தலையில் அடிபட்டு,
கற்ற வித்தையெல்லாம் மறந்தால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போதைய
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிலைமை! இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்
அணிகள் மோதும்போது எப்படி ஒரு கூடுதல் பதற்றம் இருக்குமோ, அதேபோல
ஆஸ்திரேலிய- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் ஆக்ரோஷமும் பரபரப்பும்
கொடி கட்டிப் பறக்கும். ஆஷஸ் தொடரில் வெல்வது என்பது, அந்த இரு
நாடுகளுக்கும் கௌரவப் பிரச்னை. பலகாலம் ஆஷஸ் தொடரில் ஆதிக்கம் செலுத்திவந்த
ஆஸ்திரேலியா, இந்த வருடத் தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும்
நிலையிலேயே இங்கிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் மண்டியிட்டு
விழுந்துகிடக்கிறது. ஆஷஸ் தொடர் மட்டுமா? ஆஸ்திரேலியா கடைசியாக விளையாடிய
எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில்கூட வெற்றிபெறவில்லை (ஒரு டெஸ்டில்
டிரா). அனைத்திலும் அவமானகரமானத் தோல்வியடைந்திருக்கிறது! சாம்பியன்
சரிந்தது ஏன்?
நம்பிக்கை இழந்த வீரர்கள்!
ஆஸ்திரேலிய அணி, முன்பு எல்லாம் தோற்கக்கூடிய
போட்டிகளில் இருந்துகூட மீண்டெழுந்து வெற்றியைத் தட்டிப் பறிக்கும். ஆனால்,
இப்போது வெற்றிபெறக்கூடிய போட்டியில்கூட தோல்வி அடைவது, அந்த அணி
வீரர்களின் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. நான்காவது ஆஷஸ் டெஸ்ட்டில்,
'299 ரன்கள் வெற்றி இலக்கு; இன்னும் ஒன்றரை நாட்கள் மீதம் இருக்கிறது’ என்ற
நிலையில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 101 ரன்களைக்
குவித்தது. ஓப்பனிங் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக கிரிஸ் ரோஜரும் டேவிட்
வார்னரும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், முதல் விக்கெட்
இழப்புக்குப் பின் ஆஸ்திரேலியா ஒட்டு மொத்தமாக நிலைகுலைந்தது. தொடர்ந்து
களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரோக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் குழம்பி,
தோல்வி பயத்துடனே ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டனர். அடுத்த 104
ரன்களுக்குள், மீதமிருந்த ஒன்பது விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைச்
சந்தித்தார்கள். 'வெற்றிபெறுவோம்’ என்ற நம்பிக்கை, வீரர்களுக்குள் இல்லாமல்
போனதே தொடர் தோல்விக்கான முதல் காரணம். 1980-களில் ஆஸ்திரேலிய
பேட்ஸ்மேன்களின் பேட்டிங் சராசரி 62 ரன்கள். 2000-களில் அது 64-க்கு
உயர்ந்தது. ஆனால், 2013-ம் ஆண்டில் அது 28-க்கு இறங்கிவிட்டது. இந்தியாவில்
ஐ.பி.எல். போட்டிகள் போல் ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் 20/20 கிரிக்கெட்
போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 'பிக்பேஷ் போட்டிகளால்தான் தகுதியான, நின்று
விளையாடக்கூடிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களை உருவாக்க முடியவில்லை’ என்கிறார்கள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகர்கள்.
மேட்ச் வின்னர்கள் இல்லை!
வாஹ் பிரதர்ஸ், ஷேன் வார்ன், மெக்ராத், ஆடம்
கில்கிறிஸ்ட், ரிக்கி பான்டிங், மேத்யூ ஹேடன், மைக்கேல் பெவன் என அணியின்
ஒவ்வோர் உறுப்பினரும் மேட்ச் வின்னர்களாக இருந்த ஆஸ்திரேலிய அணியில், இன்று
'ஸ்டார் ப்ளேயர்’ என்று சொல்ல, யாருமே இல்லை. மைக்கேல் கிளார்க், டேவிட்
வார்னர், ஷேன் வாட்சன் என இருக்கும் ஓரிருவரிடமும் டீம் ஸ்பிரிட் இல்லை.
2011-ம் ஆண்டுக்குப் பிறகு அடுத்தடுத்து மேட்ச் வின்னர்களை அணியில்
சேர்க்காமல்விட்டதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம். கில்கிறிஸ்ட், ஷேன்
வார்னே, மெக்ராத்துக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பக்கூடிய சிறந்த
ப்ளேயர்களை ஆஸ்திரேலிய அணி கண்டுபிடிக்கவே இல்லை!
தலைவன் எங்கே?
மார்க் டெய்லர், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பான்டிங்...
மூன்று முறை உலகக் கோப்பைகளைத் தொடர்ந்து வென்று, 15 ஆண்டு காலம்
கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா கோலோச்சிய காலத்தில், இவர்கள்தான் அணித்
தலைவர்கள். டெய்லர், ஸ்டீவ் வாஹ் இருவருமே அமைதியாக, அதே சமயம் அணிக்குள்
ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தி வெற்றிகளைத் தேடித்தந்தவர்கள். பான்டிங்,
ஆக்ரோஷமான கேப்டன். எந்த நேரத்திலும் தோல்வி பயத்துக்கு இடம்கொடுக்காமல்
வீரர்களை உற்சாகப்படுத்தி வெற்றிகளைக் குவித்தார். ஆனால், இப்போது கேப்டனாக
இருக்கும் மைக்கேல் கிளார்க்கின் நிலைமை மிகமிகப் பரிதாபம். மிகத்
திறமையான பேட்ஸ்மேனான அவரால் முழு அணியையும் ஒரே இலக்கை நோக்கிப்
பயணிக்கவைக்க முடியவில்லை. வார்னர் ஒருபக்கம், வாட்சன் ஒருபக்கம், பௌலர்கள்
ஒருபக்கம் என, கப்பலை எல்லோரும் ஒவ்வொரு திசைக்கு இழுக்க, கடலுக்குள்
மூழ்கிக்கொண்டிருக்கிறது அணி!
சார்லஸ்
No comments:
Post a Comment