Search This Blog

Monday, July 21, 2014

கால்பந்தாட்ட வீரர் நெய்மர்


எத்தனை சாதனைகளைச் செய்தாலும் அதற்குப்பின்னால் பல சோதனைகளும்  இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர்.

1992ல் பிரேசிலில் உள்ள சா பாலோவில் பிறந்தார் நெய்மர். அப்பா கால்பந்தாட்ட வீரர் என்பதால், மகனுக்கும் இயல்பாகவே  கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் வந்தது. தனது ஏழாவது வயதில்  போட்டியில் கலந்துகொண்டு ஆடும் வாய்ப்பைப் பெற்றார். அதன்பின் பிரேசிலின் திறமைமிக்க இளம் கால்பந்தாட்ட வீரராக உருவானார்.

நெய்மரது திறமை ஐரோப்பிய கால்பந்தாட்ட லீக்குகள் வரை எட்டியது. 14 வயதில் லீக் அணிகளில் சேர்ந்த இவர், 17வது வயதில் ஐரோப்பிய கால்பந்தாட்ட லீக்கில் சிறந்த வீரருக்கான விருதை ஆரம்பத் தொடரிலேயே வென்றார்.


2011ல் நடைபெற்ற கோப்பா அமெரிக்கத் தொடரில் பிரேசில் அணி தோற்றது. அனைத்து ஊடகங்களும் பிரேசிலின் தோல்விக்குக் காரணம் காட்டியது நெய்மரைதான். இந்த விமர்சனத்தைக் கேட்டு நெய்மர் மனம் தளர்ந்துவிடவில்லை. அடுத்தடுத்த தொடரில் அசத்த ஆரம்பித்தார். 2013ல் பிரேசில் அணி கன்பெடரேஷன் கோப்பையை வென்றதன் மூலம் ஊடகங்களின் வாயை அடைத்தார் நெய்மர். 2014ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்திய பிரேசிலின் நட்சத்திர நாயகன் நெய்மர்தான். அதற்கு ஏற்றாற்போல் முதல் ஆட்டத்தில் பிரேசில் வீரர்கள் சேம் சைடு கோல் அடிக்க, தோல்வியின் பிடியில் இருந்த பிரேசிலை, அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து வெற்றி பெறவைத்தார்.

காலிறுதி போட்டியில் முதுகெலும்பு உடைந்து வெளியேறினார். அரையிறுதியில் அவர் இல்லாத குறையைப் போக்க, பிரேசில் அணிவகுப்பில் அவரது முகம் பதித்த டீஷர்ட்டை வீரர்களும், அவரது முகம் பதித்த முகமூடியை ரசிகர்களும் அணிந்து நெய்மரை நெகிழவைத்தனர். ஆனாலும், நெய்மர் இருந்த காலிறுதி ஆட்டம் வரை மட்டும்தான் பிரேசிலால் ஜெயிக்க முடிந்தது. அவர் இல்லாத  அரையிறுதியிலும், மூன்றாவது இடத்துக்கான போட்டியிலும் தோல்வி அடைந்தது.

தோல்விக்குக் காரணம் என்று தன்னை இகழ்ந்தவர் களையே, அவர் இல்லாததுதான்  தோல்விக்குக் காரணம் என்று கூறவைத்த நெய்மர், ஒரு நல்ல ரோ(கோ)ல் மாடல்தான்!

No comments:

Post a Comment