் சமாளிக்க கேல்கர் கமிட்டி தெரிவித்திருக்கும் யோசனைகள்:

* அரசு பல இனங்களில் வழங்கும் மானியத்தைப் படிப்படியாக குறைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மானியச் செலவே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் முதற்கட்டமாக எரிபொருள்களின் விலையை சந்தை விலைக்கு நிர்ணயிக்கவேண்டும். அதற்கு ஆரம்பமாக பெட்ரோல், டீஸல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் இவற்றின் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* அரசிடம் இருக்கும் உபரி நிலத்தையும் விற்கலாம்.

* அரசு நிறுவனங்களாக இயங்கும் சில கம்பெனிகளின் பங்குகளையும் பங்குச் சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம். இதன் மூலம் பெறப்படும் தொகையையும் அரசின் மூலதனச் செலவுகளுக்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று இந்த கமிட்டி தெரிவித்திருக்கிறது. அரசு இதைப் பரிசீலனை செய்வதுடன் நாட்டின் இயற்கை வளங்களை, உதாரணமாக அலைக்கற்றை, நிலக்கரி, தாதுப் பொருள்கள், எரிவாயு முதலியவற்றையும் தனியாருக்கு விற்கும்போது சமீ பத்தில் உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாகக் கூறிய கருத்துக்களையும் மனத்தில் இருத்திச் செயல்படவேண்டும்.

கேல்கர் கமிட்டி சரியான நேரத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வி.கோபாலன் 

No comments:

Post a Comment