Search This Blog

Monday, September 02, 2013

உலகை மாற்றிய உன்னத ஆசிரியர்கள் !

உலக சிந்தனைப்போக்கையே மாற்றி நல்வழிகாட்டி நெறிப்படுத்தும் அர்த்தமுள்ள பணியைச் செய்பவரே... நல்லாசிரியர். அப்படி பெரிய சக்தியாக விளங்கி, சரித்திரத்தில் இடம் பிடித்த பலரை நாம் நினைவுகூர்வது நன்று.இன்றைய உலகம் அறிவியல் தொழில்நுட்ப மயமாகிவிட்டது. இந்த ஒப்பற்ற நிலையை அடைய, உலகம் பலருக்குக் கடன்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள், தங்கள் மாணவர் களைப் புதிய பாதைகளின் வழி நடக்க வழிகாட்டிய ஆசிரியர்களே!கிரேக்கத்திலும் இந்தியத் தீபகற்பத்திலும் அரேபிய மண்ணிலுமாகத் துளிர்விட்ட பள்ளிகளை வழிநடத்தியவர்கள் முற்காலப் பேராசான்கள். முதன்முதலில் அறிவியல் ஆய்வுகளைத் தேடல் வழியே ஏற்படுத்தி, எதையும் சந்தேகி, உற்று நோக்கு, ஆய்ந்து அறிந்திடு எனும் பாதையை மாணவர்களுக்கு வழங்கியவர், அனாக்ஸிமாண்டர். இவர் வாழ்ந்தது கி.மு.500-களில். இவரது மாணாக்கர்களை 'சோஃபிஸ்ட்டுகள்’ என்பார்கள். இவர்களில் இரண்டு நல்லாசிரியர்கள் உண்டு.
 
யூக்லிட் போன்ற பேரறிஞர்களின் ஒப்பற்ற ஆசிரியராக விளங்கிய பித்தாகரஸ், அனாக்ஸிமாண்டரின் மாணவரே. பித்தாகரஸ் தனது கல்விக்கூடத்தில் கணிதமும் தர்க்கமும் ஒரே நேரத்தில் விளைந்திட வித்திட்டவர். இவரது மாணவர்கள் 'பித்தாகரவாதிகள்’ எனப்பட்டார்கள். பித்தாகரஸ் இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பித்தாகரவாதிகள் அவரின் கல்விச் சுடரை அணையாமல் பின் தொடர்ந்தார்கள்.

அதே காலத்தில்தான் இந்திய மண்ணில் ஆபஸ்தம்பர், பல அறிஞர்களின் ஆதர்ச ஆசானாக விளங்கினார். போதாயனர் முதல் பதஞ்சலி முனிவர் வரை பலருக்கு ஆபஸ்தம்பரே ஆசிரியர். இந்தியக் கல்விப் பாரம்பரியத்தின் நக்கீரர் பரம்பரை தமிழகத்தில் பூத்ததும் இதே காலகட்டத்தில்தான்.

கிரேக்கத்தில் சாக்ரடீஸ் (இவர் அனாக்ஸிமாண்டரின் மாணவர்) வழியே பிளாட்டோவைக் கொடுத்தது. 'வரைபடக் கணித சாம்ராஜ்யத்தின் முதல் சக்கரவர்த்தி’ என்று தனது நூலில் ஆசானான யூகலிட்டைப் புகழ்கிறார்.  மாமன்னர்களுக்கு அரசாட்சி குறித்தும் குறிப்பாக, குடியாட்சி (ஸிமீஜீuதீறீவீநீ) குறித்து முதலில் அறிமுகப்படுத்தி, புதிய பாதைக்கு வித்திட்டவர் பிளாட்டோ.

அதே காலத்தில், சீனத்தில் பூத்த செம்மலர் கன்ஃபூஷியஸ். சீனா இன்று கன்ஃபூஷியஸ் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினமாக அனுசரிக்கிறது. 'வாழ்வின் அர்த்தம் பிறருக்கு நீ என்ன செய்கிறாய் என்பதில்தான் வெளிப்படும்’ எனத் தனது மாணவர்களுக்குப் போதித்தார் கன்ஃபூஷியஸ். தனது குடில்களில் லட்சக்கணக்கான பௌத்த நெறியாளர்களை உருவாக்கி, மாபெரும் சக்தியாக விளங்கியவர். காகிதம், எழுதும் மை, தீக்குச்சி என உலகில் அடிப்படைக் கண்டுபிடிப்புகள் பல நிகழ்த்தியவர்கள் கன்ஃபூஷியஸ்வாதிகளே.


அரேபியர்களின் இந்தியப் படையெடுப்பின் வழியே அங்கு ஏற்பட்ட பிரமாண்டக் கல்வி எழுச்சியின் நாயகர், அல்கோரிஸ்மி. 'அல்ஜீப்ரா’ கணிதமுறை உட்பட பலவற்றை சாதித்தவர்கள் அல்கோரிஸ்மியின் மாணவர்கள். இந்திய எண்முறையை (பிரம்ம குப்தரின் பூஜ்யம் உள்பட) உலகுக்கு அறிமுகம் செய்தவர் அல்கோரிஸ்மி. வணிகர்களின் வாழ்முறைக்கு ஒப்பற்ற ஆசானாக விளங்கிய அவரது நினைவாக, இன்று ஏழு நாடுகள் ஆசிரியர் தினத்தை அனுசரிக்கின்றன.

தட்சசீலப் பல்கலைக்கழகம் நாளந்தாவுக்கு இணையானது என்றாலும், அரிஸ்டாட்டில் எனும் கிரேக்க ஆசானின் வழிமுறைக்கு நிகராக அவை இருந்தன. லீசியம் எனும் உலகின் முதல் (சிறுவர்களுக்கான) பள்ளிகளைத் தொடங்கியவர் அரிஸ்டாட்டில். பிரம்மாண்ட அலெக்ஸாண்ட்ரியா நூலகம் அவரது பங்களிப்பு. மகா அலெக்ஸாண்டர் உள்பட பல சாதனையாளர்களின் ஆசிரியர் அவர். இன்றும் அறிவியலின் பல துறைகளுக்குப் பெயரிட்ட பெருமை அவருக்கு உண்டு.

தட்சசீலம் சாணக்கியரையும், நாளந்தா ஆரியபட்டரையும் உருவாக்கி, பேராசான்களாக நம் மண்ணுக்கு வழங்கியது அதே காலகட்டத்தில்தான்.மருத்துவத் துறையின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த சுஸ்ருதா மிளிர்ந்ததும் அதே காலகட்டத்தில்தான்.

வால்டேர் எனும் மாபெரும் தத்துவ அறிஞரின் வழியே, ஜான் ஜாக்குஸ் ரூசோ ஃப்ரான்ஸில் ஆசிரியராகப் பரிணமித்த காலத்துக்குள் இப்போது நுழைகிறோம். வெகுஜனக் கல்வியின் பிதாமகனாக நாம் இன்று ரூசோவை போற்றுகிறோம். ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர் ரூசோ. அனைவருக்கும் சம உரிமை, அனைவருக்கும் கல்வி என்பதை சாதித்தனர் ரூசோவின் மாணவர்கள்.

நவீனக் காலகட்டத்தில் கல்வியை மேம்பாடு அடையவைத்த ஜான் டூவி ஒரு முக்கியமான பேராசான். டூவி இல்லையேல் இன்றைய பாடவாரியாக நடக்கும் பள்ளிக் கல்வி முறையே இல்லை. இன்றைய ஆசிரியர்கள் எல்லோருமே ஒருவிதத்தில் டூவியின் மாணாக்கரே.

குழந்தைகளின் பார்வையில் கல்வியை அணுகிய மரியா மாண்டிசோரியை மறக்கவே கூடாது. உலகில் கோடிக்கணக்கான குழந்தைகளின் ஒப்பற்றத் தாய் அவர். அவரது வழிகாட்டுதலில் அவரது மாணவர்களாக இருந்தவர்களே இன்று  விளையாட்டுமுறைக் கல்வி, செயல்முறைக் கல்வி என அனைத்தையுமே சாதித்தார்கள்.

சி.வி.ராமன் முதல் அப்துல் கலாம் வரை இந்திய அறிவியலாளர்களை உருவாக்கிய டாக்டர் மஹேந்திரலால் சர்க்கார், ஒரு நியூட்டன் உருவாகிட உதவிய அவரது பள்ளித் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் பாரோ என உலகெங்கும் பெரிய அலைகளை ஏற்படுத்திய ஆசான்களே, உலக சரித்திரத்தின் திருப்புமுனைகளை சாதித்தவர்கள்.

இந்த ஆசான்களும் அவர்களின் மாணவர்களும் நமக்கு உணர்த்துவது என்ன? நாம் நமது ஆசிரியரைப் போற்றி அவரது அறிவை உள்வாங்க வேண்டும். அதே வேளை, அவரைக் கடந்து அறிவை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும். வரலாறு ஓர் ஆசானாக நமக்கு சொல்லித்தரும் பாடம் அதுதான்!
 

No comments:

Post a Comment