Search This Blog

Sunday, August 18, 2013

இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு எது பெஸ்ட்?

முதலில் ஆன்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லதா அல்லது ஆஃப்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லதா?
 
எண்டோவ்மென்ட், யூலிப் போன்ற பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி அதிக பயன் தரக்கூடியது. குறைந்த பிரீமிய தொகையில் அதிக ஆயுள் கவரேஜ் கிடைப்பது டேர்ம் ப்ளானின் மிக முக்கிய பாசிட்டிவ் அம்சம்.

ஆனால், நம்மவர்கள் ஆயுள் காப்பீட்டை ஒரு முதலீடாகவே பார்ப்பதால், முதிர்வுத் தொகை எதுவும் கிடைக்காத டேர்ம் ப்ளானை அதிகம் விரும்புவதில்லை. இப்போது இந்த அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு டேர்ம் பாலிசிகளையும் எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள் பலர்.  

டேர்ம் பாலிசியை ஆன்லைனில் எடுக்கும்போது பிரீமியம் கணிசமாக குறையும் என்றாலும், சரியான பாலிசியைத் தேர்வு செய்கிறோமா என்கிற குழப்பமும் இருக்கவே செய்யும். எனவே, ஏஜென்ட்கள் மூலம் பாலிசி எடுப்பதிலும், ஆன்லைன் மூலம் பாலிசி எடுப்பதிலும் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வோம்.

:::::::::::::::::::ஏஜென்ட்கள் மூலம்..!:::::::::::::::::
சாதகம்!

இன்ஷூரன்ஸ் விஷயத்தில் ஏஜென்ட்களின் வழிகாட்டுதல் அவசியமானது. நம் வருமானம், வேலை/தொழிலின் தன்மையைப் பொறுத்து எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுத்துக்கொள்ளலாம் என்பதை ஏஜென்டிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியும். மேலும், பல காப்பீட்டுத் திட்டங்கள் இருப்பதால் கூடுதல் பலன் தரக்கூடிய வகையில் எந்த பாலிசி எடுப்பது என்பதை ஏஜென்டிடம் கேட்கலாம்.  

 பிரீமியம் கட்ட ஏஜென்ட் நினைவுபடுத்துவார். இதனால் பாலிசி காலாவதி ஆவது தவிர்க்கப்படும்.

 பாலிசி எடுக்கத் தேவையான ஆவணங்கள், தேவை எனில் மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுக்கு ஏஜென்ட் வழி காட்டுவார்.  

 பாலிசி க்ளைம் செய்யும்போது தேவையான ஆவணங்களைக் கேட்டு வாங்கி அவரே முன்நின்று அனைத்து வேலைகளையும் முடிப்பார். மேலும், எந்தெந்த காரணத்தினால் பாலிசி க்ளைம் கிடைப்பதில் தாமதம் ஆகும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால் க்ளைம் பெற்றுத் தருவதில் கவனமாக இருப்பார்.

பாதகம்!

சில காப்பீட்டு நிறுவனங்களில் குறிப்பிட்ட டேர்ம் ப்ளான்தான் நடைமுறையில் இருக்கும். அதில் பிரீமியம் அதிகமாக இருக்கும். அந்த பாலிசியையே ஏஜென்ட் பரிந்துரைத்தால் அதிக பிரீமியம் கட்டவேண்டியிருக்கும்.  உதாரணத்துக்கு, பாலிசி முதிர்வில் கட்டிய பிரீமியத்தைத் திரும்பக் கிடைக்கிற மாதிரியான டேர்ம் பாலிசிக்கு பிரீமியம் அதிகம்.

 ஏஜென்ட் வேறு வேலைக்கு மாறியிருந்தால் பாலிசி சேவை கிடைக்காமல் போகும்.

 பாலிசி விண்ணப்பத்தில் ஏஜென்ட் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டுவிடும் நடைமுறைதான் காணப்படுகிறது. இதனால், உடல்நலம் தொடர்பான சில விஷயங்கள் இடம்பெறாமல் போகலாம். இதனால் க்ளைமின்போது சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு.

:::::::::::::::::::::ஆன்லைன் மூலம்..!:::::::::::::::::::

சாதகம்!

 ஏஜென்ட் கமிஷன் இல்லாமல் பாலிசி விற்கப்படுவதால் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொண்ட பாலிசியை எடுக்கலாம். ஏஜென்ட்களிடம் எடுக்கும் பாலிசிக்கான பிரீமியத்தைவிட, ஆன்லைன் மூலம் எடுக்கும் காப்பீட்டின் பிரீமியம் 30 - 50% வரை குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு, 30 வயதுடைய ஒருவர் 50 லட்சம் ரூபாய்க்கு ஏஜென்ட் மூலம் டேர்ம் பாலிசி எடுக்கிறபோது ஆண்டுக்கு 14,000 ரூபாய் வரை பிரீமியம் செலுத்தவேண்டும். ஆனால், ஆன்லைன் மூலம் பாலிசி எடுத்தால் பிரீமியம் தொகை சுமார் ரூபாய் 7,000 மட்டுமே!

தேவைப்பட்டால் பாலிசி தொடர்பான விவரங்களைக் காப்பீடு வழங்கும் நிறுவனத்தின் கிளையில் நேரடியாக கேட்டுப் பெறலாம்.  

 தேவையான ஆவணங்கள், நடைமுறைகள், மருத்துவப் பரிசோதனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைகள் போன்ற விவரங்கள் ஆன்லைன் மூலமாகவும், காப்பீடு நிறுவனத்தின் கால்சென்டர் மூலமாகவும் பெறலாம்.  

 பல நிறுவனங்கள், ஒருவர் எவ்வளவு தொகைக்கு டேர்ம் ப்ளான் எடுக்கவேண்டும் என்பதைக் கணக்கிடும் கால்குலேட்டரை அதன் இணையதளத்திலே வைத்திருக்கின்றன. அதன் மூலம் பாலிசி தொகையை எளிதாக முடிவு செய்துகொள்ள முடியும்.

நமக்குப் பொருத்தமான பாலிசி எது, எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுக்கலாம் என்கிற விவரங்களை நாமே தீர்மானிக்கலாம்.  

  பாலிசி விண்ணப்பத்தை நாமே பூர்த்தி செய்வதால் உடல்நலம் தொடர்பான விஷயங்கள் எல்லாம் இடம் பெற்றுவிடும். இதனால், க்ளைம் சுலபமாக இருக்கும்.

பாதகம்!

 நமக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் திட்டம் எது என்பதை முடிவெடுப்பதில் சிக்கல் வரலாம்!

 ஏகப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து எதை தேர்வு செய்வது என்கிற குழப்பம் இருக்கும். காப்பீடு எடுக்க நினைக்கும் எல்லோரும் அதுகுறித்த விழிப்பு உணர்வு உள்ளவர்கள் என்று சொல்ல முடியாது.

 பாலிசிகள் குறித்து ஏற்படும் சந்தேகங்கள் விளக்கங்களுக்கு கால் சென்டரைத்தான் நம்பவேண்டும். சில நேரங்களில் மொழிப் பிரச்னையும் வரும்.

 ஆன்லைனில் இன்ஷூரன்ஸ் எடுக்க கணினி மற்றும் இணையதள அறிவு அவசியம். மேலும், இணையதளம் மூலமாக பணம் கட்டுவதற்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது ஆன்லைன் பேங்கிங் வசதி உங்களுக்கு இருப்பது அவசியம்.

 பாலிசியில் ஏதாவது பிரச்னை என்றால் அருகிலுள்ள கிளைக்கு சென்றுதான் சரிசெய்ய வேண்டும். ஆனால், ஆன்லைன் டேர்ம் ப்ளான் வழங்கும் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கிளை எல்லா ஊர்களிலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. இது தேவையற்ற அலைச்சலை தரும்.

ஆன்லைனில் பாலிசி எடுக்கிறோம் எனில், எப்போது பிரீமியம் கட்டவேண்டும் என்பதை நாம்தான் கவனிக்கவேண்டும். சில நிறுவனங்கள் பிரீமியம் கட்டுவதை நினைவூட்டி எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் அனுப்பினாலும், இதை கவனிக்காமல்விட்டால் பாலிசி முடிவுக்கு வரும்.  

 ஆன்லைன் மூலம் பாலிசி விற்பனை வந்து சில வருடங்களே ஆவதால் க்ளைம் நடைமுறைகள் எந்த அளவிற்கு பாலிசிதாரருக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.    

 க்ளைம் செய்வதற்கு தரும் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஒருவர் குறை இருந்தால், க்ளைம் பெறுவது தாமதம் ஆகலாம்.

பொதுவாக, ஏஜென்ட்கள் மூலம் எடுக்கப்படும் டேர்ம் ப்ளான்களின் சராசரி கவரேஜ் 18 முதல் 20 லட்சம் ரூபாயாக உள்ளது. இதுவே ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் டேர்ம் ப்ளான்களில் சராசரி கவரேஜ் 40 முதல் 50 லட்சம் ரூபாயாக உள்ளது. இதற்கு காரணம், சுயமாக முடிவு செய்து டேர்ம் ப்ளான் எடுப்பதால் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கிறது.
 



 

No comments:

Post a Comment