Search This Blog

Monday, September 02, 2013

இந்திய ரூபாய் மதிப்பு... சரிய வைத்த சக்திகள்!

கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.90 வரை குறைந்து, மத்திய அரசாங்கத்திற்கு மிகப் பெரும் கலக்கத்தை உருவாக்கியது. இன்னும் சில நாட்களில் ரூபாய் மதிப்பு 70-ஆக குறையும் என எல்லோரும் நடுங்கிய வேளையில், ரூபாய் மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருப்பது சற்று நிம்மதி அளிக்கும் லேட்டஸ்ட் தகவல்.இந்திய ரூபாய் மதிப்பு மட்டுமல்ல, உலக அளவில் பல நாடுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாணய மதிப்பு நடப்பாண்டில் 23 சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் 20.7 சதவிகிதம் வீழ்ச்சியுடன் இந்தியா உள்ளது. பிரேசில் 17.6 சதவிகிதம் குறைந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், சீனா மட்டும் 2 சதவிகிதம் முன்னேற்றத்துடன் ஏறுமுகத்தில் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.

இந்திய ரூபாய் மதிப்பு ஏன் இந்த அளவுக்கு சரிந்தது? அதற்கு என்னதான் காரணம்?

''ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததற்கு பல காரணங்கள். அதில் முக்கியமானது, அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதால், இந்தியாவில் முதலீடாகி இருந்த அமெரிக்க டாலர் மீண்டும் சொந்த நாட்டுக்கே சென்றது. இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயர்ந்தது.

 

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.24,000 கோடி!) முதலீடு இந்தியாவைவிட்டு வெளியேறி இருக்கிறது. இதிலும் குறிப்பாக, கடந்த புதன், வியாழக்கிழமைகளில் மட்டும் 400 மில்லியன் டாலர் (ரூ.2,400 கோடி) வெளியேறி இருக்கிறது. ரூபாயின் மதிப்பு சரிவினால் இந்திய பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.தங்கம், கச்சா எண்ணெய் போன்றவை அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததன் காரணமாகவும் டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகமாக இருப்பதினால் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 நாடுகளுடன் இந்தியாவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இதில் முதல் பத்து இடத்தில் சீனா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன.

ரூபாய் மதிப்பு குறைந்து வருவதற்கு நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்புதான் முக்கிய காரணம். இந்த பற்றாக்குறை அதிகரிக்க, அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதே என்று நினைத்த மத்திய அரசு, தங்கம் இறக்குமதி செய்ய பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, தங்க இறக்குமதி வரியை நடப்பு ஆண்டில் 2-லிருந்து 10 சதவிகிதமாக அதிகரித்தது. தங்க நாணய விற்பனைக்கும் தடை விதித்தது. அப்படியும் தங்க விற்பனைக் குறையவில்லை.  

 இந்த வருடம் 18 மின் திட்டங்களைத் தொடங்க ரூ.83,772 கோடி அனுமதி அளித்து மத்திய முதலீட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 1,83,000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மத்திய முதலீட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. நாட்டின் 9 உள்கட்டமைப்புத் திட்டங்களும் இதில் அடங்கும். இந்த 9 திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.92,514 கோடியாகும் என்று கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி செய்தியாளர்களிடம் சொன்னார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். புதிய முதலீடுகள் வருவதன் மூலம் இனி ரூபாய் மதிப்பு வலுவடை யும்.

மேலும், இந்திய பொருளாதாரத்தை சரிசெய்ய, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப் பின் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த மத்திய அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை நோக்கிப் போவதால் வேறு வழியின்றி அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. சமையல் கேஸ் விலையையும் இனி மாதந்தோறும் சிலிண்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இனி வெளிமார்க்கெட்டில் டாலர் வாங்கத் தேவையில்லை என்று சொல்லி இருக்கிறது மத்திய அரசாங்கம். குறிப்பிட்ட சில அரசு வங்கிகள் மூலம் டாலர் வாங்குவதால்  சந்தையில் டாலருக்கான தேவை அதிகரிப்பதை தடுக்க  முயற்சித்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

தவிர, மக்களிடம் இருக்கும் தங்கத்தை மீண்டும் வங்கிகளே வாங்க முடிவு செய்திருப்பதால் இனி தங்கம் இறக்குமதி ஆவது குறையும் என எதிர்பார்க்கலாம். மேலும், எம்.சி.எக்ஸ். கமாடிட்டி சந்தையில் தங்கத்திற்கான மார்ஜின் 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனாலும் தங்கம் அதிக அளவில் டிரேட் ஆவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



''கடந்த வாரம் ரூபாயின் மதிப்பு 68.90 ஆக சரிந்தாலும், இனி அந்த அளவுக்கு குறைவது கடினம். மத்திய அரசு ரூபாயின் மதிப்பை உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தங்கம், ஆயில் இறக்குமதி தவிர எலெக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதியும் அதிகமாக இருப்பதால், அந்த இறக்குமதியைக் குறைக்க, எலெக்ட்ரானிக் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளது.

ரூபாயின் மதிப்பு 66-க்கு மேல் இருக்கும் நிலையில், அடுத்த சப்போர்ட் லெவல் 61 ரூபாய்.  ரெசிஸ்டன்ஸ் லெவல் 68 ரூபாய்''

No comments:

Post a Comment