Search This Blog

Saturday, August 17, 2013

மகாபெரியவா சொன்ன கதைகள்!


உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும் என, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இப்படியான ஓர் உணவுச் சிக்கலில் சந்நியாசி ஒருவர் மாட்டிக்கொண்டு பரிதவித்த சம்பவத்தை இங்கே அழகான ஒரு கதையாகச் சொல்லி, இந்த உண்மையை நமக்கு எளிதாகப் புரியவைக்கிறார் மகா பெரியவா.

எங்கே... அவரின் வாய் வார்த்தையாலேயே அந்தக் கதையைக் கேட்போமா?
'ராஜா ஒருத்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் அடிக்கடி அரண்மனைக்குப் போய் உபதேசம் பண்ணிவிட்டு வருவார். அப்படி ஒருநாள் காலம்பற போனவர், நீண்டநேரம் அநேக விஷயங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்ததால் மத்தியானம் வந்துவிட்டது. ''இங்கேயே பி¬க்ஷ பண்ணிவிட்டுப் போகணும். ஆசார நியமத்தோடு, தனியாகப் பண்ணிப் போட ஏற்பாடு செய்கிறேன்'' என்று ராஜா ரொம்பவும் கேட்டுக்கொண்டான்.

அவனுடைய பிரார்த்தனையை மறுக்க முடியாமல் அவர் அரண்மனையிலேயே போஜனம் செய்தார். அப்போது நல்ல வெயில் வேளை! பஞ்சபக்ஷ்ய போஜனம் பண்ணினதில் அவருக்குக் களைப்பாக இருந்ததால், அங்கேயே கொஞ்ச நேரம் இளைப்பாறினார்.

அவர் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்ட அறையின் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு முத்துமாலை அவர் கண்ணில் பட்டது. அது ராஜாவுடையது. நல்ல வைராகியான அவருக்கு எதனாலோ அன்றைக்கு அந்த முத்தாரத்தைப் பார்த்தவுடன், அதை எடுத்து வைத்துக்கொண்டு விடவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பக்கத்தில் யாருமில்லாததால் சட்டென்று அதை எடுத்து, வஸ்திரத்துக்குள் ஒளித்து வைத்துக்கொண்டுவிட்டார். சாதாரண மனிதர்கள் பண்ணினாலே திருட்டு என்பது பாவம்; குற்றம். மகானாக, ராஜகுருவாக இருந்தவர் கொஞ்சங்கூட மனசை உறுத்தாமல் இப்படிப் பண்ணிவிட்டு, தாம்பாட்டுக்கு ஆஸ்ரமத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்.

அன்று ராத்திரி முழுக்க அவருக்கு சரியாகத் தூக்கமே இல்லை. மறுநாள் முழித்துக் கொள்கிறபோதே வயிற்றில் 'கடமுடா’ பண்ண ஆரம்பித்தது. பேதி பிடித்துக்கொண்டது. அஞ்சு தடவை, ஆறு தடவை 'போய்’ ரொம்ப பலஹீனமாய்விட்டது.

ஆனாலும், இப்படி உடம்பு ஆயாஸப்பட்டுப் போனாலும், பேதியானதிலிருந்தே அவருடைய மனஸுக்கு ஒரு தெளிவு ஏற்படத் தொடங்கியிருந்தது. முதல்நாள் உண்டான கெட்ட எண்ணமும், ஆசைகளும் கொஞ்சங் கொஞ்சமாக விலகிக்கொண்டே வந்தன. இப்போது இனிமேலே 'போவதற்கு’ எதுவுமே இல்லை என்கிற மாதிரி உடம்பு கிழித்த நாராக ஓய்ந்துபோன ஸ்திதியில், அவருடைய வழக்கமான உசந்த மனசே அவருக்குத் திரும்பிவிட்டது.

உடம்பு ஓய்ந்துபோன நிலையிலேயே முத்துமாலையை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார். ராஜாகிட்டே போய், அந்த ஹாரத்தைக் கொடுத்து, ''என்ன காரணமென்றே தெரியவில்லை. நேற்றைக்கு மத்தியானத்திலிருந்து என் புத்தி கெட்டுப்போய்க் கிடந்தது. அந்தக் கெட்ட ஆவேசத்தில் நான்தான் இந்த மஹாபாவத்தைப் பண்ணினது. திருடனை எப்படித் தண்டிக்க வேண்டுமோ அப்படி எனக்கு சி¬க்ஷ பண்ணு!' என்று ராஜாவிடம் சொன்னார்.ராஜா யோசித்தான். அப்புறம் சொன்னான்... ''நீங்களே  சொல்வதால் நீங்கள்தான் ஹாரத்தை எடுத்ததாக வைத்துக்கொள்ளப் பார்க்கிறேன். ஆனாலும், எந்தக் காரணத்துக்காக அது பண்ணப்பட்டது என்பதையும் ஆராய்ந்து, அதை ஒட்டியே ஒரே குற்றத்துக்கு வேறு வேறு சி¬க்ஷகளை நீதி சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. எப்படியாகப்பட்டவர், என்ன மாதிரியான சந்தர்ப்பத்தில், எந்தவிதமான நோக்கத்துக்காகக் குற்றம் செய்தார் என்று கவனித்தே தீர்ப்புச் செய்ய வேண்டும். (ஸர்க்கம் ஸ்டன்ஸ், மோட்டிவ் பார்த்தே சென்டென்ஸ் பண்ணவேண்டும் என்றுதானே இப்போதும் லா இருக்கிறது?) அதனாலே, மகானான தாங்கள் இப்படியரு கார்யம் பண்ணினீர்களென்றால், எந்தக் காரணத்தின் மேலே அப்படிப் பண்ணினீர்கள் என்று தெரிந்துகொள்ளாமல் தண்டிக்கிறதற்கில்லை' என்றான்.

அதற்கு அந்த குருவானவர், ''நேற்று நீ பிரியத்தின் பேரில் நிர்பந்தம் செய்ததால் நான் இங்கே சாப்பிட்டேன். அதற்கப்புறந்தான் இந்தப் பாப கார்யத்தில் என் புத்தி பிரவேசித்திருக்கிறது. நேற்றுச் சாப்பிட்ட அன்னம் வயிற்றில் இருந்தவரையில் மனசு கெட்டுப் போயிருந்தது. இன்றைக்கு தெய்வ ஸங்கல்பத்தால் அதிஸாரம் உண்டாகி, அது வெளியே போகப் போகக் கெட்ட எண்ணமும் வெளியேறியிருக்கிறது என்று தோன்றுகிறது. இதிலிருந்து, சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி ஆன தோஷத்தால்தான் குணதோஷம் ஏற்பட்டிருக்கிறது என்று அநுமானிக்கத் தோன்றுகிறது. அநுமானத்தை ஊர்ஜிதம் பண்ணிக் கொள்வதற்கு நீ வேண்டுமானால் நேற்று அன்னமாகப் பக்குவம் பண்ணின அரிசி முதலானதுகள் எங்கேயிருந்து வந்தன என்று விசாரணை பண்ணிப் பார்'' என்றார்.

அன்னம் என்பதில் ப்ரோட்டின், கார்போஹைட்ரேட், வைட்டமின் முதலியன மட்டும் இல்லை. அதைச் சமைத்தவர், தான்யமாகவும், பச்சைக் காய்கறியாகவும் அதை விலைக்கோ தானமாகவோ கொடுத்தவர், அதைப் பயிர் பண்ணியவர் ஆகியவர்களுடைய குணதோஷங்களும் அந்த அன்னத்தில் சூட்சுமமாக டெபாஸிட் ஆகி, சாப்பிடுகிறவனுக்குள் போகிறது. இவர்கள் தோஷமுடையவர்களாயிருந்தால் சாப்பிடுகிறவனையும் அந்தத் தோஷம் தொற்றிக்கொள்ளும். இதுதான் அன்னதோஷம் என்பது.ராஜா உடனே உக்ராண மணியக்காரனுக்குத் தாக்கீது அனுப்பினான். முதல்நாள் குருவுக்குச் சமைத்துப் போட்ட அரிசி எங்கேயிருந்து வந்தது என்று விசாரித்துத் தெரிவிக்கும்படி உத்தரவு போட்டான்.மணியக்காரன் பூரா விவரங்களையும் விசாரணை பண்ணித் தெரிவித்தான். என்ன தெரிவித்தானென்றால்... சிலநாள் முந்தி ஒரு பெரிய கொள்ளைக்காரன், கடைத் தெருவில் ஒரு பெரிய மளிகைக் கடையிலிருந்து ரொம்ப உசந்ததான ஸன்ன சம்பா மூட்டைகளைத் திருடி, அப்புறம் ராஜ சேவகர்களிடம் பிடிபட்டான். அவனோடு அரிசி மூட்டையும் கைப்பற்றப்பட்டது. அப்புறம், அவனுக்குச் சி¬க்ஷயும் விதிக்கப்பட்டது. ஆனாலும், உடைமைக்கு (அரிசிக்கு) சொந்தக்காரன் அதை ராஜாங்கத்திலிருந்து திரும்பி வாங்கிக் கொள்வதற்கான 'ட்யூ டேட்’ ஆகியும் எதனாலோ ஆஜராகவில்லை. அதனால், சட்டப்படி அந்த அரிசி அரண்மனைப் பண்டகசாலையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நேற்றுவரை பிரயோஜனப்படுத்தாத அந்த அரிசியைத்தான் முதன்முதலில் குருவுக்குச் சமைத்துப் போட்டார்களாம்.

திருட்டுச் சொத்தை ராஜ தர்மப்படி ராஜா ஸ்வீகரித்தாலும், அது மகானுடைய சாத்விக சந்நியாச தர்மத்துக்கு விரோதமானதால், அவரை 'அஃபெக்ட்’ பண்ணிவிட்டது. ஆனாலும், அவர் மனசறிந்து குற்றம் பண்ணாததாலும், அவருடைய பூர்வ சரித்திரம் சுத்தமானதாலும், பகவானே அப்புறம் அவருக்கு அதிஸாரம் உண்டாகுமாறு பண்ணி, அவருடைய உடம்பில் அந்த அன்ன ஸத்து ரத்தமாய்ச் சேராமல் வெளியேறும்படி செய்து, தோஷத்தைப் போக்கிவிட்டான்.இதிலே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன என்பதே!சுத்தமான ஆகாரம் என்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்தது. ஒன்று, ஆகாரமாக ஆகிற வஸ்துக்கள்- தானியம், காய்கறி முதலான பதார்த்தங்கள் சுத்தமானவையாக இருக்க வேண்டுமென்பது; அதாவது... வெங்காயம், முள்ளங்கி மாதிரி மனசைக் கெடுக்கிறவையாக அவை இருக்கப்படாது. இரண்டாவது, அந்த ஆகாரம் நம் இலையில் வந்து விழுகிற வரையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் சுத்தமாயிருக்க வேண்டும்!'

No comments:

Post a Comment