ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்துதான் காயும், பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக
இருக்கும் போது நறுமணத்தையும் பழமாக இருக்கும் போது மதுரமான சுவையையும்
நமக்குத் தருக்கின்றன. இந்த பழம் மதுரம் ஆவதற்கு முன்பு எப்படி இருந்தது?
பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும்
இருந்து அதன் பின்னரே மதுரமாகிறது. மதுரம்
என்பது தான் சாந்தம். சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் போய்விடுகிறது.
பழத்தில் மதுரம் நிரம்பிய உடனே கீழே விழுந்து விடுகிறது. அது போல்
இதயத்தில் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லாப் பற்றும் போய்விடும்.
புளிப்பு இருக்கும் வரை பற்றும் இருக்கும். அப்போது காயைப் பறித்தால்
காம்பிலும் காயிலும் ஜலம் வரும். அதாவது மரமும் காயும் மரத்திலிருந்து
விடுபட விரும்பவில்லை. ஆனால் நிறைந்த மதுரமாக ஆகிவிட்டால் தானாகவே பற்றுப்
போய்விடும். பழம் தானே விழுந்து விடும்.
படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் மதுரமான ஒவ்வொருவரும் இப்படியே
ஆனந்தமாக சம்சார விருட்சத்திலிருந்து விடுபட்டு இருப்பார்கள். பழமாக
ஆவதற்கு முன் எப்படிப் புளிப்பும் துவர்ப்பும்
வேண்டியிருக்கின்றதோ, அது போல் காமம், வேகம், துடிப்பு எல்லாமும்
வேண்டியவைதான் போலிருக்கிறது. புளிப்பு இருக்க வேண்டிய சமயத்தில் புளிக்க
வேண்டும். துவர்ப்பு இருக்க வேண்டிய
சமயத்தில் துவர்க்க வேண்டும். ஆனாலும், அந்தந்த நிலையோடு நிற்காமல், பிஞ்சு
அனவரதமும் பழமாகிக் கொண்டே இருப்பது போல் நாமும் மதுரமான அன்பை நினைத்துக்
கொண்டே இருந்தால், மோக்ஷத்தை வெளியில் தேட வேண்டாம். எந்தக் காலத்தில்
எப்படி இருக்க வேண்டுமோ -அப்படி இருந்தால் தானாக மோக்ஷம் என்கிற மதுரநிலை
வந்து விடும்.
(காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அருளுரையிலிருந்து..)
(காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அருளுரையிலிருந்து..)
No comments:
Post a Comment