சினிமாவைப் பார்த்து சினம் கொள்வது 'தியாகபூமி’ காலத்துப் பழசு.
கல்கி கதை-வசனத்தில் உருவான 'தியாகபூமி’ வெளிவந்தபோது
எதிர்ப்பு இல்லை. ஐந்து ஆண்டுகள் கழித்து (1944-ல்) மீண்டும்
திரையிடப்பட்டபோது அன்றைய சென்னைக் காவல் துறை ஆணையர் 'படத்தை வெளியிடக்
கூடாது’ என்று தடுத்தார். படத்தில் காங்கிரஸ் தொண்டர்களைக்
காட்டுகிறார்கள்! என்று காரணம் சொன்னார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி, தனக்கு எதிரான படம் என்று
'தியாகபூமி’யை எதிர்த்தது. காட்சிகள் மாறி... காங்கிரஸ் அரசாங்கமே வந்த
பின்னால், திராவிடர் இயக்கச் சார்ப்புத் திரைப்படங்கள் இதேபோன்ற சிக்கலைச்
சந்தித்தன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்... அதே அஸ்திரத்தை
அனைத்துக் கதாநாயகர்கள் மீதும் ஏவின.
அன்று 'தியாகபூமி’ படத்தைத் தடை செய்து விட்டார்கள்
என்று தெரிந்ததும், இயக்குநர் கே.சுப்ரமணியம், 'கெயிட்டி’ தியேட்டருக்கு
வந்தார். தியேட்டர் கதவுகளைத் திறந்துவிட்டார். 'எல்லோரும் இலவசமாகப்
பாருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனதாகச் செய்திகள் உண்டு. கே.சுப்ரமணியம்
செய்தது மாதிரி இயக்குநர் விஜய்யோ, தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயினோ
செய்ய முடியாது. மக்களுக் காக படத்தில் பாடுபடும் நடிகர் விஜயே இதற்குச்
சம்மதிக்க மாட்டார். இது கோடிக்கணக்கான பணமும் அரசியல் அபிலாஷைகளும் கலந்த
வர்த்தகம். இது ஜெயலலிதாவுக்கும் தெரியும் என்பதுதான் 'தலைவா’ தலைவலிக்குக்
காரணம்!
இன்று, 'ஒரு படைப்பாளியாகப் பரிதவிக்கிறேன்’ என்று
புலம்பும் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில்தான், 'காவலன்’
படத்துக்குச் சிக்கல் வந்து விஜய் புலம்ப ஆரம்பித்தார். அது, ஜெயலலிதாவை
நோக்கி விஜயை நகர்த்திச் சென்றது. படம் ரிலீஸா னால் போதும் என்று
நினைக்காமல், கருணாநிதி ஆட்சிக்கு எதிரான அஸ்திரங்களை அப்பா
எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடுத்தார். மகனை, ஊர் ஊராகப் பிரசாரத்துக்குக்
கொண்டுபோய், இன்னொரு எம்.ஜி.ஆர். ஆக்க நினைத்தார். தன்னால் வளர்க்கப்பட்ட
விஜயகாந்த், ஒரு கட்சித் தலைவராகும்போது, தனக்குப் பிறந்த மகன் தலைவனாக
மாட்டானா என்று எஸ்.ஏ.சி. துடித்தார். ஆட்சி மாறியது. அம்மா வந்தார். இந்த
வெற்றியில் பங்குபோட வந்தவர்களை ஒவ்வொருவராக வெட்டிவிட்டார். விஜயகாந்தும்
விஜய்யும் அரசியல் கற்றுக்கொண்ட இடம் அதுதான். ராஜீவ் படுகொலையின் அனுதாப
அலையில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகுகூட 'இதற்கும் காங்கிரஸுக்கும்
சம்பந்தம் இல்லை’ என்று மதுரையில் வைத்துச் சொன்னவர் ஜெயலலிதா என்பதை
விஜயகாந்த், விஜய் இருவருமே உணரவில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும்
தன்னுடைய தோளுக்கு மேல் குரோட்டன்கள் வளருவதை விரும்பாத தோட்டக்காரர்கள்.
'விஸ்வரூபம்’ படத்துக்கு வந்த எதிர்ப்பு வேறு; 'தலைவா’வுக்கு வந்த
எதிர்ப்பு வேறு. 'விஸ்வரூபம்’ குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மிகக் கடுமையாக
விமர்சிக்கிறது என்று சொல்லி, அந்தச் சமூகத்தினர் 'குறிப்பிட்ட காட்சிகள்,
வசனங்களை நீக்கியே ஆக வேண்டும்’ என்று நின்றார்கள். தன்னுடைய சாதுர்யத்தின்
மூலமாக கமல் இதனை வென்றார். ஆனால், 'தலைவா’ படத்தின் காட்சிகளில் அப்படி
எந்தச் சிக்கலும் இல்லை.
'நம்ம ஊர் அரசியல்ல சேர எல்லாத் தகுதியும் உனக்கு இருக்கு’ - என்று
சந்தானம் சொல்வதும்... 'தலைவன்கிறது நாம தேடிப் போற விஷயம் இல்லை. நம்மைத்
தேடி வர்ற விஷயம். உன்னை அவங்களுக்குத் தலைவன் ஆகக் கூப்பிடுறாங்க’ - என்று
ஒய்.ஜி.மகேந்திரா சொல்வதும்... மட்டும்தான் 'தலைவா’ படத்தின் அரசியல்
வசனங்கள். இந்த வசனங்களை உச்சரிக்கும் இருவருமே காமெடியன்கள்.
நீதான் அடுத்த முதலமைச்சர். உனக்குத்தான் ஆளத் தகுதி
இருக்கு. உன்னால்தான் இந்த ஆட்சியே அமைந்தது. இன்றைக்கு இருப்பவங்களுக்கு
ஆளவே தெரியலே’ என்பது மாதிரியான சீரியஸான விமர்சனங்களோ, திமிர் பிடித்தப்
பெண்ணை ரஜினி விமர்சித்ததை, ஜெயலலிதாவுக்குச் சொன்னதாக மாற்றி உள்நோக்கம்
கற்பித்ததுபோலவோ இந்தப் படத்தில் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட காட்சிகள்
வைப்பதற்கான துணிச்சல் விஜய்யிடம் இல்லை என்பதே உண்மை. நலத்திட்ட உதவி
வழங்கும் விழா ஒன்றைக்கூட தடையை மீறி நடத்த முன்வராத 'தலைவா’வில் வேறு
அரசியல் இல்லை.
'தலைவா ரிலீஸ் ஆகும் எல்லாத் தியேட்டர்களுக்கும்
என்னுடைய ரசிகர்கள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். குண்டுகளை அவர்கள்
தாக்கித் தகர்ப்பார்கள்’ என்று விஜய் அறிவித்திருந்தால், அதுதான் அரசியலாகி
இருக்கும். அவர் தலைவராக முதல் அடி எடுத்துவைத்திருக்கக்கூடும்!
இப்போதைய பிரச்னை, விஜயின் அரசியல் தகுதி பற்றி அல்ல; இந்தத் தடைகளுக்குப் பின்னால் இருக்கும் தமிழக போலீஸின் தகுதியின்மை பற்றி!
'படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு
வைப்போம்’ என்று சொன்ன அமைப்பு எது, அமைப்பாளர்கள் யார், அவர்கள் இதற்கு
முன்னால் இத்தகையக் காரியங்களைச் செய்துள்ளார்களா, அவர்கள் எங்கே
இயங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை இது வரை (ஆகஸ்ட் 19) தமிழகக்
காவல் துறை கண்டுபிடிக்கவில்லை. 'வெடிகுண்டு மிரட்டல் வந்தது’ என்பதற்காக,
தியேட்டர்காரர்கள் பயப்படலாம்; காவல் துறையுமா பயப்படுவது?
தமிழ்நாட்டில் உள்ள 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களை வெடிகுண்டு வைத்துத்
தகர்க்கும் சக்தி உள்ள அமைப்பாக அது இருக்குமானால், இந்தியாவிலேயே அதுதான்
மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாக இருக்க முடியும். வெளி நாட்டைத்
தளமாகக்கொண்டு செயல்படும் அமைப்புகள்கூட மும்பை மற்றும் கோவையில் வேறு வேறு
சம்பவங்களாகத்தான் வன்முறையில் ஈடுபட்டன. இந்த அமைப்புக்கு தமிழ்நாட்டின்
அத்தனை நகரங்களிலும் வெடிகுண்டு வைக்கும் பலம் இருக்கிறதென்றால், அந்தக்
கடிதத்தைப் பார்த்து நடிகர் விஜயைவிட தமிழ்நாடு போலீஸுக்குத் தான் அதிக
பயம் வந்திருக்க வேண்டும். அப்படி மிரட்டல் விடுத்தவர்களோடு தொடர்புடையதாக
சந்தேகப்படும் எவரையும் இதுவரை விசாரணைக்குக்கூட போலீஸ் அழைத்ததாகத்
தெரியவில்லை. ஏதோ ஓர் அநாமத்து கடிதத்துக்காக ஒரு படத்தை வெளியிட முடியாது
என்றால், இதே போன்ற மிரட்டல் பள்ளிக்கூடங்களுக்கும் கோயில்களுக்கும்
வந்தால் மொத்தமாகப் பூட்டிவிடுவார்களா என்ன? வெடிகுண்டு மிரட்டல் காரணமாகப்
பயப்படும் திரையரங்க உரிமையாளர்களை அழைத்துப் பேசி தைரியம் கொடுத்திருக்க
வேண்டியது, தமிழ்நாடு காவல் துறையின் கடமை. ஆனால், இவர்கள் பயந்து
பம்மியதுதான் அரசியல் சந்தேகங்களை அதிகமாகக் கிளப்பியது.முந்தைய தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு
வெடித்தது. அதற்குக் காரணமானவர்கள் இன்றுவரை கைதாகவில்லை. அதன் விசாரணை
அதிகாரி இப்போது எங்கே, என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பதே தெரியவில்லை.மதுரைக்கு ஸ்டாலின் வந்து இறங்கிய ஒரு நாள், அவர் மீது யாரோ கத்தி வீசிச்
சென்றதாகச் சொல்லப்பட்டது. அதன் பிறகுதான் ஸ்டாலினுக்கு மத்திய போலீஸ்
பாதுகாப்பு தரப்பட்டது. அந்தக் கத்திக்காரன் இன்றுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வரிசையில் போலீஸ், பதக்கங்களில் ஒன்றாக
இந்தத் 'தலைவா’ மிரட்டலையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.
சட்டசபைக்கும் வராமல், மக்களுக்கான எந்தப் போராட்டமும்
நடத்தாமல்... 'தான் உண்டு; பழைய பாட்டு உண்டு’ என்று இருந்த விஜயகாந்த்
மீது, தினமும் ஒரு வழக்குப் போட்டு ஊர் ஊராகப் போகவைத்து... அவரது
தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டி வருவதைப்போல, இப்போது விஜய்க்கும் ஒரு
காரணம் கிடைத்துவிட்டது. 'தலைவா’ பிரச்னைக்குப் பிறகு, இனி அவர் தைரியமாக
அரசியல் பேசலாம்; சவால் விடலாம்; சண்டைக்கு இழுக்கலாம். 'அவருக்கு இவ்வளவு
டார்ச்சர் செய்தால், கட்சி ஆரம்பிக்காமல் என்ன செய்வார்?’ என்று அவரை
பிடிக்காதவர்கள்கூட காரணம் கற்பிப்பார்கள். படப்பிடிப்பு தொடங்கும்போது
இல்லாத லாஜிக், ரிலீஸ் ஆகும்போது விஜய்க்குக் கிடைத்துவிட்டது.
'வாங்கண்ணா... வணக்கங்கண்ணா...
வரப்போறீங்களாண்ணா?’
ப.திருமாவேலன்
No comments:
Post a Comment