ஐம்பதாண்டுப் போராட்டத்துக்குப் பின்பு தனித் தெலங்கானா அமைவதற்கான
ஒப்புதலை மத்திய காங்கிரஸ் கூட்டணி வழங்கி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தைப்
பிரித்து உருவாக்கப்படவிருக்கும் தெலங்கானா, இந்தியாவின்
29வது மாநிலம். 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 119 சட்டமன்ற
உறுப்பினர்களும் இதில் இருப்பார்கள். மக்கள்தொகை 3.5 கோடி. ஆந்திர மாநில
முதல்வர் கிரண்குமார் ரெட்டி முதல், பல காங்கிரஸ் தலைவர்களுக்கும் இதில்
ஒப்புதல் இல்லை. ‘இது வலிமிகுந்த முடிவு’ என்று கருத்துத் தெரிவித்தார்
கிரண்குமார். ஆனால், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவோ,
‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெலங்கானா மசோதா
நிறைவேறும்வரை போராட்டம் தொடரும். மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் தெலங்கானா
கனவு நிறைவேறும். காங்கிரசை நம்ப முடியாது’ என்று ஜாக்கிரதையாகப்
பேசியிருக்கிறார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மனத்தில் கொண்டே, தனித்
தெலங்கானாவுக்கான ஒப்புதலை காங்கிரஸ் வழங்கி இருக்கிறது. ஆந்திரத்துக்குள்
காங்கிரஸ் கட்சி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. ஜகன்மோகன் ரெட்டியின்
செல்வாக்குக் கிடுகிடுவென வளர்ந்தும் வருகிறது. இந்நிலையில், ஜெகன் மற்றும்
சந்திரசேகரராவ் இருவரையும் ஓரம்கட்டி, காங்கிரஸைப் பலப்படுத்தவே தெலங்கானா
மாநிலம் உருவாக்கப்படுகிறது. ஆந்திரத்தைக் கூறுபோட்டு, அரசியல் லாபம்
தேடப்
பார்க்கிறது காங்கிரஸ் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. தெலங்கானா மக்களுக்கு ஆந்திர அரசிலோ, நிர்வாகத்திலோ, அதிகாரிகள்
மட்டத்திலோ, கல்வித்துறையிலோ பெரிய செல்வாக்கு இல்லை; வாய்ப்பு இல்லை என்ற
குறை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
தெலங்கானா பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் வருவாய்
கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம். ஆனால், வாய்ப்புகளோ முப்பது சதவிகிதம் கூட
இல்லை.
சின்னச் சின்ன மாநிலங்கள் உருவாக வேண்டும் என்று பேசுபவர்கள், அதில்
ஏற்படும் செலவினங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுகின்றனர். மேலும்
இந்தியாவெங்கும்
மாநிலங்களை உடைக்கும் குரல்களுக்கு, தெலங்கானா உருவாக்கம் ஊக்கம்
கொடுத்திருக்கிறது. அகண்ட ராயலசீமா கேட்டு அடுத்தொரு போராட்டம் வெடிக்காது
என்று சோல்வதற்கில்லை.
தெலங்கானாவை வரவேற்றுள்ள மாயாவதி, உத்திரப்பிரதேசத்தை நான்கு மாநிலங்களாக
உடைக்க வேண்டும் என்று இப்போதே பேசத் தொடங்கியிருப்பது ஆபத்துக்கான
ஆரம்பம். சந்திரபாபு நாயுடுவால் அபரிமித வளர்ச்சியடைந்த ஹைதராபாத், இனி
தெலங்கானாவுக்கே. ஆந்திர மாநிலம் தனக்கான தலைநகரை உருவாக்கிக் கொள்ளும்வரை,
பத்தாண்டுகளுக்கு, இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து ஹைதராபாத்தே
தலைநகராகத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment