தமிழ் சினிமாக்காரர்களுக்கு எந்த ஒரு விஷயம் குறித்தும் ஒரு கருத்து
இருக்கிறது. ஆனால், அதை தைரியமாக வெளியில் சொல்வதற்குத் தயங்குகிறார்கள்.
அந்த வரிசையில்
லேட்டஸ்ட் ‘தலைவா’ பட விவகாரம். ‘தலைவா’ படத்தின் காட்சிகளில் 400க்கும்
அதிகமான ஆங்கில, ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன; ஹீரோ, சட்டத்தைத்
தன் கையில்
எடுத்துக் கொள்கிறார்; படத்துக்கு சென்சார் போர்டும் யூ சர்டிஃபிகேட்
கொடுத்திருந்தாலும், ‘அதிக அளவில் வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன,’
என்று காரணம் சொல்லி, படத்துக்கு கேளிக்கை வரி
விலக்கு அளிக்க அரசு மறுத்துவிட்டது. இதற்கு முன்னால், உதயநிதி ஸ்டாலினின்
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படமும், அவர் தயாரித்த ‘ஏழாம் அறிவு’ படமும் வரி
விலக்கு பெறுவதில்
சிக்கல் ஏற்பட்டதை மறக்க முடியாது. இத்தகைய சூழலில், ஒரு படத்துக்கு
வரிவிலக்கு பெற்றே தீர வேண்டும் என்று கட்டாயமா என்ன? வரி விலக்கு பெறாமல்
ரிலீஸ் செய்ய முடியாதா என்ன? வரிவிலக்கு
பெறுவதால் யாருக்கு லாபம்? வரிவிலக்கு பெறுவதற்கான விதிமுறைகளைப்
பின்பற்றுவதில் அரசியல் நுழைவது ஏன்? போன்ற கேள்விகள் ஒரு பக்கமும்,
சினிமாக்களுக்கு எதற்காக வரிவிலக்கு
அளிக்க வேண்டும்? கேளிக்கை வரி மூலமாகக் கிடைக்கும் வருவாயை அரசாங்கம்
எதற்காக இழக்க வேண்டும்? என்றும் கேள்விகள் எழுகின்றன. அவை அனைத்தையும்
குறித்த
கலக்கலான அலசல் இது:
1980களில் தமிழ்நாடு முழுவதிலுமாக 2400 சினிமா தியேட்டர்கள் இருந்தன.
அவற்றில் சுமார் 20 லட்சம் இருக்கைகள் இருந்தன. ஆனால் இன்று
தியேட்டர்களின் எண்ணிக்கை
எண்ணூறாகச் சரிந்து விட்டது. ஒரு தியேட்டரின் சராசரி இருக்கைகள்
எண்ணிக்கையும் 400 ஆகிவிட்டது. அதாவது மொத்த இருக்கைகள் எண்ணிக்கை சுமார்
மூணு லட்சத்து 20 ஆயிரம்தான். பெரிய
ஹீரோக்களின், புதுப்பட ரிலீசை ஒட்டிய ஒரு சிலநாட்களில் மட்டுமே
தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகின்றன. பொதுவாக, நகர்ப்புறங்களில் சில தியேட்டர்களில் மட்டுமே சராசரியாக 50 முதல்
65 சதவிகிதம்வரை எல்லா நாட்களிலும் இருக்கைகள் நிறைகின்றன. மற்றபடி,
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் சராசரியாக 25 சதவிகித
இருக்கைகளே நிரம்புகின்றன என்று புள்ளி விவரங்கள் சோக கீதம் இசைக்கின்றன.
போதாக்குறைக்கு தமிழ் சினிமாவை, திருட்டு வி.சி.டி. என்ற பிரம்ம ராட்சசன்
கபளீகரம் செய்து கொண்டிருக்கிறான். எனவே, படம் ரிலீசாகி, எவ்வளவு
சீக்கிரமாக அதிகபட்ச வசூலைப் பார்க்கலாம் என்று யோசிக்கும்
சினிமாக்காரர்களின் நோக்கத்தையும் குறை சொல்ல முடியாது. எனவே, குறுகிய
காலத்தில் அதிகபட்ச வசூலுக்கு அரசாங்கம்
கொடுக்கும் வரிவிலக்கு கைகொடுக்கிறது என்பதால் சினிமாக்காரர்கள் வரி
விலக்குக்காக அரசாங்கத்தின் வாசலைத் தட்டி விட்டுக் காத்திருக்க வேண்டி
உள்ளது.தியேட்டர்களில் 10 சதவிகித இருக்கைகளுக்கு டிக்கெட் கட்டணம் பத்து
ரூபாய்தான் எனவும், மீதி 90% இருக்கைகளுக்கு, உணவகம் கொண்ட தியேட்டர்
வளாகங்களில் 120 ரூபாய் என்றும், மற்ற தியேட்டர்களில்
அதிக பட்சக் கட்டணம் 95 ரூபாய் என்றும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது.
இந்தக் கட்டணத்தில் அரசாங்கம் விதிக்கும் 30% கேளிக்கை வரியும் அடங்கும்.
படங்களுக்கு வரிவிலக்கு
கிடைக்கும்போது, இந்த டிக்கெட் கட்டணம் அப்படியே முழுசாக தியேட்டர்காரர்,
வினியோகஸ்தர் என முழுசாக சினிமாக்காரர்களுக்கே போய்ச் சேரும். இல்லையெனில்,
வரி போக, மீதிதான் அவர்கள்
கைக்குக் கிடைக்கும். அதனால்தான், வரிவிலக்கு என்பது கணிசமான உபரி வருமானம்
என்று அதை எப்படியும் பெற்றுவிட சினிமா உலகத்தினர் நினைக்கிறார்கள். கடந்த ஆட்சியின்போது தமிழில் சினிமாவுக்குப் பெயர் வைத்தால், வரி விலக்கு
என்று கலைஞர் அறிவித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஜெயலலிதா, அதை
மாற்றி, புதிய விதிமுறைகளை
அறிவித்தார்.
அந்தக் காலத்தில் தேசப்பற்று ஊட்டும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு
எடுக்கப்பட்ட சமூகப் படங்களுக்கு அரசாங்கம் கேளிக்கை வரியிலிருந்து
விதிவிலக்கு அளித்து அதன்மூலம் அதிக
அளவில் மக்கள் வந்து அந்தப் படங்களைப் பார்த்துப் பயன் பெற்றார்கள்.
ஆனால், இன்று வருகிற படங்களில் வியாபாரம்தானே நோக்கமாக இருக்கிறது?
சமூகத்துக்கு நல்ல கருத்துகளை
எடுத்துச் சொல்லும் படங்களை எத்தனை பேர் எடுக்கிறார்கள்? அப்படி
இருக்கும்போது, அரசாங்கம் எதற்காக சினிமாக்களுக்கு வரிவிலக்கு அளிக்க
வேண்டும் என்பதுதான்
கேள்வி.
உயிர் காக்கும் மருந்துகள், உணவுப் பொருட்கள், இதர அத்தியாவசியப்
பொருட்களுக்குக் கூட முழுமையாக இங்கே வரி விலக்கு கிடையாது. அப்படி
இருக்கும்போது, கோடிக்கணக்கான
முதலீடு செய்து, லாப நோக்கத்தோடு எடுக்கப்படும் சினிமாக்களுக்கு எதற்கு வரி
விலக்கு? பெட்ரோல் விலை உயரும்போது, அதன் பாதிப்பு மக்களைப் பாதிக்காமல்
இருக்க, விற்பனை வரியைக்
குறையுங்கள் என்ற ஆலோசனை, அரசாங்கத்தின் காதில் விழவில்லை; ஆனால்,
சினிமாவுக்கு வரிவிலக்கு கொடுத்து, அதன் மூலமாக ஆண்டு தோறும் கோடிக்கணக்கான
வரிவசூலை அரசாங்கம் இழந்து
கொண்டிருக்கிறது. இது நியாயமா? தி.மு.க. ஆனாலும் சரி, அ.தி.மு.க. ஆனாலும்
சரி, சினிமாக்காரர்கள் என்றால் ரொம்பவே கரிசனம் காட்டுகிறார்கள்.
அவர்களுக்கு எதற்காக
சிறப்புச் சலுகை காட்ட வேண்டும்? இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சினிமா தியேட்டர்களில்
கேளிக்கை வரியின் மூலமாகக் கிடைக்கும் தொகை, முழுவதுமாக உள்ளாட்சி
அமைப்புகளுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.
அரசாங்கத்தின் வரிவிலக்குக் கொள்கை காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளின்
வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசு ஈடு
செய்வதும் இல்லை. எனவே, தமிழக அரசாங்கம் உடனடியாக இந்த
வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment