சீனர்களுக்கு நிச்சயம் இது பேரிடி. ஏற்கெனவே சாய்னா நேவால் கொடுக்கும்
நெருக்கடிகள் போதாது என்று புதிதாக பி.வி. சிந்துவும் போட்டி
வளையத்துக்குள் நுழைந்துவிட்டார். இனி
இந்தியர்களைத் தாண்டித்தான் எந்தவொரு சீனரும் சர்வதேசப் பட்டத்தை வெல்ல
முடியும்.
பேட்மின்டனில் இந்தியர்கள் எப்போதும் முத்திரை பதிப்பவர்கள்தான். பிரகாஷ்
படுகோன், சையத் மோடி, கோபிசந்த், அபர்ணா பொபட் ஆகியோர் சர்வதேச அளவில்
பதக்கங்கள் வென்றவர்கள். ஆனால், ஒரே சமயத்தில்
அதுவும் சீனர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு இந்திய
பேட்மின்டனின் வளர்ச்சி இருந்ததில்லை. ஆனால், கடந்த சில வருடங்களாக சாய்னா
நேவால், காஷ்யப், ஜூவாலா
குட்டா, அஸ்வினி என சர்வதேச அரங்கில், இந்திய வீரர்களின் ஆதிக்கம்
அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது, பிரகாஷ் படுகோன் (1983), ஜூவாலா
குட்டா - அஸ்வினி
பொன்னப்பா (2011) ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பைப் போட்டியில் வெண்கலம்
வென்று, புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் பி.வி. சிந்து.
சிந்துவின் இந்த வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள். பெற்றோரின்
ஊக்கம்தான் சிந்துவின் வளர்ச்சிக்கான முதல் அடித்தளம். அதிர்ஷ்டவசமாக
சிந்துவின் பெற்றோர், தேசிய
அளவில் கைப்பந்து வீரர்களாக ஆடியவர்கள். அதனால், சிந்து பேட்மின்டனில்
ஆர்வம் கொண்டபோது, என்ன செய்தால் மகளின் திறமைகளை வெளிக் கொணரமுடியும்
என்றுதான் சிந்தித்திருக்கிறார்கள். 2001ல், இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியை கோபிசந்த் வென்ற சமயத்தில்,
சிந்துவுக்கு பேட்மின்டன் மீது அதிக ஈடுபாடு வந்தது. உடனே, மகளைத் தகுந்த
பயிற்சியாளர்களிடம் அனுப்பி உற்சாகப் படுத்தி இருக்கிறார்கள்.
செகந்தராபாத்தில் வசித்து வந்த
சிந்து, பயிற்சி மையத்துக்குச் செல்வதற்காக மூன்று வருட காலம், தினமும்
120 கி.மீ. பயணிக்க வேண்டி இருந்தது (வீட்டிலிருந்து பயிற்சி மையத்துக்கு
30 கி.மீ. தினமும் இருமுறை). பிறகு, அகாடமியிலேயே கொஞ்ச காலம் தங்கினார். இந்தப் பிரச்னைகளெல்லாம்
தீரவேண்டும் என்பதற்காக, அகாடமி அருகிலேயே ஒரு வீடு வாங்கினார் சிந்துவின்
அப்பா. இப்போது அவர்
தினமும் 40 கி.மீ. பயணித்து அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. ஒரு வீரர்,
விளையாட்டு அரங்கில் வேர்வை சிந்திச் சாதிப்பதற்கு முன்னால், அவருடைய
பெற்றோர் நிறைய
தியாகங்கள், இழப்புகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. பெற்றோரின் ஊக்கத்தோடு நல்ல குருவும் கிடைக்கும்போது எண்ணியது எல்லாம்
ஈடேறுகிறது. இந்திய பேட்மின்டன் துறையில், கோபிசந்த் பயிற்சியாளரானது
மிகப்பெரிய
திருப்புமுனை. 2006ல் இந்திய அணியின் பயிற்சியாளராக கோபிசந்த்
நியமிக்கப்பட்டார். 2010 காமன்வெல்த் கேம்ஸில், இந்திய வீரர்கள் பதக்கங்கள்
வெல்ல வேண்டும் என்கிற கோரிக்கையின்படி. கோபிசந்தும் அதைச் சவாலாக
எடுத்துக் கொண்டு திறமையான வீரர்களை உருவாக்கினார். அவர்கள், காமன்வெல்த்
கேம்ஸில் பதக்க மழை பொழிந்தார்கள். இரண்டு தங்கம் உள்பட 4 பதக்கங்கள்
சுளையாகக் கிடைத்தன. பிறகு எங்குச் சென்றாலும்
இந்திய பேட்மின்டன் வீரர்கள் முத்திரை பதிக்க ஆரம்பித்தார்கள்.தினமும் காலை 4.15 மணிக்கு ஆரம்பிக்கிறது கோபிசந்தின் பயிற்சிகள்.
முதல்முதலில் சிந்துவுக்குப் பயிற்சி அளித்துவிட்டு, பிறகு சாய்னா நேவால்,
காஷ்யப் என்று ஒரு நிமிடம் வீணாக்காமல்
காலையிலிருந்தே உழைக்கிறார். சீனர்களின் கடுமையான பயிற்சிகளை நேரில்
பார்த்ததால் அதே வழிமுறைகளை இந்திய வீரர்களுக்குக் கற்றுத் தருகிறார்.
இப்போது உலக சாம்பியனுக்கான போட்டியில் மூன்று
இந்தியர்கள் காலிறுதிக்குச் செல்ல முடிந்ததென்றால் அது கோபிசந்தின் பயிற்சி
முறைகளுக்குக் கிடைத்த அபார வெற்றி. சிந்து, 5 அடி 11 அங்குலம் உயரம்
கொண்டவர். இவரது விசேஷப்
பயிற்சிக்காக, கிறிஸ்டோபர் பால் என்கிற தனிப் பயிற்சியாளர்
நியமிக்கப்பட்டார். இந்தியாவுக்கு ஒரு சாய்னா நேவால் மட்டும் போதாது என்று
சிந்துவைப் படிப்படியாக மேலே
கொண்டுவந்தார் கோபிசந்த். தினமும் காலை 4 மணிக்கு அகாடமிக்குள் நுழைகிற
கோபிசந்த், வீடு திரும்ப இரவு ஏழு மணி ஆகிவிடும். இந்த அர்ப்பணிப்புதான்
இன்று ஹைதராபாத்தை இந்திய பேட்மின்டனின்
தலைநகராக மாற்றியிருக்கிறது. ஆந்திராவில் நிலவும் பேட்மின்டன் சூழலுக்கு
நிகராக வேறு எந்த விளையாட்டையும் எந்த நகரையும் ஒப்பிடமுடியாது.
ஆந்திராவில், இன்றைய
தேதியில் 17,000 பேர் பெரிய கனவுகளுடன் பேட்மின்டன் ஆடிக்
கொண்டிருக்கிறார்கள்.
18 வயது சிந்துவின் இந்த வெண்கல வெற்றி, திடீரென அதிர்ஷ்டத்தில் நிகழ்ந்தது
கிடையாது. கடந்த ஒரு வருடத்தில் உலக சாம்பியன், ஒலிம்பிக்ஸ் பதக்க வீரர்,
ஆசியன் சாம்பியன்
என மூன்று பெரிய வீரர்களை வென்று தன்னை நிரூபித்தார். சாய்னா, காஷ்யப்
ஆகியோர் வெல்லமுடியாத உலகக்கோப்பைப் போட்டியில், அரையிறுதி வரை சென்று
பதக்கம் வென்றது சாதாரண விஷயமல்ல. சிந்துவுக்கு இப்போது கிடைக்கும்
வெளிச்சம், சாய்னாவுக்குத் தகுதி இறக்கமா என்றும் சிலர் நினைக்கிறார்கள்.
ஒற்றையர் பிரிவில்
ஒரே சமயத்தில் சாய்னா, சிந்து என இரு உலகத் தரத்திலான வீரர்கள் இருப்பது
இந்திய அணியின் பலமாகவே எண்ண வேண்டும். இந்த இரண்டு பேரைப் பார்த்து
இன்னும்
பலர் இந்த விளையாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள். ஒரு விஸ்வநாதன் ஆனந்தால்
இந்தியாவில் ஆயிரக்கணக்கான செஸ் வீரர்கள் தோன்றியது போலவே சாய்னா,
சிந்துவின் வெற்றிகள்
வலிமையான பேட்மின்டன் தலைமுறையை உருவாக்கப்போகிறது.
No comments:
Post a Comment