Search This Blog

Saturday, September 14, 2013

லியாண்டர் - ஓயாத புயல்

 
இரட்டையர் ஆட்டத்தில் உலகப்புகழ் பெற்ற வீரர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார் லியாண்டர். 16 வயதில் இந்தியாவுக்காக டேவிஸ் கோப்பையில் ஆடியபோது இருந்த அதே வேட்கைதான் அவரை இன்னமும் இயக்கிக் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த volleyer மற்றும் dropshoter என்று டென்னிஸ் நிபுணர்கள் மெச்சுகிறார்கள். தனக்கு எது வரும், வராது என்பதில் ஏற்பட்ட தெளிவுதான் லியாண்டரை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒற்றையர் ஆட்டத்தில் தன்னால் சாதிக்க முடியாது என்று தெரிந்தவுடன் உடனே மிகத் தெளிவாக முடிவெடுத்து இரட்டையர் ஆட்டங்களில் கவனம் செலுத்தினார். 14 கிராண்ட்ஸ்லாம்களை அள்ளிக் கொடுத்துவிட்டது. 
 
மகேஷ் பூபதியுடன் ஆட ஆரம்பித்து, 94 பேருடன் இரட்டையர் ஆட்டங்களில் ஆடியிருக்கிறார். ஆனால், இத்தனை பேரில் அவர் மிகவும் நம்புவது, செக் குடியரசைச் சேர்ந்த 34 வயது ஸ்டெபனிக்கைத்தான். இந்த வருட ஆரம்பத்தில் ஸ்டெபனிக்குக்கு ஓர் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் வேறொருவருடன் ஆட லியாண்டருக்குப் பலத்த ஆலோசனைகள் வந்த போதும், ஸ்டெபனிக் முழு ஆரோக்கியத்துடன் திரும்பும் வரைக்கும் காத்திருந்தார். அந்த நம்பிக்கையை ஸ்டெபனிக்கும் ஏமாற்றவில்லை. என் வாழ்க்கையில் என்ன ஆனாலும் நான் எப்போதும் ஸ்டெபனிக்குடன்தான் ஆடுவேன். இரட்டையர் ஆட்டங்களில் ஈடுபடுவோர் தைரியமாக, செக் குடியரசு வீரர்களுடன் ஆடலாம். அவர்கள் கடும் உழைப்பாளிகள்," என்று உறுதியான நட்புடன் பேசுகிறார் லியாண்டர். இப்போது யு.எஸ் ஓபனை ஜெயித்ததற்காக லியாண்டர்-ஸ்டெபனிக் ஆகிய இருவருக்கும் மூன்று கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன், விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் வென்றாலும் இந்தப் பெருமையை அடைய அவர் பல சர்ச்சைகளைத் தாண்ட வேண்டியிருந்தது.  

லியாண்டர், தன் முதல் கிராண்ட்ஸ்லாமை மகேஷ் பூபதியுடன் இணைந்துதான் ஜெயித்தார். ஆனால் அவருக்கும் பூபதிக்கும் ஏற்பட்ட ஈகோ பிரச்னைகளால் இருவரும் பிரிந்தபோது, டென்னிஸ் ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். அதேசமயம், இருவருடைய திறமையும் தனித்தனியாகப் பளிச்சிட, அந்தப் பிரிவும் ஒரு காரணமாக அமைந்தது. விதவிதமான வெளிநாட்டு வீரர்களுடன் கூட்டணி அமைத்து இருவரும் இரட்டையர் போட்டியில் நிறைய சாதனைகளைச் செய்து விட்டார்கள். மகேஷ் பூபதி இந்த வருடத்துடன் ஓய்வு பெற்றுவிடுவார். ஆனால், லியாண்டர் இன்னமும் 3 வருடங்கள் நிலைத்து ஆடுவார் என்கிற செய்தி மிகவும் நம்பிக்கையூட்டுகிறது. ஸ்டெபனிக்கின் துணை இருக்கும்வரை லியாண்டரால் இரட்டையர் ஆட்டங்களில் இன்னமும் சாதிக்கமுடியும் என்று தெரிகிறது. இதுவரை இந்தியாவுக்காக ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். ‘சரியான உடல் தகுதியோடும், மனரீதியாக உற்சாகமாகவும் இருக்கிறேன். இந்திய அணியில் உள்ள இளைஞர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்கிறேன். நான் ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள அவர்கள்தான் ஊக்கசக்தியாக இருக்கிறார்கள்’ என்கிறார் லியாண்டர். இந்தப் புயலுக்கு ஓய்வே கிடையாது!

No comments:

Post a Comment