நாட்டர்டேம் ஆலயத்தைத் தன் கதைக்களமாக ஆக்கிய பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர்
ஹியூகோ (1802-1885)வின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. உலகிலேயே உயிரோடு
இருக்கும்போதே மிக பிரமாண்டமான பாராட்டைப் பெற்ற எழுத்தாளர் அவர்தான்.
எண்பது வயதை அவர் தொட்டபோது அவரைப் பாராட்டி அரசும் மக்களும் ஒரு
திருவிழாவே நடத்தினார்கள். தம் வீட்டு
ஜன்னலில் உட்கார்ந்து ஊர்வலத்தைப் பார்வையிட்டார் ஹியூகோ. ஊர்வலம் அவரைக்
கடக்க நான்கு மணி நேரம் பிடித்ததாம். பின்னாளில் அவர் இறந்தபோது இறுதி
ஊர்வலத்தில் இருபது
லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். இத்தனைக்கும் ஹியூகோ ஆட்சியாளர்களின் வெறுப்பால், நாட்டை விட்டு ஓடி வேறு
நாடுகளில் வசித்துவிட்டு அரசியல் சூழல் மாறிய பின்னர் இறுதிக் காலத்தில்
பிரான்சுக்குத் திரும்பி
வந்தவர். மன்னராட்சி முறைக்கு எதிராக குடியரசுக் கோட்பாட்டை ஆதரித்த
ஹியூகோ, செனட் தேர்தலில் இருமுறை வென்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர்.
மரண தண்டனை பல நாடுகளில்
ஒழிக்கப்படுவதற்கு அவர் எழுப்பிய குரல் காரணம். வசதியானவராக வாழ்ந்தார் ஹியூகோ. அவர் எழுதும் ஒவ்வொரு நாவலையும்
புத்தகமாகப் பிரசுரிப்பதற்கு முன்பு ஏலம் விடுவது போல, அதிகத் தொகையைத்
தரக்கூடிய பதிப்பாளருக்கே
தருவார். பணக்காரரானாலும் ஏழைகள் மீதே அக்கறையுடன் செயல்பட்டார்.
இறக்கும்போது பல ஆயிரம் பிராங்க்குகளை ஏழைகளுக்காக உயில் எழுதி வைத்தார்.
தம் உடலை சாமான்யர்களின்
கல்லறைத் தோட்டத்தில் புதைக்கச் சொன்னார். துயரங்களை அதிகம் சந்திப்பவர்கள்
கடவுள், மத நம்பிக்கையாளர்களாக மாறுவார்கள் என்று பொதுவாகக்
கருதப்படுகிறது. ஹியூகோ சொந்த வாழ்க்கையில் பல துயரங்களைச் சந்தித்தவர்.
அடுத்தடுத்து அவர் குழந்தைகள் இறந்தன. இளம் மகள் திருமணமாகி கணவருடன்
சுற்றுலா சென்றபோது, ஏரியில் மூழ்க, அவளைக் காப்பாற்ற முயன்ற கணவனும்
மூழ்கி இருவரும் இறந்தனர். தகவல்
தொடர்பு வசதிகள் மிகக் குறைவான அந்தக் காலத்தில் தம் மகள் இறந்த செய்தியை
வேறு ஊரில் இருந்த ஹியூகோ, செய்தித்தாளில் பார்த்துத்தான் தெரிந்து
கொண்டார். இப்படி பல சோக
நிகழ்ச்சிகள் அவர் வாழ்க்கையில் நடந்தபோதும் அவர், ‘மத நம்பிக்கை இல்லாத
சுதந்திரச் சிந்தனையாளன்’ என்று தம்மை அறிவித்துக் கொண்டார். ‘நாட்டர்டேம் கூனன்’ நாவல் அவருடைய முதல் நாவல். இதில் ஒரு நாடோடிப் பெண்,
அவள் காதலிக்கும் இளைஞன், அவளை விரும்பும் பல பணக்கார அதிகாரச் சக்திகள்,
இவர்களிடையில் நடக்கும் சூழ்ச்சிகள், இத்தனைக்கும்
நடுவே மௌனமாக அந்தப் பெண்ணைக் காதலிக்கும் கூனன் என்று பின்னப்பட்ட நாவலில்
இறுதியில் நாடோடிப்பெண் தூக்கிலிடப்படுகிறாள். அதற்கு உத்தரவிட்டவனைக்
கொன்றுவிட்டு கூனன், இறந்த பெண்ணின் உடலுக்குப்
பக்கத்திலேயே நிலவறையில் தன்னையும் புதைத்துக் கொண்டு பட்டினி இருந்து
செத்துப் போகிறான். காதல் - அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருக்கும்
துயரத்தையே தருகிறது
என்பதுதான் நாவலின் அடிநாதம். இந்த நாவல் அனிமேஷன் படமாக இரண்டு பாகங்கள்
வெளியாகியிருக்கிறது. எண்ணற்ற மேடை இசை நாடகங்கள் உருவாகியிருக்கின்றன.
இதில் நாட்டர்டேம் கதீட்ரல் எங்கே வருகிறது? கூனன், தேவாலயத்தில் மணி
அடிக்கும் ஊழியன். நாடோடிப் பெண்ணுக்கு அவன் அடைக்கலம் தருவது
ஆலயத்துக்குள் வைத்துத்தான். கதை
நெடுக பல்வேறு சம்பவங்கள் ஆலயத்திலும் அதைச் சுற்றிலுமே நிகழ்கின்றன. இந்த
நாவலின் பெரும் வெற்றிக்குப் பின்னர்தான் அதுவரை பராமரிப்பில்லாமல்
பாழடைந்து கிடந்த நாட்டர்டேம் ஆலயத்தின் மீது
கவனம் குவிந்து அது புதுப்பிக்கப்பட்டது. நாவலின் இன்னொரு முக்கிய அம்சம் விக்டர் ஹியூகோ தன் காலத்தில் நடக்கும்
மாற்றங்களை உணர்ந்து அவற்றையொட்டி தன் கருத்தைத் தெரிவிப்பதாகும். அச்சு
இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு
வந்து வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.‘அச்சகம் சர்ச்சைக் கொன்றுவிடும்’ என்கிறார் ஹியூகோ. அதாவது
‘அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் பரவினால், மத குருமார்களின் செல்வாக்கு
குறைந்துவிடும். மக்கள் நேரடியாக விஷயங்களை அறிய ஆரம்பிக்கும்
நிலை வந்தால், குருமார்களை நம்பி சார்ந்து இருப்பது தேவையற்றதாகிவிடும்’
என்கிறார். அதேபோல ‘அச்சுக் கலையினால் புத்தகங்கள் பரவப் பரவ, கட்டடக்
கலைக்கான மதிப்பு மாறிவிடும்’ என்கிறார். நாட்டர்டேம் கதீட்ரல் உட்பட
பல்வேறு அந்தக் காலத்தைய கட்டடக் கலைகளைப் பற்றிச் சொல்லும் ஹியூகோ,
மக்களிடையே ஒரு கருத்தைப் பரவச் செய்யும் வடிவமாக அதுவரை கட்டடக் கலை
இருந்தது.
புத்தகங்களின் பெருக்கத்துக்குப் பின் அது மாறி, இனி ஒவ்வொரு புராதனக்
கட்டடமும் நம் ஊரில் இருக்கும் இன்னொரு இடம் என்ற அளவில் மட்டுமே
பார்க்கப்படும் என்ற ஹியூகோவின் கருத்து
இன்று மெய்யாகிவிட்டது. இன்று அந்தக் கட்டடங்கள் எல்லாம் மியூசியமாகவும்
டூரிஸ்ட் இடங்களாகவும் மாறிவிட்டன. வேறுவிதமான இடம் எதுவும் இன்று மக்கள்
மனத்தில் இல்லை.நாட்டர்டேம் ஆலயத்துக்கு 850வது வருடக் கொண்டாட்டம் நடக்கும் இந்தச்
சமயத்தில் அதற்குப் புத்துயிர் கொடுத்த விக்டர் ஹியூகோவையும் சேர்த்தே
கொண்டாட வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறிகள் இல்லை. காரணம் ஹியூகோ மதத்தை
விட்டு வந்துவிட்டவர். ஆனால் ஆலயம் மதத் தலைமையின் முக்கியக் கேந்திரமாக
இருந்து வருகிறது.ஓவியர், அரசியல்வாதி, எழுத்தாளர், இசைப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட
ஹியூகோதான் காப்பிரைட் சட்டங்களுக்கும் முன்னோடியாக வேலை செய்தவர். ‘ஒரு
படைப்பின்
உரிமை இரண்டு பேருடையது. ஒருவன் எழுத்தாளன், இன்னொருவர் மக்கள். மக்களின்
குழப்பமான உணர்வுகளைத் தான் எழுத்தாளன் படைப்பாக்குகிறான். அதன்பின் அதை
மக்கள்
படித்து தமதாக்கிக் கொள்கிறார்கள். எனவே இருவரில் ஒருவர் இறந்தால்,
மற்றவருக்கே காப்பிரைட் உரிமை செல்ல வேண்டும்’ என்று சொன்னவர் ஹியூகோ.
மூத்த தமிழ் வாசகர்களுக்கு ஹியூகோவின் இன்னொரு படைப்பு பரிச்சயமானது.
அதுதான் ‘லே மிசரபிள்’ எனப்படும் ‘ஏழை படும் பாடு’. சுத்தானந்த பாரதியின்
மொழிபெயர்ப்பில் வெளியான இந்த நாவல்
படமாக்கப்பட்டது. அதில் இன்ஸ்பெக்டர் ஜாவர் என்ற பாத்திரத்தில் நடித்துப்
புகழ் பெற்றதால்தான் சீதாராமன், ஜாவர் சீதாராமன் ஆனார்.
No comments:
Post a Comment