Search This Blog

Friday, October 26, 2012

ஓ பக்கங்கள் - மனசாட்சி அரசியல்! ஞாநி


எம்.ஜி.ஆரின் தொண்டர்களைக் காப்பாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக எம்.ஜிஆருக்கு, தாம் கொடுத்த வாக்குறுதியைத் தம் மனசாட்சிக்குத் தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றியிருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். 

அரசியலில் மனசாட்சியைப் பற்றி முதலில் பேசியவர் காந்தி தான். அதற்கு அவர் உள்ளுணர்வு என்று பெயர் வைத்திருந்தார். பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போதெல்லாம் தம் உள்ளுணர்வின் குரல் என்ன சொல்கிறது என்று காத்திருந்து, அதைக் கேட்டு அதன்படியே முடிவுகளை எடுத்ததாக அவர் சொல்லியிருக்கிறார். காந்திக்கு வெளியிலும் ஒரு மனசாட்சி இருந்தது. ராஜாஜிதான் அந்த மனசாட்சி. காந்தியின் பல முடிவுகள் பற்றிய மாறுபட்ட கருத்துகளை நேரடியாக அவருடன் ராஜாஜி விவாதிப்பது நடந்திருக்கிறது. அப்படி விவாதிக்கும் குரலைத் தான் காந்தி மனசாட்சி என்று வர்ணிக்கிறார்.

இப்போதைய அரசியல் வாதிகளுக்கெல்லாம் மனசாட்சி உண்டா என்று தெரியவில்லை. சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று சொன்னபோது தம் மனசாட்சி சொன்னபடி அப்படிச் செய்வதாகச் சொல்லியிருந்தார். கலைஞர் கருணாநிதியின் இன்னும் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பே மனசாட்சியைக் குறிப்பதுதான். ஆனால் அந்தப் புத்தகத்தில் அதன் குரல் எதுவும் ஒலிப்பதில்லை என்பது கண்ணதாசனின் வனவாசத்தைப் படித்தால் புரியும். கருணாநிதியின் வெளி மனசாட்சியாக முரசொலி மாறன் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. மாறன் சொன்னது எல்லாவற்றையும் கருணாநிதி கேட்டுக் கொண்டாரா என்பது தெரியவில்லை. சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று மாறன் சொன்னதைக் கேட்காமல் அமைத்து, தேர்தலில் அடி வாங்கினார். 

இனி சாதிக் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருப்பது அவருடைய மனசாட்சியின் சொல் கேட்டுத்தான் என்றே தோன்றுகிறது. நாமே சாதிக் கட்சிதானே, அப்புறம் மீதி சாதிக் கட்சிகளுடன் அணி சேர்ந்தால் என்ன முழுகிப் போய் விடும் என்று அவர் மனசாட்சி சொல்லியிருக்கலாம். 

கம்யூனிஸ்டுகள் பகுத்தறிவின்படி மனசாட்சி என்று ஒன்று தனியே இருப்பதாக நம்பலாமா என்று தெரியவில்லை. மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனசாட்சிகளும் கூட தற்கொலை செய்துகொள்ள முடியும் என்று தா. பாண்டியனை நினைக்கும்போது நம்பத் தோன்றுகிறது.

சிலருடைய மனசாட்சிகள் ( இருந்தால்) என்ன சொல்லும் என்று அறிய நான் ஆசைப்படும் பட்டியலில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். 

குறிப்பாக மன்மோகன்சிங், மாயாவதி, சுப்பிரமணியன் சுவாமி. மம்தா பானர்ஜி இந்தப் பட்டியலில் இல்லை. காரணம், அவர் தன் மனசாட்சி ஏதாவது குரல் எழுப்பினால், நீ யார் என்னைக் கேள்வி கேட்க என்று அதைக் கைது செய்ய உத்தரவிட்டு விடுவார் என்ற பயத்தினால் அது தானே தலைமறைவாகி விட்டிருக்கும் வாய்ப்பிருக்கிறது.

மம்தாவைப் போலவே பிடிவாதமும் உறுதியும் நிரம்பித் ததும்புபவரான ஜெயலலிதாவின் மனசாட்சியும் இதேபோல கியூ பிராஞ்சுக்கு அஞ்சி ஓடி ஒளிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதை அங்கீகரித்து அவர் அறிக்கை வெளியிட்டிருப்பதால், ஜெயலலிதாவின் மனசாட்சியும் அவரைப் போலவே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர். அ.இ.அ.தி.மு.கவை ஆரம்பித்து 41 வருடங்கள் ஆவதையொட்டி ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் அறிக்கையில்தான் முதன்முறையாக அவர் மனசாட்சி குறிப்பிடப் படுகிறது. எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதி அவர் தொண்டர்களைக் காப்பாற்ற தம் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகும். ஏன் அந்தத் தொண்டர்களைக் காப்பாற்ற வேண்டும்? அவர்கள்தான் அண்ணாவின் தி.மு.கவை தன் சுயநலத்துக்காகக் கைப்பற்றிய தீயசக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டு அண்ணாவின் அரசியலையும் திராவிட இயக்கக் கொள்கைகளையும் காப்பாற்றுவார்களாம்.

‘என் மனசாட்சிக்கு சரி என்று தெரிந்தவரை’ என்று ஜெயலலிதா இந்த அறிக்கையில் சொல்கிறார். அவருடைய இந்த நீண்ட நெடிய அர்ப்பணிப்பு வாழ்க்கையில் எதையெல்லாம் அவர் மனசாட்சி சரியென்று சொல்லியது, எதையெல்லாம் தவறென்று சொல்லியது என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. அது ஒரு பெரும் பட்டியலாக இருக்கும் என்பதால், ஒரு சிலவற்றிலேனும் அறிய முடிந்தால் நலம்.

எம்.ஜி. ஆர் உயிரோடு இருந்த கடைசி காலத்தில் அவர் ஆட்சி பற்றி புகார் செய்து பிரதமர் ராஜீவ்காந்திக்கு, ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினாரே, அது மனசாட்சி சரியென்று சொன்னதால்தானா?

தனக்கெதிராக சதி நடப்பதாக அறிவித்து உதவியாளர்/உடன் பிறவா சகோதரி சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றி அவர் உறவினர்கள் மீது வழக்குகள் தொடுத்தபோது மனசாட்சி என்ன சொல்லிற்று? திரும்பவும் சில வாரங்கள் கழித்து சசிகலாவை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்ட போது மனசாட்சி என்ன சொல்லிற்று ?

காரணமே சொல்லாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் முதல் சபாநாயகர் வரை ஆறு வாரத்துக்கொருமுறை மாற்றப்படுவதும் மனசாட்சியின் சரியைக் கேட்டுத்தானா?

தீய சக்தியின் ஊழலை எதிர்த்துத் தனிக்கட்சி கண்ட எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியவர் சொத்துக் குவிப்பு வழக்குக்காக ஒவ்வொருமுறை பெங்களூரு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறும்போதும், மனசாட்சி என்ன சொல்லும்?

உங்களில் ஒருத்தியாக நிற்பேன் என்று அணு உலை எதிர்ப்புப் போராட்டக் காரர்களிடம் சொன்ன சில மாதங்களிலேயே அவர்கள் அத்தனை பேர் மீதும் தேசத் துரோக வழக்கு போடச் செய்வது மனசாட்சியின் குரலைக் கேட்டுத்தானா? 

பொதுவாக மனசாட்சி என்பது ஒருவரின் சரி, தவறு இரண்டையும் அவரிடம் சொல்லும் என்பதே மனசாட்சியைப் பற்றிய உளவியல் மருத்துவக் கருத்து. ஆனால், ஜெயலலிதாவின் மனசாட்சி மட்டும் ஓ. பன்னீர்செல்வம் பாணியில் இடுப்பை வளைத்து முதுகைக் கவிழ்த்து எதற்கெடுத்தாலும் சரி என்று மட்டுமே சொல்லும் விசித்திர மனசாட்சியாக அமைந்திருப்பது உளவியல் மருத்துவத் துறைக்கே ஒரு மாபெரும் சவாலாகப் படுகிறது.

பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை எழுதாதே என்று ஒரு குரலும், எழுது என்று ஒரு குரலும் என் மனசுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. எழுதுவதே சரி என்று மனசாட்சி சொல்லிவிட்டதால் எழுதிவிட்டேன்.





No comments:

Post a Comment