Search This Blog

Friday, September 27, 2013

யுவ்ராஜ் சிங் - தினேஷ் கார்த்திக்


‘இந்த வருட சாம்பியன்ஸ் லீக் இந்தியாவில் நடந்தும், சி.எஸ்.கே. இடம் பெற்றும், ஏன் சென்னையில் ஒரு மேட்ச்கூட நடைபெறவில்லை’ என்று சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். ஐ.பி.எல்.-லின் போது, இலங்கை வீரர்கள் ஆடக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டதால் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இப்போது சாம்பியன் லீகில் இலங்கையிலிருந்து ஓர் அணி வந்திருக்கிறது. மற்ற அணிகளிலும் இலங்கை வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் மீண்டுமொரு சர்ச்சை வராமல் இருக்கவே சென்னை தவிர்க்கப்பட்டுள்ளது. அடுத்த வருட ஐ.பி.எல்.-லிலும் இலங்கை வீரர்கள் தொடர்பான சர்ச்சை தொடருமா என்றால் சந்தேகம்தான். காரணம், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஐ.பி.எல். இந்தியாவில் நடக்காமல் போகலாம். தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய நாடுகளை மனத்தில் வைத்து, புதிய செயல்திட்டத்துக்குத் தயாராகி வருகிறது பி.சி.சி.ஐ. 

யுவ்ராஜ் சிங் இந்திய அணிக்குத் தேர்வாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து ஏழு ஒருநாள் ஆட்டங்களில் ஆடுகிறது. இதற்கான இந்திய அணியின் தேர்வு 30ஆம் தேதி நடக்கிறது.  மேற்கு இந்தியத் தீவுகள் ‘ஏ’ அணிக்கு எதிராக யுவ்ராஜ் சிங் அற்புதமாக ஆடி தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துவிட்டார். இந்திய அணி, கடைசியாக ஆடிய முக்கியமான ஒருநாள் போட்டிகள் - இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி, மேற்கு இந்தியத் தீவில் நடந்த முத்தரப்புத் தொடர். இந்த இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றது. இரண்டு இறுதிப் போட்டிகளிலும் கிட்டத்தட்ட ஒரே அணிதான் ஆடியது. ஒரே ஒரு பௌலர்தான் வித்தியாசம். இந்த நிலையில் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்காது. இரண்டு முக்கியமான வெற்றிகளைக் கொடுத்த அணியை மீண்டும் தொடரவே தேர்வுக்குழு விரும்பும். அதையும் தாண்டி யுவ்ராஜ் சிங்கைத் தேர்வு செய்தால் அவரை எங்கு பொருத்துவார்கள்? 

இந்திய அணியில் - கோலி, தினேஷ் கார்த்திக், ரைனா, தோனி, ஜடேஜா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்கள் தவிர்த்த இதர பேட்ஸ்மேன்கள். இவர்களில் தினேஷ் கார்த்திக்கின் இடம் மட்டுமே இப்போது ஆபத்தான நிலையில் உள்ளது. யுவ்ராஜ் இந்திய அணிக்குள் நுழைந்தால் அதில் 100 சதவிகிதம் பாதிக்கப்படக் கூடியவர் தினேஷ் கார்த்திக் மட்டுமே. மற்ற 4 (மிடில் ஆர்டர்) பேட்ஸ் மேன்களும் இந்திய ஒருநாள் அணியின் தூண்கள். அவர்கள்மீது இன்னும் கொஞ்ச காலத்துக்குக் கைவைக்க முடியாது. யுவ்ராஜ் அணிக்குள் வருவது தோனிக்கும் கூடுதல் சந்தோஷத்தைத் தரும். யுவ்ராஜ் ஒரு ஆல்ரவுண்டர் என்பது மட்டுமில்லாமல் மேட்ச் வின்னரும்கூட. யுவ்ராஜைத் தாண்டவேண்டு மென்றால், தினேஷ் கார்த்திக் இன்னும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.




No comments:

Post a Comment