Search This Blog

Friday, August 23, 2013

அக்‌ஷய் வெங்கடேஷ் - ஒரு ராமானுஜம்!

 
உலகின் மிகச் சிறந்த கணித மேதைகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் அக்‌ஷய் வெங்கடேஷ். இவரது பெற்றோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தையின் ஊர் கும்பகோணம், தாய் தஞ்சையைச் சேர்ந்தவர். புதுதில்லியில் 1981ல் பிறந்த அக்‌ஷய் ஆரம்பக் கல்வியை அங்கே தொடங்கி தந்தையின் பணிமாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் தொடர்ந்தார். அந்தச் சிறுவனுக்கு புதிய இடம், புதிய மொழி எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் முதல். ஆஸ்திரேலியப் பள்ளிகளில் இம்மாதிரி திறமையான மாணவர்களை ‘கிஃபட்டட் சில்ட்ரன்’ என்று அடையாளம் காணப்பட்டு விசேஷ பயிற்சிகள் தந்து ஊக்குவிப்பார்கள். அக்‌ஷய் அந்த வாய்ப்பின் மூலம் பயிற்சி பெற்று சர்வதேச ‘பிஸிக்ஸ் ஒலிம்பியார்ட்’டில் பங்கு பெற்று பதக்கம் பெற்றார் அப்போது அவருக்கு வயது பதினொன்று. 
 
ஒலிம்பியார்ட் என்பது உலக அளவில் ஒரு தில் மிகச் சிறந்த மாணவனைத் தேர்ந்தெடுக்கும் கடினமான போட்டி. முதலில் மாவட்ட அளவில், பின் அவர்களிலிருந்து மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் தேசத்தின் சார்பாக சர்வதேச அளவில் பங்குகொள்ளும் போட்டி. இதில் 1993 ஆம் ஆண்டு மூன்றாம் இடம்பெற்ற அக்‌ஷய், அடுத்த ஆண்டு பிஸிக்ஸில் முதலிடத்துக்காகப் போட்டியிடுவதற்குப் பதிலாக, கணித ஒலிம்பியார்ட்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்களும் ஊக்குவித்து உதவி செய்ய 1994ஆம் ஆண்டு சர்வதேச கணித ஒலிம்பியார்ட்டில் தங்கப் பதக்கம் வாங்கினார். தொடர்ந்து பள்ளியில் கிடைத்த புரொமோஷன்களினால் பள்ளி இறுதி ஆண்டை 13 வயதிலேயே முடித்து விசேஷ அனுமதிகள் மூலம் 14வது வயதிலேயே கல்லூரியில் கால் வைத்தார். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் இந்த வயதில் எவரும் இந்தச் சாதனையைச் செய்ததில்லை. நான்கு ஆண்டு கணித ஹானர்ஸ் படிப்பை இரண்டே ஆண்டில் முடித்து 17வது வயதில் அந்தப் பல்கலைக்கழகத்தின் முதன்மை மாணவராகவும் முதல் இளம் வயது ஹானர்ஸ் பட்டதாரியாகவும் வெளிவந்தார். 2002ல் தமது 21 ஆவது வயதில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்ற இவரை ‘மாஸாசுஸுஸ்ட் இன்ஸ்டிடியூட் அஃப் டெக்னாலாஜி’ பேராசிரியர் பணி தந்து அழைத்தது. மிகப்பெரிய கௌரவமான இதை ஏற்று தன் ஆசிரியப் பணியையும் ஆராய்ச்சிப் பணியையும் தொடர்ந்தார். கணிதத் துறையைச் சார்ந்தவர்களால் பல ஆண்டுகளாகச் செய்யப்படாத பல ஆராய்ச்சிகள் இவரால் குறுகிய காலத்தில் செய்து முடிக்கப்பட் டிருப்பதாகப் புகழாரம் சூட்டுகின்றனர்.
 
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 2008 ஆம் ஆண்டு சாஸ்த்ரா-ராமானுஜம் பரிசையும் பரிசு பணமாக 10,000 அமெரிக்க டாலர்களையும் மேதை ராமானுஜத்தின் ஊரான கும்பகோணத்தில் நடத்திய ஒரு சர்வதேசக் கணிதக் கருத்தரங்கில் இவருக்கு வழங்கியது. இந்தப் பரிசுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது, ஐந்து பெரிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் மூத்த பேராசிரியர்கள்.
 
தற்போது அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் 32 வயதிலேயே மூத்த பேராசிரியராக அங்கீகரிக்கப்பட்டு ஆராய்ச்சியைத் தொடரும் அக்‌ஷய் இந்தியா வருவாரா? என்றால், 2015 வரை என் பயணங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டன, அதன்பின் பல்கலைக்கழகங்கள் அழைத்தால் வருவேன்," என்கிறார்.
 
ரமணன்

No comments:

Post a Comment