பாரீஸ் மியூசியத்தை லூவ்ரு என்று எழுதுகிறீர்களே, அதை லூவர் என்றோ லூவ்ரே
என்றோ சொல்ல வேண்டாமா என்று ஒரு நண்பர் கேட்டார். பல மொழிகளுடன் இதுதான்
சிக்கல். அவற்றில்
எஸ், டி, ஜி எல்லாம் ஒலியில்லாமல் சைலன்டாக இருக்கும் என்பார்கள்.
பாரீஸுக்குப் போ என்று சுமார் 40 வருடம் முன்னால் ஜெயகாந்தன் எழுதியதைப்
படித்துவிட்டு, பாரீஸ் போகும் ஆசையை
ஒரு வழியாக இப்போது நிறைவேற்றிக் கொண்டு அங்கே போனால், அது பாரீஸ்
இல்லையாம். பாரியாம். எஸ்சை உச்சரிக்கக்கூடாது என்கிறார்கள்
உள்ளூர்க்காரர்கள்! பெயர்களை, மொழி இலக்கணத்துக் கேற்ப
மாற்றி உச்சரிக்கலாம் என்ற விதிப்படி பாரீஸை நாம் பாரீஸாகவே வைத்துக்
கொள்ளலாம்.
பாரீசில் இருந்த ஆறு நாட்களில் இரு தினங்களை லூவ்ருவில் கழித்தேன்.
மியூசியத்துக்கே ரெண்டு நாளா என்று சில நண்பர்கள் கேட்டார்கள். லூவ்ருக்கு
ரெண்டு நாள். அப்புறம் ஆர்ஸீ, ஆர்மி, வெர்செல்ஸ் எல்லாம்
வேறு. என் பயணத் திட்டத்தையே ஊருக்கு மூன்று நாள் என்று போடாமல் ஒரே ஊரில்
ஒரு மாதம் என்று போட்டிருந்தால், லூவ்ரு போன்ற இடத்தில் 10 நாளாவது
செலவிட முடியும்.அந்த அளவுக்கு அந்த மியூசியங்களில் நம் அறிவை வளர்க்கவும்
உற்சாகப்படுத்தவும் விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நமக்குத் தரும் முறையை
மேலைநாட்டினர் சிறப்பாக
உருவாக்கி வடிவமைத்து நேர்த்திப்படுத்தி வைத்திருக்கிறார்கள். என்
பயணத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு மியூசியத்துக்காவது செல்லாமல் நான்
திரும்பவில்லை. இன்னும் பல மியூசியங்களைப் பார்க்க
முடியவில்லையே என்ற வருத்தம்தான் உண்டு.இந்தியாவில் ஒருபோதும் மியூசியத்துக்குப் போகவில்லையே என்ற வருத்தம் வந்ததே
இல்லை. அங்கே நாம் போனாலே உன்னை யார் இங்கெல்லாம் வரச் சொன்னது என்ற
தோரணையில்தான் ஊழியர்களின் உடல்மொழி இருக்கும்.
காட்சியகத்தில் காட்சியும் இருக்காது. விளக்கமும் இருக்காது. ஒட்டடையும்
அழுக்கும்தான் இருக்கும். சென்னை எழும்பூர் மியூசியத்தில் ஆட்டோவை உள்ளே
விடமாட்டார்கள். சினிமா, நாடகம், இசைக்கெல்லாம் விருப்பத்துடன் போவது போல மியூசியத்துக்கும்
போகலாம் என்ற மனநிலையை மேலைநாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு
மியூசியத்திலும் ஒரு நல்ல புக் ஷாப் இருக்கிறது. வெறுமே சாவிக்கொத்து
மாதிரி நினைவுப் பொருட் கள் விற்பது மட்டுமல்ல; தரமான நூல்கள் இருக்கின்றன.
இம்ப்ரஷனிசம் என்பது ஓர் ஓவிய
பாணி. அதை சிறுவர்களுக்கு எப்படி புரியும் விதத்தில் சொல்வது என்பதற்கு
புத்தகம் வாங்கினேன். பள்ளிக் குழந்தைகள் அறிய வேண்டிய ஐரோப்பிய ஓவிய
மேதைகள் பற்றி அருமையான இன்னொரு
நூல். இப்படிப் பல விஷயங்கள் இந்தக் கடைகளில் உண்டு.
இந்தப் பயணத்தில் நான் பார்த்த மிகப்பெரிய மியூசியம் லூவ்ரு.
பிரெஞ்ச் மன்னன் இரண்டாம் பிலிப் 12ஆம் நூற்றாண்டில் கட்டிய கோட்டை
அரண்மனையே லூவ்ரு. லூவ்ரு என்றால் பிரம்மாண்டம் என்று அர்த்தமாம். இந்த
அரண்மனையையும் பின்னர்
ஆர்மி மியூசியம் இருந்த அரண்மனை, வெர்சேல்ஸ் அரண்மனை எல்லாவற்றையும்
பார்த்ததும் நம் நாட்டில் ராஜாக்கள், அரசர்களே இருந்ததில்லை என்றும்
சின்னச் சின்னப் பண்ணையார், ஜமீன்தார், பாளையக்காரர்களையெல்லாம் நாம்
அரசர்கள் என்று ஆக்கி வைத்திருக்கிறோமோ என்றும் சந்தேகம் வருகிறது.பதினாறாம் லூயி மன்னன் 1692ல் வெர்சேல் சுக்கு தன் குடியிருப்பை மாற்றிக்
கொண்டபோது, லூவ்ருவில் இனி தன் கலைச்செல்வங்களை வைத்து அழகு பார்க்கலாம்
என்று முடிவெடுத்தான். அது
முதல் அந்த இடம் மன்னர்கள் போர்களில் கொள்ளையடித்தது, பரிசாகப் பெற்றது,
ஆர்வத்தில் திரட்டியது எனப் பலவகை கலை, ஆவணப் பொருட்களின் களஞ்சியமாக
இருந்து வருகிறது.நெப்போலியன் ஆட்சியில் லூவ்ரு நெப்போலியன் மியூசியம் என்று பெயர்
மாற்றப்பட்டு விரிவுபடுத்தப் பட்டது. ஆனால் பொதுமக்கள் சென்று பார்க்கும்
இடமாக
இது மாறியது பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான். அதுவரை அரசருக்கு
வேண்டியவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் போன்றோர் மட்டுமே பார்க்கும் இடமாக
இது இருந்தது. புரட்சிக்குப் பின்
வாரத்தில் மூன்று நாட்கள் மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். லூவ்ரு
அரண்மனையிலேயே பல ஓவியர்கள், சிற்பிகள் குடியிருந்திருக்கிறார்கள்.இன்று உலகத்தின் பல்வேறு நாகரிகங்களின் வரலாற்று ரீதியிலான கலை ஆவணத்
தொகுப்புகள் லூவ்ருவில் உள்ளன. ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் என்று
இங்குள்ள பொருட்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி விட்டது. பரப்பளவு
மட்டும் ஆறு லட்சம் சதுர அடி. மொத்தம் 2000 ஊழியர்கள் வேலை
பார்க்கிறார்கள். பார்க்க வரும்
பொது மக்கள் தரும் பணத்தில் மட்டுமாக இந்த மியூசியத்தைப் பராமரிக்க
முடியாது. பிரெஞ்ச் அரசு மட்டுமே 62 சதவிகித செலவை ஈடுகட்டுகிறது. அதுவே
சுமார் 18 கோடி டாலர்கள்! உலகப்
புகழ் பெற்ற டாவின்சி கோட் படம் இந்த மியூசியத்தில் பல இடங்களில்
படமாக்கப்பட்டது. அதில் கிடைத்த கட்டணம் மட்டுமே இரண்டரை கோடி டாலர்! டாவின்சி கோட் படத்தில் மியூசியத்தின் முகப்பில் இருக்கும் கண்ணாடி பிரமிடு
முக்கிய இடம் பெறும். இந்த பிரமிடுதான் நுழைவாயில். இதுதான் லூவ்ருவின்
மிக லேட்டஸ்ட் கட்டடம்; 1983ல்தான் கட்டினார்கள். இதில்
நுழைந்துதான் லூவ்ருவின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல முடியும். இங்கே
இன்னும் திறக்கப்படாத ஒரு சிலையின் தோற்றத்தையே ஒரு சிலையாக்கி
இருக்கிறார்கள் !
லூவ்ருவில் இருக்கும் புகழ் பெற்ற ஓவியம் லியனர்டோ டாவின்சியின் மோனாலிசா.
நேரில் பார்க்க அது ஒன்றும் அப்படி அபாரமாக இல்லை. ஆனால் மியூசியத்திலேயே
இங்கேதான் கூட்டம்
அதிகம். மியூசியத்தில் என்னைக் கவர்ந்த ஓவியங்கள் என்பவை புகைப்படக் கலை
கண்டுபிடிக்கப்படும் முன்னர் தத்ரூபமாகத் தீட்டியிருக்கும் படங்கள்தான்.
சின்ன சைசிலிருந்து கட்டட சுவர்
முழுக்க வியாபிக்கும் பிரம்மாண்டமானவை வரை உள்ளன. இவற்றையெல்லாம்
பார்க்கும்போது இரு உணர்ச்சிகள் எழுவதை சொல்லியே ஆகவேண்டும்.ஓவியம்,
சிற்பம் இரண்டு கலைகளிலும் இனி
செய்ய ஏதுமில்லை என்றே படுகிறது. உச்சங்களையெல்லாம் அப்போதே செய்து
முடித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். இந்திய தமிழ் ஓவிய சிற்பக் கலைப்
படைப்புகள் அற்புதமாக இருந்தாலும், ஐரோப்பிய சாதனைகளை
நெருங்கவில்லை என்றே சொல்லலாம். இருப்பதில் சிறந்த சோழர் கால
பிரான்ஸ்களைக் கூடப் போற்றத் தெரியாத மட்டி சமூகம் நாம். ரோமானிய, கிரேக்க வரலாற்று சின்னங்கள், எகிப்து நாகரிக வரலாறு, மத்திய
கிழக்கு நாகரிகம் இஸ்லாமிய கலை வரலாறு என்று பல பகுதி கலை வரலாறுகள்
லூவ்ருவில் விரிவாக
இருக்கின்றன. ஆனால் இந்தியக் கலை பற்றி எதுவும் இல்லை. லூவ்ருவின்
இயக்குனர் இந்தியா வந்தபோது இதைப் பற்றி இந்திய அரசிடம் பேசியிருக்கிறார்.
மத்திய கிழக்கு பற்றிய லூவ்ரு முயற்சிகளுக்கு
அங்குள்ள அரபு பணக்காரர்களும் அரசும் பெரும் தொகையை மான்யமாக லூவ்ருக்குத்
தருகின்றனர். இந்தியா அப்படி எதுவும் செய்யவில்லை. தற்காலிக கண்காட்சி
வைக்க
தன் சிற்பங்களை அனுப்புவதோடு சரி.லூவ்ருவில் நான் பார்க்க முடியாத இன்னொரு வரலாறு கில்லட்டின் பற்றியதாகும்.
பிரெஞ்ச் புரட்சியின்போது மன்னர்கள், ராணிகள், பிரபுக்களைக் கொல்லப்
பயன்படுத்தப்பட்ட கில்லட்டின் எனும் வெட்டு
இயந்திரத்தைப் பற்றி லூவ்ருவிலும் பாரீசில் நான் கண்ட இதர மியூசியங்களிலும்
எதுவும் இல்லை.
பாரீசில் என்னை ஏமாற்றியது ஈபெல் கோபுரம்தான். டவர் அருமையான இஞ்சினீயரிங்
வேலைப்பாடாக இருந்தாலும் அதன் கீழ் இருக்கும் சதுரம் அதன்
கம்பீரத்துக்குப்
பொருந்தாமல் இருந்தது. அழகுணர்வே இல்லை. டவரின் ஒரு கால் பகுதியில் ஒரு
கையேந்திபவன்! லூவ்ருவில் பிரமிடை அழகாகப் பயன்படுத்தியது போல இங்கேயும்
ஈபெல்லின்
அடிப்பகுதி சதுரத்தை பயன்படுத்த தவறிவிட்டார்கள்.
ஈபெல் கோபுரத்துக்குச் செல்லும் முன்னர் பலரும் என்னை எச்சரித்தது
பிக்பாக்கெட் ஆபத்து பற்றியாகும். அரசே பல இடங்களில் இதுபற்றி
எச்சரிக்கிறது. லூவ்ருவிலும் எச்சரித்தார்கள். எனக்கு
பிக்பாக்கெட்டுகளிடமிருந்து எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.ஆனால் இங்கே இது பெரிய பிரச்னையாக இருக்கத்தான் செய்கிறது. கடந்த ஏப்ரலில்
லூவ்ருவின் 2000 ஊழியர்களும் பிக்பாக்கெட்டுகளால் தமக்கு இருக்கும் ஆபத்து
குறித்து ஒரு நாள்
வேலை நிறுத்தமே செய்திருக்கிறார்கள். ஜேப்படிக்காரர்கள் மியூசியத்தில் 30
பேர் வரை கும்பலாக நுழைவதாகவும் பிடிபட்டால் ஊழியர்களை மிரட்டுவதாகவும்
புகார் சொல்லப்பட்டது.நான் பார்த்தவரையில் லட்சக்கணக்கான டூரிஸ்ட்டுகள் இதைப்பற்றி கவலைப்படாமல்
மியூசியத்தை ஆழ்ந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment