Search This Blog

Friday, August 16, 2013

ஓ பக்கங்கள் - மியூசியத்துக்கு வயது 315 - ஞாநி

 
சென்னையிலிருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஒரு குன்றில் இருக்கும் அழகிய சிறு வீட்டில் ஜன்னல் வழியே புல்வெளியில் மேயும் குதிரைகளைப் பார்த்தபடி சில்லென்ற காற்றில் நனைந்து கொண்டு இதை எழுதுகிறேன். பிரான்சில் லியோன் நகருக்கு அருகே செயின்ட் எடியொன் என்ற கிராமத்தில் நண்பர் வீடு இது. சென்னையை விட்டு வந்து 14 நாட்கள் ஆகின்றன. திரும்பி வர இன்னும் 31 நாட்கள் ஆகும். அந்த நாட்களில் ரோம், வெனிஸ், வியன்னா, பெர்லின், ஆம்ஸ்டர்டேம், பிரஸ்ஸெல்ஸ், லூவன், லண்டன், ஆக்ஸ்போர்ட்... என்றெல்லாம் சுற்றிவிட்டு வர திட்டம். இவ்வளவு நீண்ட காலம் நான் வெளிநாடுகளில் இருந்தது இல்லை. இந்த முறையும் ஒரு பத்தே நாட்கள் மட்டுமே வெளிநாடு போய் வரலாமென்று சிதம்பரம் நண்பர் பழநி அழைத்தார். நான் அதை 45 நாட்கள் பயணமாக மாற்றிவிட்டேன்.
 
பழநி தன் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் போதெல்லாம் நெருக்கமான ஓரிரு குடும்ப நண்பர்களையும் அழைப்பது வழக்கம். அப்படி அவருடன் ஊட்டி, எர்ணாகுளம், பாலி தீவுகளுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். பிரான்சின் பாரிசுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் போகலாம் என்று அவர் இம்முறை அழைத்தபோது, ஐரோப்பா பற்றிய என் கனவுப் பயணம் விரிவடைந்தது.நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நண்பர் அருள் என்னை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அந்த 15 நாள் பயண முடிவில் அடுத்து ஐரோப்பாவுக்கு செல்லவேண்டும் என்ற ஆவலே அதிகரித்தது. நீண்ட வரலாறு எதுவும் இல்லாத அமெரிக்கா தன் சின்ன வரலாற்றையே பிரம்மாண்டப்படுத்திக் கொண்டாடுவதைக் கண்டபோது நெடிய வரலாறு உடைய ஐரோப்பாவைக் காணும் ஆவல் அதிகமாயிற்று.ரோம், வெனிசுக்கெல்லாம் அடுத்த வருடம் செல்வோம் என்றார் பழநி. கடந்த சில வருடங்களாக என் உடல் சர்க்கரை, ரத்த அழுத்த நோயால் கடுமையாகச் சிதைக்கப்பட்டுவரும் நிலையில் செய்ய விரும்பும் எதையும் உடனே செய்ய முடியுமானால் அதை நிச்சயம் தள்ளிப் போடுவது இல்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். எனவே பத்து நாட்களில் பழநி குடும்பத்தினர் இந்தியா திரும்பியதும் நான் மட்டும் தனியே தொடர்ந்து ஐரோப்பாவில் சுற்றுவதென்று தீர்மானித்தேன். எனக்குச் சொந்தமான கொஞ்சம் நிலத்தை விற்று கணிசமான பணம் கிடைத்ததும் அதை இப்படி நான் விரும்பும் விஷயங்களுக்குச் செலவு செய்து தீர்ப்பது என்ற என் திட்டம் அவ்வளவு சீக்கிரம் நடப்பதாகத் தெரியவில்லை. அதுவரை பயணத் திட்டங்களைத் தள்ளிப் போடவும் விருப்பமில்லை. எனவே செலவுகளுக்கு உள்ளூரில் கடன் வாங்குவது, வெளிநாடுகளில் உதவி கோருவது என்று முடிவு செய்தேன். ஃபேஸ்புக்கில் அறிவிப்பு செய்ததும் பல நாடுகளில் இருந்து நண்பர்கள் அவரவர் ஊர்களில் நான் தங்கும் ஏற்பாடுகளையும் சாப்பாட்டுச் செலவுகளையும் சந்திக்க முன்வருவதாகத் தெரிவித்தார்கள். எந்த ஊரிலிருந்தெல்லாம் இப்படி அன்பான ஆதரவு அழைப்பு வந்ததோ அங்கெல்லாம் செல்லும் விதத்தில் பயண திட்டம் போட்டேன். அது ஐரோப்பாவைத் தாண்டி யு.கே. வரையில் போய்விட்டது. அழைப்பு இருந்தும் மியூனிக், போர்ச்சுகல் என்று சில ஊர்களைச் சேர்க்க இயலவில்லை.
 
என்னை தங்கள் விருந்தினராக அழைத்த இந்த அன்பர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் நான் இதுவரை சந்தித்திராதவர்கள். என் எழுத்தின் வழியே மட்டுமே என்னை அறிந்தவர்கள். எந்த ஊரி லும் எந்தச் சங்கமும் அமைப்பும் என்னை அழைக்கவில்லை. அழைப்பவர் எல்லாரும் தனி நபர்கள். இந்தப் பயணத்தில் என் நோக்கமும் கூட்டங்களில் பேசுவதல்ல. மனிதர்களைச் சந்திப்பதும் கலாசாரங்களுடன் உறவாடுவதும் அதன் ஊடே மானுடத்தின் பொதுப்புள்ளி என்ன என்று தேடுவதும்தான்!  நான்காண்டுகள் முன்னர் அமெரிக்கா சென்ற போது அங்கே இருக்கும் இந்தியர்கள் ஏன் அங்கேயே இருக்க விரும்புகிறார்கள் என்பதையும் சிலர் ஏன் திரும்பிவிட விரும்புகிறார்கள் என்பதையும் ஆர்வமாக விசாரித்தேன். இப்போது என் மனநிலை அதிலெல்லாம் ஈடுபாட்டுடன் இல்லை. எங்கே மன நிம்மதியுடன் வாழ முடிகிறதோ அங்கே வாழ்வதே சரி என்றே தோன்றுகிறது. தேசபக்தி என்பதை விட மனித நேயமும் மனித மகிழ்ச்சியும் பெரியவை. இப்போது எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. வேறொரு சமூகத்தில் சாத்தியமாகிற நல்ல விஷயங்கள் எல்லாம் ஏன் என் சமுகத்திலும் சாத்தியமாக முடியாமல் இருக்கிறது என்ற தேடல் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு கலாசாரத்திலும் வாழ்க்கை முறையிலும் இதைச் சாத்தியப்படுத்தும் அம்சங்களைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். ஒரு கலாசாரத்தை, அதன் வரலாற்றைப் புரிந்து கொள்ள நிகழ்கால அடையாளங்கள் எப்போதும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டே இருக்கின்றன. கடந்த கால ஆவணங்களாக மியூசியங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு மியூசியத்துக்குக் கூடப் போக நான் ஆசைப்பட்டதே இல்லை. இப்போது வெளிநாடுகளில் எத்தனை மியூசியத்தைப் பார்க்க முடியுமோ அனைத்தையும் பார்க்க ஆசையாக இருக்கிறது. பாமர மொழியில் சென்னையில் மியூசியத்தை செத்த காலேஜ் என்பார்கள். நிஜமாகவே செத்த காலேஜ்தான். ஒரு மியூசியம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான ஏராளமான உதாரணங்கள் இந்தியாவில் இருக்கின்றன. வெளிநாடுகளில் அவை உயிர்ப்புடன் வாழும் காலேஜ்களாக இருக்கின்றன. மியூசியத்தில் நுழைவதற்கு சினிமா தியேட்டரை விட நீண்ட கியூ இருப்பதை இங்கே பார்க்கலாம். 
 
பழநியின் மகளும் என் நண்பருமான அகிலா பாரிஸ் நகரில் எந்த மியூசியத்துக்கெல்லாம் நாங்கள் செல்லவேண்டும் என்று முன்கூட்டியே திட்டம் தீட்டியிருந்தார். ஒரு குடும்பம் நினைத்தால் தன் குழந்தையை என்னவெல்லாம் ஆக்கலாம் என்பதற்கு அகிலா ஓர் உதாரணம். நகை வணிகத்தில் தலைமுறைகளாக ஊறிய அவர் குடும்பத்தில் எந்த தலைமுறையிலும் இசை நடனக் கலைஞர்கள் இருந்ததில்லை. ஆனால் பெற்றோர் பழநி, ஜோதிமணியின் கலை ரசனை சிறு வயது முதல் அகிலாவை இசையிலும் நடனத்திலும் ஈடுபடுத்தி இன்று முழு நேரக் கலைஞராகக்கி இருக்கிறது. மகளுக்காக அம்மாவும் சேர்ந்து இசையும் நடனமும் கற்றுக்கொண்டார்! அப்பாவின் தமிழ்த் தேசிய அரசியல் ஈடுபாடு, மகளை ஒரு சொல் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் உரையாடப் பழக்கியிருக்கிறது.மியூசியத்துக்கு நடந்து போய் வரும் வசதிக்கேற்ற தங்கும் விடுதியை அகிலா தேடிக் கண்டுபிடித்து பாரிசில் ஏற்பாடு செய்திருந்தார். அதனால் அடுத்தடுத்து இரு தினங்கள் நாங்கள் லூவ்ரு மியூசியத்துக்குச் செல்ல முடிந்தது. இருதினங்கள் போதாது. இரு மாதங்கள் தேவை! உலகிலேயே மிக அதிகமான மக்கள் சென்று காணும் மியூசியம் லூவ்ரு. 
மியூசியம் என்பது பழைய விஷயங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம். ஆனால் மியூசியமே பழையது என்றால் எப்படி இருக்கும்? லூவ்ரு மியூசியத்தின் வயது சுமார் 315 வருடங்கள்!

(தொடரும்)

No comments:

Post a Comment