மூளைக்குத் தெரிகிறது வேறே; அதற்கும் ஆதாரமான உயிருக்குத் தெரிகிறது வேறே.
கோட்டான் கண்ணுக்கு வஸ்துக்கள் ராத்திரியில்தான் தெரிகிறது. பகலில் அதற்கு
எதுவும் தெரிவதில்லை. மநுஷக் கண்ணுக்குப் பகலில்தான் தெரிகிறது.
ராத்திரியில் தெரிவதில்லை. மூளைக்கு அநுபவம் தெரிவதில்லை. அதற்குத்
தர்க்கத்தையொட்டி விசாரிக்கிற அறிவு வாதம்தான் தெரியும். அநுபவம் தெரிகிற
ஹ்ரு தயத்துக்கு அறிவு வாதம் தெரிவதில்லை. ஜீவனின் ஸார ஸத்யமான உயிரைத்தான்
ஹ்ருதயம் என்பது. ஆனாலும் ஹ்ருதயம் லேசில் திறந்து கொள்வதில்லை. எதனாலோ
மநுஷ்யர்களுக்கு மூளைப் பெருமையையே பெரிசாக வைத்திருக்கிறது. அதனால்
எதுவுமே முதலில் புத்தியில், மூளையில் உறைத்தாக வேண்டியிருக்கிறது.
ஹ்ருதயமே அநுபவிக்கவேண்டிய ஆத்யாத்மிக விஷயங்களைக் கூட மூளை
ஸரியாயிருக்குமா, இருக்காதா என்று எடை போட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறது.
ஸரியாயிருப்பதாக அது முடிவு பண்ணினால் அதற்கப்புறமே, இப்படி நாம் அறிவினால்
முடிவு பண்ணினது போதாது. இதனால் அந்த விஷயத்தின் லக்ஷ்ய மான ப்ரயோஜனம்
நமக்குக் கிடைத்துவிட வில்லை. உதாரணமாக, ஆத்மா ஸச்சிதாநந்த ஸ்வரூபமாகத்தான்
இருக்க வேண்டுமென்று இத்தனை வேதாந்த புஸ்தகங்களைப் படித்து, குரு
உபதேசங்களைக் கேட்டு புத்தியினால் புரிந்துகொண்டபோதிலும் நமக்கும் ஸத்தும்
தெரியலை, சித்தும் தெரியலை, ஆனந்தமும் தெரியலை. அசடு மாதிரி துக்கப்பட்டுக்
கொண்டுதான் கிடக்கிறோம்.
அதனால் புத்திக்குள் போனதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை ஹ்ருதயத்துக்குள்
இறக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். மூளை, தான் பண்ண
வேண்டியதையெல்லாம் பண்ணியும் ஸாரமான ப்ரயோஜனத்தை அடைய முடியாமல் களைத்து
விழுந்த அப்புறம் தான் ஹ்ருதயத்தைத் திறந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம்
பிறக்கிறது. இது மநுஷ்ய ஜீவனுக்குத் தன்னுடைய மூளை விசேஷத்தினால் உண்டான
விபரீதமான பலன்!
அவ்வளவாக புத்தி போதாமலிருக்கிற எளிய ஜீவன்களைவிட புத்திமான்களுக்குத்தான்
இதன் கஷ்டம் ஜாஸ்தியாக ஏற்படுகிறது. அவர்கள் (எளிய ஜீவர்கள்) புத்தியால்
குடையாமல், ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில்
ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ’புத்திசாலி’ களான நாம்தான் திண்டாடுகிறோம்.
ஏதோ சில ஸமயத்தில் நமக்கும் ‘இதையெல்லாம் நம்முடைய மூளையால் எடை போட்டுத்
தீர்மானம் பண்ணிவிட முடியாது’ என்று தோன்றுகிறது.
எல்லாம் நம்முடைய மூளையின் ஜூரிஸ்டிக்ஷனுக்குள் (ஆணையெல்லைக்குள்) வந்து
விட முடியுமா என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment