Search This Blog

Friday, August 23, 2013

மெகா பிக்சல் - ஸ்மார்ட்போன்


சிக்காகோ சன் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் இருபத்தெட்டு முழுநேர போட்டோகிராஃபர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இனி முழுநேர போட்டோகிராஃபர்களுக்குத் தேவையில்லை, ஐபோன் போட்டோகிராஃபர்களே போதும், அவர்கள் போட்டோக்களோடு வீடியோக்களும் எடுத்துத் தருவார்கள் என்று முடிவுசெய்துவிட்டது அந்நிறுவனம். ஸ்மார்ட்போன்களும் ஐபோன்களும் வந்தபின்னர் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்று. ஸ்மார்ட்போன் கேமராக்களின் அபாரத் தெளிவு, துல்லியம், ஒளி...என்று ஏராளமான காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன்களுக்கு முன்னால், கேமராவின் திறனைக் கூட்டுவதில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதன்முதலில், 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாம்சங் நிறுவனம் போனோடு சேர்ந்த கேமராவை அறிமுகப்படுத்தியது. 0.35 மெகாபிக்சல் தரம் கொண்ட அந்த கேமரா போனில், போன் தனியாகவும் கேமரா தனியாகவும் இருந்தது. ஆனால் இரண்டு ஒரே பெட்டியில் அடக்கப்பட்டிருந்தது, அவ்வளவுதான். ஆனால், 2002 நவம்பரில் அமெரிக்காவில் கேமரா போன் ஜுரம் ஆரம்பித்தது. சான்யோ எஸ்சிபி - 5300 என்ற மாடல் போன் அந்தக் காலத்திலேயே நானூறு டாலர் விலை கொண்டது. 0.3 மெகாபிக்சல்தான் அதன் கேமரா தரம். 2003 கடைசிக்குள் கேமரா போன் ஜுரம் அதிகமாக, உலகமெங்கும் கிட்டத்தட்ட எட்டு கோடி கேமரா போன்கள் விற்றுத்தீர்ந்தன.

அதன்பிறகு ஒவ்வொரு பெரிய நிறுவனமும் தங்கள் செல்போனில் கேமராவின் பிக்சல் அளவை உயர்த்திக்கொண்டே வந்தன. முதலில் மூன்று மெகாபிக்சல், அப்புறம் வந்த ஐந்து மெகாபிக்சல் கேமராக்கள் ஆச்சர்யத்தோடு பார்க்கப்பட்டன. நோக்கியா என்95 தான் இந்த வரிசையில் பெரிய கேமராவோடு வந்தது. அதன் பிறகு சட்டென ஸ்மார்ட்போன் அலை அடிக்க ஆரம்பித்தது. 2008ல் சாம்சங் ஐ8510 முதல் எட்டு மெகா பிக்சல் கேமராவோடு வர, அதே நிறுவனம் 2009ல் 12 மெகா பிக்சல் கொண்ட போனை வெளியிட்டது. 2010ல் சோனி எரிக்ஸன் 16 மெகா பிக்சலோடு கூடிய எஸ்006 போனை வெளியிட்டு அசத்தியது. ஸ்மார்ட் போன்கள் படையெடுப்பால், இந்தக் கேமரா போன் மோகம் கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது.

இது நடுவே ஹெச்.டி.சி.யும் எல்.ஜி. நிறுவனமும் 3டி போட்டோக்கள் எடுக்கும் கேமரா போன்களை 2011ல் வெளியிட்டன. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் போகவே, அமைதியாக 3டி கேமரா போன்கள் காணாமல் போயின. இதற்குள் ஐபோன்களில் இருக்கும் கேமராக்களின் மீது காதல் ஏற்பட்டுவிட்டது. சமீபத்தில் ஹெச்.டி.சி. நான்கு மெகாபிக்சல் கேமராவே போதும் என்று பேச ஆரம்பித்திருக்கிறது.ஆனால், நோக்கியாவோ இந்தப் போட்டியை விடுவதாக இல்லை. சோனி எஸ்பெரியா இசட் இன்னொரு பக்கம் 13 மெகா பிக்சல் கேமராவோடு வெளிவந்துவிட்டது. சாம்சங், 16 மெகாபிக்சல் கேமரா போனோடு வர, போட்டியை விடுமா நோக்கியா? நோக்கியா லூமியா 1020 என்ற அதன் சமீபத்திய மாடல், 41 மெகாபிக்சல் கேமராவோடு வந்திருக்கிறது. இது ஐபோன் 5 மாடல் எடுக்கும் போட்டோவோடு இன்னும் துல்லியமானது என்று சத்தியம் செய்கிறார்கள்.கேமரா போன்கள் வெறுமனே போட்டோ எடுப்பதற்கு மட்டும்தான் என்று நினைத்துவிட வேண்டாம். அதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் தான் ஆச்சர்யப்படுத்துகின்றன. பல ஸ்மார்ட் போன்களுக்கான கேமரா அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கடைகளில் பொருள்கள் வாங்கும்போது, பார்கோடுகளைப் படிக்க கேமரா போன் அப்ளிகேஷன் வந்திருக்கிறது. படங்களை எடுத்து அதை அப்படியே படித்து ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்க்கும் அப்ளிகேஷன்களும் வந்துவிட்டன. வங்கித் துறையில் கேமரா போன்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு சூப்பர். உங்கள் காசோலையை போன் கேமராவில் ஒளிப்படம் எடுத்து அதை அப்படியே வங்கிக்கணக்கில் சேர்க்க முடியுமாம். இதன் இன்னொரு தொடர்ச்சிதான், கட்டணங்களுக்கான பில்களைச் செலுத்துவதிலும் ஏற்பட்டிருக்கிறது.நீங்கள் செலுத்த வேண்டிய பில்லை அப்படியே போட்டோ பிடித்து, அதன் தகவல்களை உள்வாங்கிக் கொண்டு, நேரடியாக வங்கியில் இருந்து அதற்கு உண்டான தொகை உரிய நிறுவனத்துக்குக் கட்டிவிட முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் நேரே ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போய்தான் பில்லைக் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லாமல் போய்விட்டது. மொபைல் போன் கேமரா வளர்ச்சி இன்னும் தொடரும்.

ஆர்.வெங்கடேஷ்

No comments:

Post a Comment