சக்தி ஜாஸ்தியாக ஆக ஆனந்தம் ஜாஸ்தி என்பதால் அந்த சக்தியினாலேயே ஆனந்தம்
உண்டாகிறது என்று அர்த்தமில்லை. சக்திக்கும் ஆனந்தத்துக்கும் நேர்
சம்பந்தமில்லை. ஒருத்தருக்குத் தம்மைவிடக் குறைந்த
சக்தியுள்ளவர் மீது தம்முடைய சக்தியினால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
அவரைக் கட்டுப்படுத்த முடிகிறது என்பதிலே ஏற்படும் ஆனந்தம் தப்பான
அஹங்காரத்தில் ஏற்படுவது; அதை முறையான ஆனந்தம்
என்று சொல்ல முடியாது. பின்னே, சக்தி ஜாஸ்தியானால் ஆனந்தம் எப்படி ஜாஸ்தி
ஆகிறது என்றால், அப்போது நம்மை விடவும் அதிக சக்தியோடு இருந்து கொண்டு
நம்மைக் கட்டுப்படுத்துபவர்கள் குறைச்சலாகிக் கொண்டு வருகிறார்கள்.
ஆகையால், நாம்
இன்னொருத்தரை ஆள முடிகிறது என்பதை விட, நமக்கு மற்றவர்களுடைய ஆளுகையின்
கட்டுப்பாடு குறைந்து, நம்முடைய சுதந்திரத்தின் எல்லை ஜாஸ்தியாகிறது
என்பதாலேயே ஆனந்தம் ஏற்படுகிறது. ஒரு
குமாஸ்தா ஆபீஸராகிறாரென்றால், அவர் நல்லவராயிருந்தால், தாம் பிறத்தியார்
மீது ‘தாட் பூட்’ செய்ய முடியுமென்ற ஆனந்தம் அவருக்கு ஏற்படுவதில்லை.
ஆனாலும் தமக்கு
இப்போது ஆபீஸரின் கட்டுப்பாடு இல்லை, சுதந்திரமாகச் சில காரியம் செய்யலாம்.
முடிவுகள் எடுக்கலாம் என்பதில் ஆனந்தம் உண்டாகத்தான் செய்யும்.
ஆபீஸர் மாதிரியான பெரிய பொஸிஷனில் சில பேர் இருக்கிறார்கள். ஆனால்,
இவர்களுக்கு குமாஸ்தாக்கள் கட்டுப்பட்டிருப்பதைவிட அதிகமாக இவர்கள்
இவர்களுக்கும் மேலதிகாரிகளிடமோ, அல்லது
எம்.எல்.ஏ. போன்றவர்களிடமோ கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று இருக்கும்போது,
‘நம்மைவிட அந்த குமாஸ்தா எவ்வளவோ தேவலை; அவனுக்கு இருக்கிற ‘ஃப்ரீடம்’
நமக்கு
இல்லை’ என்று வருத்தப் படுகிறார்கள். ஆகையால் சக்தியை விட ஃப்ரீடம்தான்
ஆனந்தம் தருவது என்று தெரிகிறது.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment