கோகோ
இலைகளும் கோலா கொட்டைகளும் சேர்ந்த கலவை என்பதால்தான் கோகோ - கோலா என்ற
பெயர் வந்தது என்று பார்த்தோம். கோகோ இலைகளின் 'போதை’ தன்மை பற்றி
அறிந்துவிட்ட நிலையில், கோலா கொட்டைகளின் குணம் பற்றிப் பார்ப்போம்!
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த
நைஜீரியாதான் கோலா மரங்களின் பூர்விகம். அங்கிருந்து கானாவுக்கும் பின்னர்
பிரேசில், மேற்கிந்தியத் தீவுகளுக்கும் அடிமைகள் மூலம் கொண்டு
செல்லப்பட்டது. தெய்விக மரங்களாகக் கருதப்பட்ட கோலா மரங்கள், நைஜீரியாவின்
பூர்விக இனமான 'இக்போ’ மக்களின் கலாசாரத்தில் முக்கிய அங்கம். நைஜீரியாவில்
தேசிய மரம் என போற்றப்படும் கோலா மரங்கள், அந்நாட்டின் பொதுச்சொத்து. அவை
எங்கு வளர்ந்தாலும் தனியார் எவருக்கும் அதில் உரிமையில்லை. அந்த மரங்களை
யாராவது வெட்டினால், கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
சுமார் 40 அடி உயரம் வரை வளரும் இந்த மரங்களில்
நட்சத்திர வடிவில் விளையும் கோலா பழங்களின் கொட்டைகள்தான் விசேஷம். கோலா
கொட்டைகளில், காபி கொட்டை மற்றும் தேயிலையில் உள்ளது போல், 'கேஃபின்
(Caffeine)’ நிறைய உள்ளது. தவிர, தியோபுரோமின், டானின்கள், ஃபீனாலிக்ஸ்,
மற்றும் பி - காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான தயாமின், ரிபோஃபிளேவின், நியாஸின்
போன்ற சத்துப் பொருட்களும் உள்ளன.
இந்த கேஃபின் பற்றிய நிறையவே மருத்துவ சர்ச்சைகள்
உண்டு. 'இதயத்துக்கும், மூளை - நரம்பு மண்டலங்களுக்கும் கெடுதல் உண்டு
பண்ணும்' என்று முன்னர் கருதப்பட்ட கேஃபின், தற்போது உண்மையில் பல
நன்மைகளைக் கொடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இதனாலேயே காபி, டீ போன்ற பானங்களைக் கெடுதல் என்று இதுவரை சொல்லி வந்த
நாங்கள், இவை உண்மையில் மிகவும் ஆரோக்கியமானவை என்று இப்போது சொல்ல
ஆரம்பித்திருக்கிறோம் (இதைப் பற்றி அடுத்த இதழில் விரிவாகப் பேசலாம்).
கேஃபினின் நல்ல குணங்களால் சுவாசப்பாதைகள் விரிவடையும்;
ஆஸ்துமா, கக்குவான் இருமல் போன்ற வியாதிகள் குணமாகும்; நிறைய சிறுநீர்
வெளியேற உதவுவதால் சிறுநீரக வியாதிகள், இதய நோய்கள், ஈரல் சார்ந்த
நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றெல்லாம் நம்பப்படுகிறது. மைகிரேன்
எனப்படும் ஒற்றைத் தலைவலி, மூட்டு வலிகள் குறையும் என்றும், பசியை
அடக்குவதால் உடல் பருமன் குறைய வாய்ப்பு உண்டு என்றும்
நிரூபிக்கப்பட்டுள்ளது.
'இக்போ’ இனமக்கள் கோலா கொட்டை களை அன்றாடம்
வாயில்போட்டு மெல்வது ஒருவகை போதைத் தன்மைக்காகத்தான் என்பது
உண்மையானாலும், கடின உழைப்புக்கு இது உதவுவதாகவும், மலட்டுத் தன்மையை
நீக்கி ஆண்மையை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் முக்கியக் காரணம்.
இத்தனை நல்ல குணங்கள் கொண்ட கேஃபினுக்கு சில கெட்ட
குணங்களும் உண்டு. இதயத் துடிப்பை அதிகரிக்கும் என்பதால், இதய
நோயாளிகளுக்கு இது உகந்ததல்ல. ரத்தக் கொதிப்பையும் சற்று அதிகப்படுத்தலாம்
என்பதால், வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும் உகந்ததல்ல. வயிற்றில் ஹைட்ரோ
குளோரிக் அமிலம் அதிகமாகச் சுரக்கலாம் என்பதால், குடற்புண் (அல்சர்)
உள்ளவர்களுக்கும் நல்லதல்ல. சிலருக்கு தூக்கத்தையும் கெடுக்கலாம். கோலாவில்
உள்ள டானின்கள் சில வகை புற்றுநோய்களைக்கூட உண்டாக்க வல்லவை என்று ஓர்
ஆராய்ச்சி கூறுகிறது. ஆனாலும், மற்ற ஊக்க மருந்துகள்/பானங்களைவிட கோலா
மிகவும் உயர்ந்தது என்று அமெரிக்காவின் பிரபல மருத்துவ இதழ் 'ஜாமா’
பரிந்துரைக்கிறது.
மீண்டும் கோலா குளிர்பானங்களுக்கு வருவோம். ஒரிஜினல்
கோகோ - கோலாவில் இருந்த கோகோவும் இப்போது இல்லை... கோலாவும் இல்லை என்பதே
உண்மை. கோலாவுக்குப் பதில் அதில் உள்ள கேஃபின் மட்டும் இப்போது தனியாகக்
கலக்கப்படுகிறது. ஒவ்வொரு பாட்டில் கோலாவிலும் சுமார் 40 மில்லி கேஃபின்
இருக்கிறது. இது ஒரு கப் காபியில் இருக்கும் கேஃபினைவிட பாதிக்கும்
குறைவுதான். அப்படியானால் இந்த விஷயத்தில் மட்டுமாவது கோலா பானங்கள்
ஓ.கே.தானே? அதுதான் இல்லை.
இந்தத் தொடரை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு ஓர்
உண்மை இப்போது 'பளிச்’ என்று புரிய ஆரம்பித்திருக்கும். இயற்கையில்
விளையும் அற்புத உணவுகளை நாம் எப்படியெல்லாம் சிதைத்து விஷமாக்கிக்
கொண்டிருக்கிறோம் என்பதுதான் அது.
அரிசிக்குள் உள்ள சர்க்கரை கெடுதல் இல்லை.
கரும்புக்குள் உள்ள சர்க்கரை கெடுதல் இல்லை.
சோளத்துக்குள் இருக்கும் சர்க்கரை கெடுதல் இல்லை.
கோலா கொட்டையில் இருக்கும் கேஃபினும் கெடுதல் இல்லை
இந்த உணவுப் பொருட்களில் உள்ள மற்ற இயற்கைக் கலவைகள்
இவற்றைப் பாதுகாக்கின்றன. சுத்திகரிக்கிறேன் (ரிஃபைனிங்) பேர்வழி என்று
இயற்கை பாதுகாப்பு வளையத்தை நீக்கிவிட்டால், நச்சுத்தன்மைதானே மிஞ்சும்?!
சரி பிறகு
ReplyDelete