Search This Blog

Sunday, July 13, 2014

நிதி அமைச்சர்!

முதல் பட்ஜெட்டிலேயே நடுத்தர மக்களின் மனம் குளிர வைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. மாதச் சம்பளக்காரர்களின் வரி வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தி சந்தோஷப்பட வைத்திருக்கிறார். வீட்டுக் கடன் வட்டிக்கான சலுகையில் 50 ஆயிரம் ரூபாயும், 80சி முதலீட்டு வரம்பில் 50 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி மகிழ்ச்சியைக் கூட்டியிருக்கிறார். இதனால் நடுத்தர மக்களிடம் இன்னும் கொஞ்சம் பணம் புழங்கும். சேமிப்பு பெருகவும், முதலீடு அதிகரிக்கவும் இதனால் வழிபிறக்கும்.

இன்ஷூரன்ஸ் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் அந்நிய முதலீடு 49 சதவிகிதமாக உயர்த்தியிருப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறார். சிறு தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்கக் கடன் வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் கோடியில் நிதித் தொகுப்பு அமைத்திருப்பதன் மூலம் இன்னும் பல ஆயிரம் தொழிலதிபர்கள் உருவாவார்கள். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக நெடுஞ்சாலை, துறைமுகம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, விவசாய மேம்பாட்டுக்காக பல திட்டங்கள், நாடு முழுக்க ஆங்காங்கே புதிய கல்வி நிலையங்கள், குறைந்த விலையில் வீடு, குடிநீர் வசதி என தன்னால் முடிந்த அளவுக்கு நிதியைத் தந்திருக்கிறார்.

பட்ஜெட்டை மேம்போக்காகப் பார்த்தால் பல விஷயங்கள் பாராட்டும்படி இருந்தாலும், பொருளாதாரத்தை அதிவேக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. நிதித் துறை உள்பட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டுவருவார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிருக்கிறது.
 

கழுத்தை நெரிக்கும் மானியத்தைக் குறைக்க  எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதை அதிகப்படுத்தி இருக்கிறார். திருமணத்துக்கு  மொய் எழுதுவதுபோல, பல திட்டங்களுக்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார். ஆனால், மோடியின் மனம் கவர்ந்த திட்டங்களுக்கு மட்டும் அதிக நிதியை தந்திருக்கிறார். நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவிகிதத்தில் வைத்திருக்க, வரி வசூலிப்பு 17.7% அதிகரிக்கும் என சொல்லியிருப்பது, இன்றைய பொருளாதாரச் சூழலில் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே!முப்பது ஆண்டுகளுக்குப்பின், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த மோடி அரசு, தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. இந்த பட்ஜெட் வரவிருக்கும் முக்கிய மாநிலத் தேர்தல்களை கருத்தில்கொண்டு போடப்பட்ட பட்ஜெட் மாதிரி தோன்றுகிறது. கடந்த ஆண்டுகளில் இதேபோல செயல்பட்ட காங்கிரஸ் அரசுக்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன வித்தியாசம்?

No comments:

Post a Comment