Search This Blog

Saturday, September 21, 2013

அருள்வாக்கு - இதை மாற்றினால் போதும்!

ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. சாஸ்திரத்தில் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யைகளையும் படித்தால் கட்டுப்பெட்டிகளாக இருக்க வேண்டியதேயில்லை. அதனால் அவற்றையும் படித்து, மாடர்ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமென்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.
 
நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வளவு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலாசாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. நமக்கென்று காரியத்தில் பின்னி வைத்திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணினால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படிப்பதில் ஸாரம் எது என்று புரிந்துகொண்டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்சரை வளர்க்க முடியும். பிற தேச விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வதற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.
 
இக்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தான் விட்டது. அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் strain பண்ணிக் கொண்டாவது (சிரமப்படுத்திக் கொண்டாவது) சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத்தான் வேண்டும். நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும் அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜனமில்லை.
 
நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம்தான். ‘பணம்தான் பிரதானம்’ என்பதே அந்த அம்சம். பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

No comments:

Post a Comment