Search This Blog

Wednesday, October 10, 2012

எனது இந்தியா ( காட்டன் காட்டிய அக்கறை! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர்ப் பாசனத் திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் கூறிவந்தார் ஆர்தர் காட்டன். இந்தியாவின் மேம்பாடு என்பது அதன் ஆறுகளை முறையாகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தாமல் பிற துறைகளில் வளர்ச்சி காண்பது பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும். இந்தியாவின் நீர்நிலைகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ளப்பட்டால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும் என்று காட்டன் 100 ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருக்கிறார். அதில் இன்று வரை நாம் கவனம் செலுத்தவே இல்லை.

நதி நீர்ப் பங்கீடு இன்று முற்றிலும் அரசியல்மயம் ஆகிவிட்டது. நியாயமாக, நமக்குக் கிடைக்க வேண்டிய காவிரி, பெரியாறு ஆறுகளின் நீருக்குக்கூட நாம் போராடி நீதிமன்றத்தில் காத்துக்கிடக்கிறோம். பென்னி குக், ஆர்தர் காட்டன் ஆகிய இருவரும் நமது விவசாயிகள் நலனில் காட்டிய அக்கறையை, இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் காட்டவில்லை என்பதுதான் பெரும் வேதனை.

நீர்ப் பாசன முறையில் புதிய சாதனைகளைப் படைத்த ஆர்தர் காட்டனைப் போல, நிலச் சீர்திருத்தத்தில் புது வழி காட்டியவர் தாமஸ் மன்றோ. இவருக்கு சென்னையின் மவுண்ட் ரோட்டில் தீவுத் திடல் அருகே சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. சேணம் இல்லாத குதிரை மீது கம்பீரமாக மன்றோ அமர்ந்து இருக்கின்ற அந்தச் சிலையைச் செய்தவர் பிரான்சிஸ் சாண்டரி. விவசாயத் துறையில் ரயத்வாரி திட்டம் என்ற முக்கியச் சீர்திருத்தத்தை மன்றோ ஏற்படுத்தினார். விவசாய நிலங்களை முறையாக அளந்து, அவற்றை நன்செய், புன்செய் என்று வகைப்படுத்தி, பயிர் விளைச்சலுக்கு ஏற்ப வரி நிர்ணயம் செய்யும் முறையையும் மன்றோ அறிமுகம் செய்தார். மேலும், விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் வரி வசூல் செய்யும் இடைத்தரகர்களாக ஜமீன்தாரர்கள் செயல்படக் கூடாது, அரசே நேரடியாக வரியை நிர்ணயிக்கவும் வசூல் செய்யவும் வேண்டும் என்றும் மன்றோ சிபாரிசு செய்தார். இதன் காரணமாக, ஜமீன்தாரர்களின் கோபத்துக்கும் புகாருக்கும் ஆளானார். இந்தியாவில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி, 12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் தாமஸ் மன்றோ.

ராணுவத்தில் இருந்தபோது அவர் ஆற்றிய பணிகள் யாவும், பிரிட்டிஷ் அரசுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்தது. குறிப்பாக, திப்பு சுல்தானை ஒடுக்குவதில் மன்றோ காட்டிய அக்கறை, அவரது 100 சதவிகித பிரிட்டிஷ் விசுவாசத்தையே காட்டுகிறது. ஆனால், நிர்வாக அதிகாரியாக மன்றோ பொறுப்பு ஏற்ற பிறகு, அவர் கொண்டுவந்த நலத் திட்டங்கள், சீர்திருத்தங்கள் இந்திய விவசாயிகள் மற்றும் நெசவாளிகள் மீது அவருக்கு இருந்த அக்கறையைக் காட்டியது.

1761-ம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் தாமஸ் மன்றோ பிறந்தார். நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும்கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. தந்தை அலெக்ஸாண்டர் மன்றோ. தாய் மார்கரெட் ஸ்டார்க். சிறு வயதிலேயே அம்மை நோய் தாக்கிய மன்றோவின் முகத்தில் வடுக்கள் நிரந்தரமாகிவிட்டன. அத்துடன், அவரது செவித் திறனும் குறைபாடானது. புகையிலை வணிகரான அப்பாவுக்குத் திடீரென வணிகம் நொடித்துப்போனது. வறுமையில் உழலும் குடும்பத்தின் நெருக்கடி அவரை இந்தியாவுக்குத் துரத்தியது. எப்படியாவது குடும்பத்தின் கடனை அடைக்க வேண்டும் என்று போராடினார் மன்றோ. பிரிட்டிஷ் அரசில் படிப்படியாக பதவி உயர்வு பெற்றபோதும் அவரால் குடும்பத்தின் கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை. இந்தியாவுக்கு வந்த புதிதில் அவருக்குச் சொந்தமாக படுக்கை, தலையணை, உருப்படியான மேஜை, கரண்டிகள்கூட கிடையாது. அவரது சகோதரன் அலெக்சாந்தர், வங்காளத்துக்கு வந்தபோது ஒரு படுக்கையை அவருக்குப் பரிசாக அளித்தார். அதன் பிறகே, இந்தியாவில் தான் தலையணை வைத்துப் படுத்ததாக மன்றோ குறிப்பிட்டு இருக்கிறார். அந்த நாட்களில் பெர்ஷிய மொழி கற்பதற்கு நாளில் பெரும் பகுதியை மன்றோ செலவிட்டிருக்கிறார்.

திப்பு சுல்தானுக்கு எதிராக நடந்த போரில், துணை நிலை ஆளுநராக மன்றோ பணியாற்றினார். அதில், ஆங்கிலேயர் வெற்றி பெற்றதால், பாராமகால் பகுதி முழுவதும் ஆட்சி செலுத்தும் உரிமை அலெக்ஸாண்டர் ரிட் மற்றும் தாமஸ் மன்றோ ஆகிய இருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்றுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதியும் திருப்பத்தூர் பகுதியும் ஒன்றாக அக்காலத்தில் பாராமகால் என அழைக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, பாராமகாலில் மன்றோ பணிபுரிந்தார். அந்த நாட்களில், மாவட்டம் முழுவதும் குதிரையில் அலைந்து திரிந்து விவசாயிகளின் உண்மை நிலைமையை நேரடியாக அறிந்துகொண்டார் மன்றோ. விவசாயிகளை, வரிச்சுமை மூச்சுத் திணறச் செய்கிறது என்பதை உணர்ந்த மன்றோ, அதை மாற்றி அமைக்க முற்பட்டார். இதற்கு, பிரிட்டிஷ் உயர் அதிகாரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதற்குப் பதில் தரும் விதமாக மன்றோ, 'வரிச் சீர்திருத்தம் என்பது ஏழை மக்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய உத்வேகம் தரக்கூடியது. அத்துடன், அரசுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகுக்கும்’ என்று வலியுறுத்தினார். ஆனால், இந்தியாவைவிட்டு மன்றோ இங்கிலாந்து சென்ற பிறகுதான், 1807-ம் ஆண்டு அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நில வரியை விதிப்பவன் கையில்தான் இந்தியாவின் அமைதிப் பிடி உள்ளது. ஆகவே, ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் முக்கிய வேலை நில வரியை முறைப்படுத்துவதுதான். ஓர் அரசு அதிகாரி தனது அலுவலக ரீதியான பயணத்தின்போது எவரிடமும் உணவோ, பொருட்களோ, பரிசோ வாங்கக் கூடாது. அது முறைகேடான செயல் என்று கூறிய மன்றோ, தனது பயணத்தில் கிராமத்து விவசாயி வீட்டில் குடித்த பாலுக்குக்கூட பணம் கொடுத்து இருக்கிறார். இங்கிலாந்தில் விசைத் தறிகள் முதன்மை பெறாத காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து துணிகள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதில், பிரிட்டிஷ் அரசுக்குக் கொள்ளை லாபம் கிடைத்தது. ஆகவே, இந்திய நெசவாளர்கள் தாங்கள் நெய்த துணிகளை வெளியாட்களுக்கு விற்கக் கூடாது, ஆங்கிலேய அரசாங்கத்துக்கு மட்டுமே நெய்து தர வேண்டும் எனக் கடும் நிபந்தனை விதித்து இருந்தது பிரிட்டிஷ் அரசு.

இந்த நெருக்கடியால் நெசவாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதைப் புரிந்துகொண்ட மன்றோ, நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் கொள்முதல் செய்யப்படும் துணிகளுக்கான விலையை உயர்த்திக் கொடுத்தல், வெளியாட்களுக்கு துணி நெய்து தர அனுமதி அளிப்பது, பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றுக்​கான சுங்க வரியை விலக்குவது ஆகிய சீர்திருத்தங்களை முன்மொழிந்தார். இதை ஏற்றுக்கொள்வதிலும் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனால், மன்றோவின் விடாப்பிடியான வலியுறுத்தல் காரணமாக சீர்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 28 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய பிறகு, மன்றோ லண்டனுக்குத் திரும்பிச் சென்றார். அதற்குள் அவரது தாய் இறந்துபோயிருந்தார். குடும்பம் சிதறுண்டுபோயிருந்தது. இந்தியாவில், மன்றோ மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக இங்கிலாந்து அரசு அவரை தனது நிர்வாக ஆலோசகராக வைத்துக்கொண்டது.

1814-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள நீதி நிர்வாக முறைகளை ஆய்வு செய்து அறிக்கை தருவதற்காக தனி ஓர் ஆணையத்தை உருவாக்கிய இங்கிலாந்து அரசு, 53 வயதான மன்றோவை அதன் தலைவராக நியமித்து, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. வங்காளத்திலும் தென் இந்தியாவிலும் இதற்காக மன்றோ நீண்ட பயணங்களை மேற்கொண்டார். நீதி நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு முக்கியப் பங்கு இருக்க வேண்டும், குறிப்பாக, தாய்மொழியில் நீதி விசாரணைகள் நடக்க வேண்டும், உள்ளூர் மொழியை வெள்ளை அதிகாரிகளால் நுட்பமாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடியாது என்பதால், இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்படுவதோடு சிறப்புப் பயிற்சியும் அளிக்க வேண்டும் என, மன்றோ தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். நீதித் துறையில் இன்று நடைமுறையில் உள்ள பல மாற்றங்கள் மன்றோ முன்மொழிந்தவையே. நீதி நிர்வாக சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, 1820-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆளுநராக மன்றோ நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பிறகு, அவருடைய பரிந்துரைப்படி கல்வி பற்றிய முறையான ஆய்வுகள் செய்யப்பட்டன. அத்துடன், 1822 திண்ணைப் பள்ளிக்கூடங்களுக்கு நிதிஉதவி அளிக்கப்பட்டு புத்துயிர் பெற்றன. வாரத்தில் மூன்று நாட்கள் தனது அலுவலகத்துக்கு நடந்து செல் வது மன்றோவின் வழக்கம். அப்போது, வழியில் செல்லும் மக்களிடம் பேசி நகர நிலவரங்களை அறிந்துகொள்வது அவரது பழக்கம். மன்றோவின் மனைவி வில்ஹெல்மினாவுக்கும் அவரது மகன் காம்பெலுக்கும் உடல்நலமற்றுப்போகவே, இருவரையும் இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார் மன்றோ. அத்துடன், பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அரசுக்குக் கடிதம் அனுப்பினார்.

பிரிட்டிஷ் அரசு உடனே அவர் பதவி விலகுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, மன உளைச்சலுக்கு ஆளான மன்றோ, 1826-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழகம் முழுவதும் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டார். அந்த நாட்களில், அவர் ஊட்டிக்குச் சென்று தங்கிய அனுபவத்தை ஒரு கடிதத்தில் மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறார். இடைப்பாடி அமுதன் எழுதிய 'கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ’ என்ற புத்தகத்தில், இதுகுறித்த விரிவான பதிவு இருக்கிறது. உதகையில் உள்ள சலிவனின் ஸ்டோன் ஹவுஸில் தங்கினார் மன்றோ. அதுபற்றி எழுதிய கடிதம் ஒன்றில், 'உதகமண்டலத்தில் உள்ள மலை முகடுகளும் சிகரங்களும் வெறும் பாறைகளாகத் தெரியவில்லை. அவை வட்டமாக, மிருதுவாக, பசும்புற்கள் அடர்ந்த ஆடையை அணிந்தாற்போல தோன்றுகின்றன. முன்பெல்லாம் இங்கு நீர் நிலைகள் கிடையாது. இப்போது, சலிவன் ஒரு ஏரியை உருவாக்கியுள்ளார். இரண்டு மைல் நீளம், கால் மைல் அகலத்தில் ஓர் ஓடையைத் திருப்பி அணை​​யைக் கட்டி, கரையை உயர்த்தி இந்த ஏரியை உருவாக்கியுள்ளார். அது ஓர் ஆறு போல் காட்சியளிக்கிறது. ஒரு சிறிய படகில் ஏறி, ஏரியின் தலை முதல் அடி வரை சென்று வந்தோம். இரவில் ஊட்டியில் கடுமையான குளிர், பேனாவைச் சரியாகப் பிடித்து எழுத முடியாத அளவு கை நடுக்கமாக உள்ளது’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது, ஊட்டியில் ஏரி உருவான விதம் பற்றிய முக்கிய ஆவணம். 

தனக்குப் பதிலாக புதிய கவர்னர் நியமிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதை அறிந்த மன்றோ, தனது பணிக் காலத்தில் மிகவும் நேசித்த கடப்பா பகுதிக்குப் போய்வர விரும்பினார். ஆனால், அங்கு காலரா நோய் பரவிக்கொண்டு இருந்தது. ஆகவே, பயணம் செய்ய வேண்டாம் என ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், காலரா தாக்கிய மக்களை நேரடியாகப் பார்க்க வேண்டும் என மன உறுதியோடு இருந்த மன்றோ, கடப்பா பகுதிக்குச் சென்றார். பட்டிகொண்டா என்ற கிராமத்துக்குச் சென்று நோயற்ற மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கே எதிர்பாராத விதமாக மன்றோவுக்கும் காலரா ஏற்பட்டது.  1827-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி இரவு 9.30 மணிக்குக் கடும் வயிற்றுபோக்கு காரணமாக மன்றோ உயிர் பிரிந்தது. குத்தி பகுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1831-ம் ஆண்டு அந்த உடல் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டு மாதா ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மன்றோவின் வெண்கல உருவச் சிலை 1839-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இப்போது, கடப்பாவில் உள்ள ஒரு அனுமார் கோயிலில் ராமர் சீதை படங்களுடன் தாமஸ் மன்றோவின் படமும் இருக்கிறது. அங்கே, தினமும் நடக்கும் பூஜையில் மன்றோ படத்துக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது.

இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் என, மன்றோ தனது ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். மன்றோ காலத்தில் துளிர்விடத் தொடங்கிய அதிகாரத் துஷ்பிரயோகம், கையூட்டு, நிர்வாக முறைகேடுகள் இன்று முற்றி கசப்புக் கனிகளாக விளைந்து இருக்கின்றன. மக்கள் பணத்தில் உருவான மன்றோ சிலை காலத்தின் தூசி படிந்து, மௌன சாட்சி போல நிற்கிறது. அந்தச் சிலையை விரைவில் அகற்றப்போவதாக சொல்கிறார்கள். பொது வாழ்வில், மன்றோ கடைப்பிடித்த அறங்கள் யாவும் என்றோ கைவிடப்பட்ட பிறகு, சிலை மட்டும் இருப்பது மனசாட்சிக்கு விரோதமானதுதானே!


No comments:

Post a Comment